தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவும் உரிமையும் - சரா

கடந்த இரு கட்டுரைகளில், உலகிலேயே மக்கள் உரிமைகள் மிக அதிகமாக இருப்பதாகக் கருதப்படும் அமெரிக்க நாட்டில் எப்படி அடிப்படை உணவைத் தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லாமல் மிகச் சில பெரும் நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தில் 30 கோடி மக்களின் உணவு ஒரு வியாபாரம் ஆகி விட்டது என்று கண்டோம். எப்படி அரசும் அதன் சட்டங்களும் இந்நிறுவனங்களின் கைப்பாவைகளாக இருக்கின்றன என்பதையும் கண்டோம். இதன் வரலாற்றைச் சற்றுப் பின்னோக்குவோம்.

ஏறத்தாழ 30-35 வருடங்களுக்கு முன் 'பொது மக்கள் அன்றாடம் உண்ணும் உணவு என்பது ஒரு மிகப் பெரும் சந்தை; இதை ஆளுமை கொள்ள என்ன செய்ய வேண்டும்' என்று சில நிறுவனங்கள் கேள்வி எழுப்பின. அவற்றில், “உணவை உழவன் உற்பத்தி செய்கிறான்” என்று மக்களின் மத்தியில் நிலவும் நம்பிக்கையைத் தங்கள் வியாபாரத்திற்கு ஒரு தடையாக அவர்கள் கண்டு பிடித்தனர். ஆமாம், உங்கள் உணவு விவசாயியிடம் இருந்து வருகின்றது என்று நீங்கள் நம்பினால், பின்னர் ஏன் நீங்கள் அதற்கான பெரும்பாலான பணத்தை ஒரு கம்பனியிடம் கொடுப்பீர்கள்?

இந்த நம்பிக்கையை மாற்ற வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது. இதனாலேயே, “உணவு பாதுகாப்பு” என்கின்ற பெயராலும், “உணவு பொருளாதாரம்” என்கின்ற பெயராலும் பல்வேறு விதமான பதிய சொற்றொடர்கள் ஏற்படுத்தப்பட்டன. அதுவரை வெறும் சிறு உற்பத்தியாளர்களின் ஆதிக்கத்தில் பரவலாக இருந்த விதைகளின் தயாரிப்பும், அதன் வியாபாரமும் வெகு சில மிகப்பெறும் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் உள்ளடக்கப்படுவதற்கான முயற்சிகளும் இந்த கால கட்டத்தில் தான் துவங்கப்பட்டது. சிறு கம்பனிகள் பலவற்றை ஒன்றிணைத்து, “உயிரியல் விஞ்ஞான நிறுவனம்” என்று தங்களை வித்தியாசமாக மீண்டும் மக்களிடையே அறிமுகம் செய்து கொண்ட நிறுவனங்கள் பலவும் அதற்கு முன்னே வெறும் “உயிர் கொல்லி விஞ்ஞான நிறுவனங்களாக” இருந்தது கவனிக்கத்தக்கது. இவர்களது மிகப்பெரிய முயற்சி மக்கள் மத்தியில் நிலவிய உணவிற்கும் விவசாயியின் வாழ்வாதாரத்திற்கும் உள்ள ஆழமான இணைப்பை எவ்வாறேனும் துண்டிப்பதே ஆகும். இதற்காக அவை பல புதிய நிறுவனங்களை உருவாக்கவும், பழையவற்றை விலை கொடுத்து வாங்கவும் செய்தன.

