தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவர்களின் சிக்கல்கள் - பாமயன்


இந்திய உழவர்களின் சிக்கல்களை நான்கு பெரும் பிரிவுகளாகப் பார்க்க முடியும். நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட இந்திய உழவர்கள் பல நூற்றாண்டுகளாக விடாது உழைத்து வருபவர்கள். மன்னராட்சிக் காலத்தில் இருந்து உழவர்களின் வருமானத்தை நம்பியே நமது அரசுகள் இயங்கி வந்துள்ளன. அதனால் தான் பண்டை இலக்கியப் பதிவுகளில் உழவர்களின் சிறப்பு பதிவாகியுள்ளது. பொதுவாக முதலாளித்துவ பொருளியல் மாற்றம் ஏற்பட்ட பிறகு வேளாண்மையில் பல திடீர் மாற்றங்கள் தோன்றின. முந்தைய நிலவுடமை அல்லது நிலக்கிழமை முறையில் உழைப்பு மலிவாக கிடைத்து வந்தது. அதன் விளைவாக உழவர்கள் தமது மரபுசார் தொழிலைவிட்டு வெளியேறத் தொடங்கினர். முற்றிலும் வேளாண்மையை மட்டும் நம்பி வாழும் உழவர்கள் நீண்ட காலமாக தொழில்நுட்ப முறையிலும், விதை, உரம் போன்ற இடுபொருள்கள் யாவற்றிலும் வெளியாட்களை நம்பியிராமல் தற்சார்பு உள்ளவர்களாக இருந்துள்ளார்கள்.

பசுமைப் புரட்சி எனப்படும் ரசாயண வேளாண்மை வந்த பின்னரும் உழவர்களின் தற்சார்பு சிதைவுற்றது எனலாம். ஆக உழவர்களின் முதல் சிக்கலாக அனைத்து நுட்பங்களுக்கும் இடுபொருள்களுக்கும் அடுத்தவரைச் சார்ந்து இருக்க வேண்டிய தற்சார்பற்ற நிலை. இரண்டாவதாக உழவர்களின் வாழ்க்கை முறை என்பது அவர்களை ஒன்றிணைய விடாது, உதிரிகளாக வைத்திருக்கக் கூடியதாக உள்ளது. எடுத்துக்காட்டாக ஒருங்கிணைந்த தொழிலாளர்களின் போராட்டங்களை எடுத்துக் கொள்வோம். ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபடும்போது பல சமயம் சிறை செல்கிறார்கள். அதன் விளைவாக பள்ளிகள் மூடப்படுகின்றன. மாணவர்கள் கல்வி இழக்கின்றார்கள். மருத்துவர்கள் போராட்டம் நடத்துக்கின்றனர், சிறை செல்கின்றனர். நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர். ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் போராட்டங்களில் சேதாரம் பெரிதும் அவர்களுக்கு இல்லை. ஆனால் உழவர்கள் போராட்டம் நடத்தி சிறை செல்லும் போது அவர்களது குடும்பமே நேரடியாகப் பாதிக்கப்படுகிறது. தனது வயலுக்கு நீர்பாய்ச்ச முடியாது, ஆடு மாடுகளுக்கு கூட தீவனம் தர முடியாமல் போகும் நிலைமை உருவாகின்றது. எனவே அவர்கள் ஒருங்கிணைந்து போராடி தங்களது உரிமையைப் பெற்றுத் தருவது என்பது இயலாத ஒன்றாக மாறிவிடுகிறது.

அடுத்ததாக அரசின் கொள்கைகள், திட்டங்கள், சட்டங்கள் யாவும் பரந்து பட்ட உழவர்களின் மீது சுமையை ஏற்றிவிடுவதாகவே உள்ளது. ஏனென்றால் இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஜனநாயகம் என்பது பெரும்பான்மையோர் சேர்ந்து எடுக்கும் முடிவுகளுக்கு சிறுபான்மையோர் கட்டுப்பட்டு நடக்க வேண்டிய முறை சார்ந்தது. இதை வேடிக்கையாக ஒரு அறிஞர் சொல்கிறார். நூற்றில் 51 பேர் சேர்ந்து 49 பேர் எடுக்கும் முடிவு முட்டாள் தனமானது என்று கூறிவிடலாம் என்கிறார். ஆக ஜனநாயகத்தில் யாரெல்லாம் ஒன்றிணைந்து குரல் கொடுக்கிறார்களோ அவர்கள் மட்டுமே தங்களது ஆதிக்கத்தை கொண்டு செலுத்த முடியும். இது எண்ணிக்கைக் கணக்கு மட்டுமல்ல, அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதும் முக்கியமானதாகும். இந்த அடிப்படையில் ஒருங்கிணைந்து போராடத் தெம்பில்லாத உழவர் சமூகம் அரசிடமிருந்து தனக்கு சாதகமான கொள்கைகளையும், திட்டங்களையும் வென்றெடுப்பது என்பது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது.

