தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றையவை


ஒரு நல்ல மாட்டுப் பண்ணையை அமைக்க முதல் படி நல்ல தரமான பசுக்களை தேர்ந்தெடுப்பது. என்ன சாதி பசுக்கள் வாங்க வேண்டும் என்பதற்கு பல பரிமாணங்கள் இருப்பதால் இந்த சாதியை வாங்க வேண்டும் என்று பொதுவாக கூற இயலாது. பசுக்களை தேர்வு செய்வதற்கு முன்னால் சில அடிப்படை தகவல்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நமது பண்ணைக்கு சரியான பசு வகையை தேர்ந்தெடுக்க முதல் கூறு - அவை உள்ளூர் மாடுகளா என்பது. உள்ளூர் மாடுகள் அல்லது நாட்டு மாடுகள் என்றால் மனிதனுடைய கற்பனை எல்லைகளை வைத்துக் கொண்டு இந்திய மாடு, ஈரான் மாடு என்று பிரிக்காதீர்கள். நமது பண்ணை அமையப்போகும் இடத்திற்கு அருகில் உள்ள இரகமா என்று பார்க்க வேண்டும். உதாரணமாக, தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மலேசிய மாடுகள் பஞ்சாப் மாடுகளைவிட அருகில் உள்ள இரகமாகும். திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆந்திர ஓங்கோல் இரகம் மதுரை புலிகுளம் மாடுகளை விட அருகில் உள்ள இரகமாகும். அதேபோல், உள்ளூர் சந்தையில் வாங்குவதால் அவை உள்ளூர் மாடுகளாக ஆகாது. சந்தைகளில் எல்லா விதமான பசுக்களும் விற்கப்படலாம்.

இரண்டாவது கூறு, தட்ப வெப்ப நிலை. நாம் தேர்வு செய்யும் இரகம் நமது தட்ப வெப்ப நிலைக்கு உகந்ததா என்று ஆராய்வது. தமிழ் நாட்டிலேயே பல விதமான தட்ப வெப்ப பிரதேசங்கள் உள்ளன. தேனி, கம்பம் முதலிய பகுதிகளுக்கும் திருவண்ணாமலை, வேலூர் போன்ற பகுதிகளுக்கும் இடையே வெப்பத்திலும், மழை அளவிலும், மழை பெய்யும் மாதங்களிலும் மாற்றம் உள்ளது. கொடைக்கானல், குன்னூர், ஊட்டி ஆகியவை மலைப் பிரதேசங்களாதலால் அவற்றின் வெப்ப நிலை குறைந்தே இருக்கும். கடலுக்கு அருகில் உள்ள நாகப்பட்டினம், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக காணப்படும். இந்த விதமான வித்தியாசங்களினால் தமிழ் நாட்டிலேயே பல விதமான இரகங்களை இயற்கை நமக்கு அளித்துள்ளது.

மூன்றாவது கூறு, நமது பண்ணையின் வடிவமைப்பு. நாம் வெறும் மாட்டுப் பண்ணை மட்டும் அமைக்கப் போகிறோமா அல்லது விவசாயமும் செய்யப் போகிறோமா?, மாடுகள் தன்னிச்சையாக மேய்வதற்கு இட வசதி உள்ளதா அல்லது அவை கட்டுத் தறியிலேயே இருக்குமா?, நமது பண்ணை, நுகர்வோர் சந்தைக்கு அருகில் உள்ளதா, இல்லையா?, நாம் பசு உற்பத்தி செய்யப்போகிறோமா அல்லது காளைகள் உற்பத்தி செய்யப் போகிறோமா? என்ற கூறுகள். உதாரணமாக, காங்கேயம், மணப்பாறை இரகங்களில் காளைகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