*ஜீன் பியர் பெர்லான்* (Jean Pierre Berlan), என்னும் பிரெஞ்சுக்காரர், இத்தகைய விதை நிறுவனம் ஒன்றின் ஆய்வுத் தலைவராக இருந்தவர், இவர் இருபது ஆண்டுகளுக்கு மேல் இந்தத் துறையை விட்டு வெளியேறிய பிறகு எழுதியுள்ள கட்டுரைகளில் இத்தகைய நிறுவனங்களின் நோக்கத்தையும், இவர்களது வேலை செய்யும் விதத்தையும் புட்டுப்புட்டு வைத்துள்ளார். “இவர்களுக்கு மிக பெரிய பிரச்சினை என்னவென்றால், இயற்கை, பயிர் விளைவிக்க எந்த விதமான விலையும் கேட்பதில்லை, அது தானாகவே உற்பத்தி செய்கின்றது. மகிழ்ச்சியாகவும், நமக்கு தேவையான உணவை இலவசமாகவும் உற்பத்தி செய்து நமக்கு அளிக்கின்றது. இவர்களது வியாபார உத்திகளுக்கும், அதிக அளவில் லாபம் ஈட்டுவதற்கும் மிகப்பெரிய முட்டுக்கட்டையாகவே இயற்கையை இவர்கள் பாவித்தனர்”, என்கிறார் இவர்.

மேலும் இவர் எழுதுகிறார் - “ஒரு முறை விதைகளை விற்றால், விவசாயி அதிக‌ விளைச்சல் ஈட்ட வேண்டும்; அதே சமயத்தில் அடுத்த முறை அந்த விளைபொருள் மீண்டும் விதையாக உற்பத்தி செய்யும் திறன் அற்றே இருக்க வேண்டும், அப்போதுதான் மீண்டும் மீண்டும் அந்த விவசாயி இவர்களிடம் விதைகளை வாங்குவான், இவர்களுக்கும் அதிக லாபம் கிடைக்கும் என்பதையும் இந்த விதை வியாபாரிகள் உணர்ந்து இருந்தனர்.

இந்த அணுகுமுறையின் ஒரு முக்கியமான வெளிப்பாடு தான் “terminator” என்று அழைக்கப்படும், மலட்டு விதைகளை உற்பத்தி செய்யும் ஒரு வித்தியாசமான தொழில்நுட்பம். இந்த பயிர் சாதாரண பயிரை போலவே பூக்கும், காய்க்கும், தானியமும் விளைவிக்கும்; ஆனால், மீண்டும் விதைத்தால், அது முளைக்காது!

இந்தப் போக்கு எந்த சித்தாந்த அடிப்படையில் அமைந்தது என்பதற்கு நாம் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் தெரியும். பதினெட்டாம் நூற்றாண்டில், ஐரோப்பாவில் வசித்து வந்த குறுமன்னர்கள் தங்கள் பொழுது போக்கிற்குக் குதிரைப் பந்தயத்தை நடத்தி வந்தனர். அப்போது குதிரை வளர்ப்பில், அதன் சாதிவாரியான கலவைக்கு மாத்திரமே அதை உட்படுத்தினர், உயர்ந்த ஜாதியின் ரத்தத்தில் ஓடும் குதிரை சிறப்பானதாக இருக்கும் என்பதே இதன் பின்னணி. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியில், இந்த அணுகுமுறை இதர பண்ணை மிருகங்களுக்கும், அவற்றின் வளர்ச்சிக்கும் நீட்டிக்கப் பட்டது.

அதாவது, உயிர் கொடுக்கும், புதிய உயிர் ஏற்படுத்தும், உரிமை விவசாயிகள் மற்றும் பண்ணை சேர்ந்தவர்களின் கையிலிருந்து, பணம் முதலீடு செய்யும் முதலீட்டார்கள் கைக்கு மாற்றப்பட்டது. மிருகங்களுக்கு, அதன் ஆண் பெண் மிருகங்களைத் தனிமைப்படுத்தி இந்த ஆதிக்கம் நிலைநாட்டப் பட்டது. ஆனால், தாவரங்களுக்கு இன்னமொரு சவால் இருநதது - எவ்வாறு உற்பத்தித் திறனையும், உயிர் கொடுக்கும் திறனையும் பிரித்தாள்வது? இதற்காக இவர்கள் பலவிதமான உத்திகளையும் கையாள‌ வேண்டி இருந்தது. இதனை மக்களுக்குத் தெரிவிக்கும் மொழியிலும் கூட இவர்கள் பலவாறு மாற்றங்களையும் தந்திரங்களையும் ஏற்படுத்தியே மக்கள் மத்தியில் இந்த “மலட்டு” விதைகளை அறிமுகப்படுத்த முடிந்தது.

