தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

இயற்கைக் கட்டிடக் கலைஞன் - தூக்கணாங்குருவி

இந்த இதழில் நாம் அறிந்து கொள்ளும் பறவை, நம்ம தூக்கணாங்குருவி. அட! இதில் என்ன புதுமை. நம் அனைத்து கிராமங்களிலும் இதை காணலாம் என்று சிலர் எண்ணுவர். தெரிந்த பறவையைப் பற்றிய சில தெரியாத செய்திகளை இந்த இதழில் காண்போம்.

காணுமிடம்

அதிகமாக, நெல் விளையும் இடங்களில், முள்காடுகளில் மற்றும் வாய்க்கால் ஓரங்களில் மிக உயரமான மரத்தில் கூடி கட்டி வசிக்கும்.

தோற்றம்

தூக்கணாங்குருவி (Baya Weaver - Ploceus philippinus Linn) இந்தியாவின் அனைத்துக் கிராமங்களிலும் எளிதில் காணக்கூடியது. பார்ப்பதற்குச் சிட்டுக்குருவி (15 cm) போல் இருக்கும். ஆண்களுக்குத் தலை மஞ்சள் நிற‌த்தில் இருக்கும் (இனப்பெருக்க காலத்தில் நிற‌ம் அதிகமாகப் பார்க்கலாம்) பெண்களுக்கு இவ்வேறுபாடு கிடையாது.

உணவு

தானியங்களை, குறிப்பாக நெல்லைத்தான், அதிகமாக விரும்பி உண்ணும். விவசாயிகள் கரும்பைத் தவிர, சோளம், பருத்திப்பூ, பயறு போன்று, மற்ற எதை விளைத்தாலும் இதற்கு விருந்து தான். நெல் அறுவடையின் பொழுது மிக மிகச் சுறுசுறுப்பாக‌ இருக்கும். ஏராளமான‌ நெற்கதிர்களை கூட்டம் கூட்டமாக வந்து வேட்டையாடிவிடும். ஒரு கிராமத்தில் அனைத்து விவசாயிகளும் ஒரே சமயத்தில் ஒரே பயிர் விளைப்பது, எலி, தூக்கணாங்குருவி போன்ற இயற்கை எதிரிகளின் தாக்கத்தைப் பரவலாகப் பகிர்ந்து கொள்ளத்தான். அக்காலத்தில் சோ சோ என்று கூறி அதை விரட்டுவர். முருகன் வள்ளியை “ஆலேலங்கிளி சோ” என்று தினைக் காட்டில் கிளி விரட்டும் பொழுது கண்டு காதல் கொண்டதாய்ப் புராணம் கூறும். இக்காலத்தல் பட்டாசை வெடித்து பயமுறுத்துவர் உழவர். ஆனால் எதற்கும் அசராது இவை. விவசாயிகள் சற்று கவனமாகத் தான் இருப்பர்.

கூடு கட்டுத‌ல்

இனப்பெருக்கத்திற்கு முன்பு ஆண் பறவைக்கு கூடு கட்டுதல் தான் மிக முக்கியமான வேலை. பொதுவாக தென்னை மரத்தில் தான் கூடு கட்டும்.வைக்கோல் தான் இதன் வீட்டின் இரும்பு கம்பிகள் என்று கூறலாம். நம் தாளாண்மையில் எழுதிய லாரி பேக்கரைப் போல், வைக்கோலால் இறுகப் பின்னிய கூட்டில் களி மண் பூசி உறுதிப்படுத்தும் இவை! பாதிக் கூடு கட்டியவுடன் பெண் பறவையை அழைத்துத் தன் கூட்டின் வரைபடத்தைக் (Plan) கூறி அறைகள் எத்தனை, வாசல் எவ்வாறு இருக்கும் என்றெல்லாம் கூறும். இதற்கு எல்லாம் மயங்காத பெண் பறவை கூடு எவ்வளவு உயரத்தில் உள்ளது. பாதுகாப்பான கூடா என்று பார்த்துதான் ஆண் பறவையை தேர்ந்தெடுக்கும். (உம்… இவ்வளவு கெடுபடி ஆகாது அம்மணி!).

இனப் பெருக்கம்:

பெண்பறவை 2 முதல் 4 வரை முட்டையிடும் அடைகாக்கும் காலம் 14 முதல் 17 நாட்கள் தான்! இரண்டு பறவைகளும் சேர்ந்து குஞ்சுகளுக்கு உணவு அளிக்கும். இவற்றின் எதிரிகள் காகம், பல்லி, ஓணான் போன்றவை. குருவியின் முட்டையை உடைத்து, உண்டு கூட்டைக் கலைக்கும் இவைகள்.

சிறப்புக் குறிப்புகள்

தன் கூட்டை 500 க்கும் மேற்பட்ட வைக்கோலால் பின்னிப் பின்னிக் கட்டும். மிக உறுதியாக இருக்க வேண்டும் என்று மண்பூசி கூட்டை கட்டும். மின்மினி பூச்சிகளை கூட்டில் வைத்து பெண் பறவையை ஈர்க்கும். கூட்டில் பல அறைகள் இருக்கும். பழைய கூட்டை முனியா பறவைகளுக்கும், எலிகளுக்கும் வசிக்க கொடுக்கும். அதற்கு பதில் எலிகள் நெல்லை இவைகளுக்குக் கொடுக்கும். விவசாயிகளின் எதிரி எலி மட்டுமல்லை இவைகளும் தான்!

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org