இந்த மூன்று கூறுகளின் வாயிலாக நாம் தேர்ந்தெடுக்க என்ன இரகங்கள் உள்ளன என்று பார்ப்போம். தமிழ் நாட்டில், தெற்கே புலிகுளம், தென்பாண்டி இரகங்கள். பொதுவாக இப்போது இடம் பெயரும் மந்தையாக (கிடை மாடுகளாக) மட்டுமே சில பேரிடம் உள்ளது. மேற்கே, காங்கேயம் மாடுகள் கோவை மாவட்டத்தை சேர்ந்தது. பொதுவாக வண்டி காளைகளுக்கு சிறப்பு பெற்றது. நல்ல வறட்சி தாங்கும். பவானி, கிருஷ்ணகிரி, ஈரோடு பகுதியில் பர்கூர் அதனுடைய சிகப்பு வெள்ளை கலந்த வர்ணத்தின் மூலம் அடையாளம் காணலாம். இந்த இரகம் மலைப்பகுதிகளுக்கும் ஏற்றது. நல்ல வறட்சியிலும் மேயக்கூடியது. மேலும் சேலம், மேட்டூர், தருமபுரி பகுதியில் அருகி வரும் பாலமலை, ஆலம்பாடி இரகங்கள். சேலம், நாமக்கல் பகுதியில் உள்ள மலைகளில் காங்கேயத்தை விட சிறிய உடலை உடைய கொல்லி மலை இரகம் ஆகியவை மேற்கு தமிழ் நாட்டை சேர்ந்தவை. நடு நாடு என்று அழைக்கப்படும் திருச்சி, தஞ்சாவூர் பகுதியில் உம்பளச்சேரி, மணப்பாறை இரகங்கள் பெயர் பெற்றவை. வறண்ட தொண்டை மண்டலத்தில், தொண்டை மாடு மற்றும் புங்கனூர். இவை இரண்டும் நல்ல வறட்சியை தாங்கும். தொண்டைமாடு சிவப்பு, கருப்பு, வெள்ளை மற்றும் இவை கலந்தும் காணப்படலாம். ஆனால் புங்கனூர் மாடுகள் வெள்ளை மற்றும் சாம்பல் நிற்த்தில் மட்டுமே இருக்கும். இவை, மிகச் சிறிய கால்களை உடையது. வால் தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும். பசுக்களில் 8% கொழுப்பு உள்ள பால் புங்கனூரின் சிறப்பு. இவை எல்லா இரகங்களும் ஒரு நாளைக்கு சுமார் 3-5 லிட்டர் வரை பால் கறக்கும். ஒரு ஈற்றில் சுமார் 1000 லிட்டர் வரை கறக்கும்.

இந்திய அளவில் நோக்கினால், பால் மாடுகளில் வட இந்திய இரகங்கள் சிகப்பு சிந்தி, சாஹிவால், தார்பார்க்கர், கிர் ஆகியவை பெயர் பெற்றவை. ஒரு ஈற்றில் 3000 லிட்டருக்கும் மேல் கறக்கக் கூடியவை. இந்த வகை மாடுகள் டெல்டா சமவெளிகளுக்கு ஏற்றது. ஓரளவிற்கு வெய்யில் தாங்கும். தமிழ் நாட்டின் ஈரக் காற்றும் ஈரப்பதமும் தான் இவைகளுக்கு சிறிது சங்கடத்தை அளிக்கக் கூடியது. ஆனாலும், இந்த வகை பசுக்களை தமிழ் நாட்டில் இப்போது சிலர் வெற்றிகரமாக வளர்த்து வருகின்றனர். பசுக்கள் பாலுக்கும், காளைகள் வேலைக்கும் பயன்படும் வகையில் உள்ள இரட்டை பயன்பாட்டு மாடுகள் ஓங்கோல், தார்பார்க்கர், ஹரியானா, காங்ரெஜ், தியோனி ஆகியவை. வறட்சியை நன்கு தாங்கி வளரக்கூடியவை, அம்ரித் மஹால், ஹல்லிகர், நகோரி, கிரிஷ்ணா தீரி போன்றவை. இந்த இரகங்கள் அனைத்தும் (தமிழ் நாட்டின் இனங்களையும் சேர்த்து) 'போஸ் இண்டிகஸ்' (Bos Indicus) என்ற விலங்கியல் பெயரால் அழைக்கப்படுகின்றன.