முன்பெல்லாம், ஒரு “ரகம்” (ஆங்கிலத்தில் variety என்பர்) என்பதை நமது விவசாயிகள் மிகவும் எளிதாக வெவ்வேறு விதமான விதைகளைக் குறிப்பதற்குப் பயன் படுத்தினார்கள். ஒரு விவசாயி 'நான் இந்தப் பட்டம் “மாப்பிள்ளைச் சம்பா” அல்ல‌து, “குள்ளக்கார்” போன்ற ரகங்களைப் பயிர் செய்கிறேன்' என்றே யதார்த்தமாகக் கூறுவார். விதை வியாபார நிறுவனங்கள், பாமர மக்களைக் குழப்பும் விதத்தில், எடுத்த எடுப்பிலேயே இந்த சொற்களுக்குத் தங்களுக்கு ஏற்றவாறு விவரிக்க துவங்கினர். “நமது அடிமைத்தனத்தின் துவக்கமும், மற்ற‌வர்களின் ஆதிக்கமும் மொழியில் இருந்து துவங்குகிறது” என்று காந்தி அடிகள் கூறியதை போல, இவர்கள் செயல்பட்டனர். இவர்களின் புதிய விளக்கத்தின் பயனாக, ஒரு ரகமானது அதன் தன்மையில் அனைத்து தானியங்களும் ஒரே விதத்தில் இருக்கும் என்று விளக்கினர். அதாவது, homogenous - ஒரே தன்மையை கொண்டதாகவும் மற்றும் stable இந்த தன்மையில் அவை வயது முதல் எல்லா விதத்திலும் உருவம் பிசகாமல் அதே தன்மையுடையதாய் இருக்க வேண்டும் என்றும் விளக்கமளிக்கப் பட்டது. இது இயற்கைக்கு மாறான விட‌யம் என்று நாம் அறிந்ததே. ஒரே ஜாதியை அல்லது குடும்பத்தை சேர்ந்தவர்கள் - அது மனிதர்களோ அல்லது மிருகங்களோ ஒரே விதத்தில் எப்போதும் இருப்பதில்லை, ஆனால் தானியத்தில் மட்டும் இவ்வாறு இருக்க இயலும் என்று இவர்கள் காண்பிப்பதின் மூலம் தங்கள் விதைகளுக்கு வியாபாரம் தேடினார்கள்.

அடுத்ததாக distinct: மாறுபட்ட விதை. ஒவ்வொரு விதையிலிருந்து விளைந்த தானியமும் சில விதங்களில் மற்றொரு ரகத்தை விட அனைத்து விதத்திலும் மாறுதலாக இருக்க வேண்டும் என்று இதற்கு விளக்கம். “இவ்வாறு தனித்தன்மை கொண்ட விதைகளைக் காப்புரிமை செய்ய இயலுவதால், பிற விதைகளைக் கலப்பு என்று ஒதுக்கி விட்டுத் தங்கள் விதைகளைத் தங்களிடம் மட்டுமே வாங்குமாறு செய்யலாம். இதன்மூலம் தங்கள் வியாபாரத்தைப் பெருக்கி, விவசாயியின் விதை உரிமையைப் பறிப்பதில் இது முக்கிய திட்டமாகவே நிகழ்த்தப்பட்டுள்ளது” என்று இந்த பிரெஞ்சு நிபுணர் தெரிவிக்கின்றார்.

இன்னும் வரும்…

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org