வெண்மைப்புரட்சிக்குப் பிறகு நமக்கு கலப்பின பசுக்களும் (கிராஸ் மாடுகள்) கிடைக்கின்றன. கலப்பின பசுக்கள் நமது நாட்டு 'போஸ் இண்டிகஸ்' பசுக்களையும் வெளி நாட்டு பசு வகைகளான ஜெர்ஸி, ஹோல்ஸ்டின் ஃபிரீசியன், அயர்ஷயர் போன்ற பசுக்களையும் இணைத்து பெறப்பட்ட வகைகளாகும். நமது நாட்டு பசுக்களின் பால் உற்பத்தி திறனை அதிகரிக்க நமது கால்நடைத்துறை இந்த உத்தியை கையாண்டது. இவ்வாறு உருவாக்கிய இரகங்கள் அவற்றின் கலப்பு விகிதத்திற்கு ஏற்றவாறு 2500 முதல் 8000 லிட்டர் பால் வரை கறக்கின்றன. இதில் வெளி நாட்டு பசுக்கள் பெரும்பாலும் குளிரான தட்ப வெப்பத்தையே விரும்புகின்றன. எனவே பால் உற்பத்தி பெருகினாலும் இந்த இரகங்கள் நமது நாட்டு வெப்பத்தை தாங்க இயலாமல் அவதிப்படுகின்றன. வருடத்தில் பல மாதங்கள் இந்த கலப்பின பசுக்களால் வெளியில் சென்று மேய முடிவதில்லை. அதனால், தொழுவத்திலேயே இருக்கும் நிலை ஏற்படுகிறது. தொழுவத்திலேயே இருப்பதாலும், அதிக பால் உற்பத்தி செய்வதாலும் இந்த வகை பசுக்களுக்கு அதிக அளவில் அடர் தீவனமும், புரதச் சத்தும் அளிக்க வேண்டி உள்ளது. எனவே, தீவனச் செலவு அதிகமாகிறது. ஒரே இடத்தில் கட்டி இருப்பதால் நோய் வருவது அதிகமாகிறது. எனவே, பராமரிப்புச் செலவும் அதிகமாகிறது. உடல் பருமனும் அதிகரித்து, பருவத்திற்கு வருவதும், சினை நிற்பதும் தாமதமாகிறது. இந்த செலவினங்களைத் தாண்டி அதிக இலாபம் பால் மூலம் கிடைக்கிறதா என்பது ஒர் புதிரே!

'போஸ் இண்டிகஸ்' வகை மாடுகளின் மடி உள்ளடங்கி இருக்கும். பருத்து இருக்காது. இதனால் பால் கறப்பது சற்று கடினமாக இருந்தாலும் மடியின் மூலம் பரவும் நோய்கள் வருவது மிகவும் அரிது. இதன் குளம்புகள் சிறுத்து கூராக இருக்கும். எனவே, கற்கள் இருக்கும் பகுதியில் நடப்பது எளிதாக இருக்கும். மேலும், கால் கோமாரி வர வாய்ப்பு குறைவு. ஹல்லிகர் பசுக்கள் வெளி நாடுகளில் உள்ள 'மேட் கௌ' வியாதிக்கு எதிர்ப்பு சக்தியை தானாக கொண்டுள்ளது. ஒங்கோல், கிர் ஆகியவற்றைக் கொண்டு பிரேஸில் நாட்டில் கலப்பினங்களை உருவாக்கியுள்ளனர். நமது மாடுகளுக்கு வால் நீளமாக இருப்பதாலும், உடல் மெலிதாக இருப்பதாலும், உடலை மூடும் முடி சிறியதாக இருப்பதாலும் உடலின் பெரும்பாலான பாகத்தை அவை சுத்தம் செய்ய முடிகிறது. இதனாலும், நோய் வரும் வாய்ப்பு குறைவு. இவற்றின் உடல் எடையுடன் ஒப்பிட்டால் இவை குறைந்த அளவு உணவையே உட்கொள்கிறது. தேவையான அளவு மேய்ச்சல் இருந்தால் அடர் தீவனம் போன்ற தீவனச் செலவே இல்லை. மேலும், நமது நாட்டு பசுக்கள், காளைகள் சுறுசுறுப்பானவை. எனவே, உழவர்கள் பண்ணை வேலைகளுக்கு பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் வியர்வை சுரப்பிகள் பெரியது. எனவே அவை அதிக வெப்பத்தை தாங்குகின்றன. இவற்றின் பால் அதிக சத்துள்ளது என்பது பல ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது. இதன் சாணமும், கோமியமும் நமது பயிருக்கு தேவையான ஊட்டச் சத்துகளை உள்ளடக்கி உள்ளது. சாஹிவால் மாடுகளின் நோய் எதிர்ப்பு திறனையும், அவற்றின் பால் மற்றும் இறைச்சியின் தரத்தையும் பரிசோதித்த ஆஸ்திரேலிய விலங்கியல் விஞ்ஞானிகள் 1950-60 முதலே அந்த இரகத்தை தங்களது நாட்டிற்கு கொண்டு சென்று புது இனத்தை உருவாக்கிக் கொண்டனர். தற்போது நமது கால்நடைத்துறையின் மூலம் ‘போஸ் இண்டிகஸ்’ இரகங்களான சிகப்பு சிந்தி மற்றும் சாஹிவால் ஆகியவற்றுடன் நமது தமிழ் நாட்டு மாடுகளை கலப்பு செய்து வருகின்றனர். இவைகளும் நமது தட்ப வெப்ப நிலைகளுக்கு பழகி வருகின்றன.

இவ்வாறு பல பரிமாணங்களிலும் நமது நாட்டு சூழ்நிலைக்கு உகந்த, நாட்டு மாடுகளை தேர்வு செய்வதே சிறந்தது. பாலின் உற்பத்தி குறைவாக இருந்தாலும் செலவினங்களும் அதற்கேற்ப குறைவாகவே இருக்கும். மேலும், அவை நன்றாக நடந்து மேய்வதாலும், உணவு உட்கொள்வது குறைவாக இருப்பதாலும் உடலின் கொழுப்பு சத்தும் பருமனும் குறைவாகவே இருக்கும். எனவே, பருவத்திற்கு வருவதிலும், சினை பிடிப்பதிலும் எந்த வித தாமதமும் ஏற்படுவதில்லை. எனவே, கறவை இல்லா பருவம் மிகவும் குறைவாகவே இருக்கும். மேலும், நாட்டு மாடுகளின் சாணி மற்றும் கோமியத்தின் மூலம் பஞ்சகவ்யம், அமிர்த கரைசல் போன்ற பயிர் ஊக்கிகளை தயாரித்து சொந்த உபயோகம் போக மீதியை விற்பனை செய்யலாம். எருவாகவும் விற்கலாம். வருடத்திற்கு ஒரு கன்று என்பதால் அதிகமாக உள்ள கன்றுகளையும் மற்ற பண்ணைகளுக்கு விற்கலாம்.

இவற்றை எல்லாம் மீறி, நாட்டு மாடுகள் கிடைக்காததாலோ, வேறு எதாவது காரணங்களாலோ கலப்பின பசுக்களைத்தான் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டாலும், 50 சதவிகிதத்திற்கு அதிகமாக வெளி நாட்டு இனத்தின் தன்மை கொண்ட பசுக்களை அறவே தவிர்க்கவும். இதை எப்படி அறிவது? எனக்கு தெரிந்த சுலபமான வழி - ஒரு நாளைக்கு எட்டு அல்லது பத்து லிட்டருக்கு மேல் கறக்கும் மாடுகளை வாங்க வேண்டாம். ஏனென்றால் நமக்குத்தான் தெரியுமே, பால் என்றால் செல்வம் இல்லையே… மாடு என்றால் தானே செல்வம்!

சரி, என்ன மாடு வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்தாகி விட்டது. எத்தனை மாடுகள் வைத்துக்கொள்வது என்பது அடுத்த கேள்வி. இதற்கும் ஒரே வரியில் பதில் சொல்வது கடினம். நீங்கள் இயற்கை விவசாயமும் செய்வதாக இருந்தால், ஒரு ஏக்கர் வயலுக்கு (மரம், தோப்பு முதலிய பகுதிகள் நீங்கலாக) ஒரு மாடு சரியானதாக இருக்கும். மேலும், ஒரு மாட்டிற்கு தேவையான புல்லை விளைவிக்க ஐந்து செண்ட் நிலம் தேவைப்படும். உங்கள் நில அமைப்பில் அகலமான வரப்புகள் இருந்தால் வரப்பிலேயே கூட புல் விளைவிக்கலாம். மரத்தோப்பு அல்லது மேய்ச்சல் நிலம் அருகில் இருந்தால் மாடுகள் மேய்வதற்கும் வசதியாக இருக்கும். கொட்டகை அமைக்க ஒரு மாட்டிற்கு நாற்பது சதுர அடி தேவை. இது போன்ற இட வசதியை தவிற ஆள் வசதியையும் கணிக்க வேண்டும். ஒரு கணவன், மனைவி சேர்ந்து பனிரெண்டு முதல் பதினைந்து மாடுகளை கவனித்துக் கொள்ள இயலும். கன்றுகள் பால் மறந்ததும் அதையும் ஒரு மாடு என்று கணக்கிட்டுக் கொள்ளவும். எனவே, உங்கள் இட வசதியையும், நில அமைப்பையும் விவசாயத்தையும், ஆட்கள் இருப்பையும் வைத்து எத்தனை மாடுகள் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்யலாம்.

பிறகு, மாடுகளுக்கு கொட்டகை எப்படி அமைப்பது, தீவனத் தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது, ஆரோக்கியம் மற்றும் நோய் பராமரிப்பு, இனப்பெருக்கம் ஆகியவை பற்றி வரும் இதழ்களில் காண்போம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org