அத்துடன் இன்றைய அரசினை இயக்கும் சக்திகள் யார் என்று ஆராய்ந்து பார்த்தால் பெரும்பான்மையுள்ள சிறுபான்மை என்ற உயர் அதிகார மட்டம் ஒன்று இருப்பதைக் காண முடியும். இந்திய மக்களாட்சி என்பது நேரடியாக மக்களின் ஆட்சியன்று; இது மக்களது சார்பாக தேர்வு செய்யப்படும் ஒரு சிலர் மக்களை ஆட்சி செய்கிறார்கள். அதாவது 120 கோடி மக்களை 524 பேர் சேர்ந்து ஆட்சி செய்கிறார்கள். இன்றும் இதை நுட்பமாகப் பார்த்தால் 263 பேர் ஆள்கிறார்கள். இது இன்றைய சூழலில் காங்கிரசுக்கு 263 கூட கிடையாது. சிறுபான்மை உறுப்பினர்களைக் கொண்டே ஆட்சியை நடத்துகின்றது. இது இந்தியாவில் மட்டுமே சாத்தியமாகிறது. அதற்கு இந்திய அரசியல் சட்டத்தில் வாய்ப்பும் இருக்கிறது. எனவே உழவர்களின் சிக்கல் ஒரு ஆழமான அரசியலை உள்ளடக்கியதாக உள்ளது. இதை வேறொரு இடத்தில் விளக்கி எழுதலாம்.

உழவர்களின் நான்காவது சிக்கல், சந்தையின் ஆதிக்கம் நேரடியாகக் களத்தில் இறங்கி விளைவிக்கும் உழவர்கள் தங்களது விளை பொருள்களுக்கு விலை வைக்க இயலாத சூழல் உள்ளது. குறிப்பாக ஒரு தொழில்சாலைப் பொருள் ஆலையை விட்டு வெளியேறும் போது அதற்காக அதிகபட்ச சில்லறைவிலை (MRP) முத்திரையிடப்பட்டு வெளிவருகிறது. அதற்குரிய அடக்கவிலை உறுதி செய்யப்படுகிறது. அதில் லாபம் என்ற ஒரு பங்கு வைக்கப்படுகின்றது. ஆனால் உழவர்களின் பொருள்கள் அந்தவிதமான எவ்வித விலை உறுதிப்பாட்டிற்கும் உட்படுத்தப்படுவதில்லை. ஒரு குறிப்பிட்ட பகுதியில் குறிப்பிட்ட மூலப்பொருளைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் பொருளின் அடக்கவிலை உறுதியாக தெளிவு படுத்தப்படுகிறது.

அது குறிப்பிட்ட முத்திரை அல்லது சின்னம் பொறிக்கப்பட்டு ஒரே மாதிரியான விலையில் சந்தையில் உலாவருகிறது. எடுத்துக்காட்டாக ஒரு குறிப்பிட்ட முத்திரைச் சோப்பு எல்லாப்பகுதிகளிலும் ஒரே விலையில் கிடைக்கிறது. ஏன் பட்டியல் அடைக்கப்பட்ட குடிநீர் பல இடங்களில் பல மாதிரிகளில் எடுக்கப்பட்டாலும் ஒரே விலைக்கு (அதிகவிலை என்பது வேறு) கிடைக்கிறது. ஆனால் உழவர்களின் விளைபொருள்கள் அவ்வாறு உறுதிப்படுத்தப்பட்ட விலையில் கிடைப்பதில்லை.

இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும் மிக முதன்மையான காரணம் அரசிடம் தெளிவாக விலைக் கொள்கையோ, கொள்முதல் கொள்கைகளோ இல்லை. ஏன் சாகுபடிக் கொள்கை கூட இல்லை. கடும் வறட்சிக்கு இலக்கியுள்ள பகுதிகளில் கரும்புக்கும், வாழைக்கும் அரசு கடன் வழங்குகிறது. அதே போல நிலத்தடி நீரை முற்றிலும் உறிஞ்சி கறுப்பு ஒன்றியங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் கரும்புக்கும், வாழைக்கும், மஞ்சளுக்கும் வங்கிகள் கடன் வழங்குகின்றன கரும்பு ஆலைகள் நிறுவப்படுகின்றன. ஆகவே உழவர்களின் பெருஞ்சிக்கல்களான, 1. தற்சார்பின்மை 2. உதிரித்தன்மை 3. அரசியல் பாராமுகம் 4. சந்தைச் சூதாட்டம் போன்ற சிக்கல்களில் இருந்து விடுபட்டால் மட்டுமே உழவர்கள் தங்களது வாழ்க்கையை உழவர்களாக இருந்தே தீர்க்க முடியும். இன்று நம்முடைய ஆட்சியாளர்கள் உழவர்கள் நிலத்தைவிட்டு வெளியேறி விட வேண்டும் என்பது பல இடங்களில் பல குரல்களில் பேசி வருகின்றனர். நிலம் என்பது இன்று மிகப் பெரும் அளவில் பன்னாட்டு நிறுவனங்களுக்கான மூலப்பொருளாக மாறி வருகிறது. அது மலைவாழ் மக்களில் தொடங்கி உழவர்கள், மீனவர்கள் என்று எல்லா அடித்தட்டு, பரந்துபட்ட மக்களின் வாழ்விடங்களையும் குறிவைத்து கைப்பற்றப்படுகின்றது. நூற்றுக்கு பத்து பேர்களுக்கு வேலைவாய்ப்பைத் தருவதற்கு 90 பேர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் பணிகளில் இறங்குகின்றனர். எப்படி லாட்டரி சீட்டு நடத்தும் போது 1 ரூபாய்க்கு விற்று 1 கோடியை ஒருவருக்கு மட்டுமே வழங்குவார்களோ அதே போல பல்லாயிரம் பேருக்கு வாழ்வு தரும் கடலை, மலையை, வயலை அழித்து சில பத்து பேர்களுக்கு வழங்குவதை வளர்ச்சி என்பது கூறுகின்றனர். முதலில் உழவர்கள் தங்களது தற்சார்பின்மை உறுதி செய்ய தங்களால் பிணைத்திருக்கும் சங்கிலிகளை உடைத்தெறிய வேண்டும்.ஓர் அடிமை தான் அடிமையாக இருக்கிறோம் என்ற உணர்வு பெறாதவரை அவரால் விடுதலை பெற முடியாது.

“பூட்டிய இரும்புக் கட்டின் கதவுகள் திறந்தன சிறுத்தையே வெளியே வா”

என்பார் பாரதிதாசன் கூண்டைத் திறந்தவுடன் சிறுத்தை வெளியில் வர வேண்டும். அதுதானே உண்மை. ஆனால் பாவேந்தர் ஏன் ‘சிறுத்தையே வெளியே வா’ என்று அழைக்கிறார். துள்ளிப் பாய்ந்து வெளியேறாமல் சிறுத்தை தான் இருக்குமா? இதில் தான் ஒரு நுட்பம் உள்ளது. கூண்டில் அடைப்பட்ட சிறுத்தை அந்தக் கூண்டை ஒரு சுகமான இடமாகக் கருதி வாழ்ந்து விட்டது. தான் அடிமை என்பதை அறவே மறந்து விட்டது. அதனால் தான் அது வெளியே வராமல் நின்றது என்பது உட்பொருள். இதை சுப்பிரமணிய பாரதியார் கூறுவார் ‘கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணம் அறிகிலார்’ என்பதை தாம் ஏன் வறுமையில் வாழ்கிறோம் என்ற உண்மை தெரியாமல் இருப்பதைத்தான் அடிமை மன நிலை என்று கொள்ள வேண்டும். எனவே இன்றைய அடிமைப்பட்ட உழவர்களின் வாழ்வில் என்போர் விடுதலை வேண்டுமாயின் உழவர்கள் தற்சார்பை நோக்கிச் சென்றாக வேண்டும். நமது கைகளில் கால்களில் பூட்டப்பட்ட விலங்குகள் ஒவ்வொன்றையும் கழற்ற வேண்டும்.

முதலில் தற்சார்புள்ள தொழில் நுட்பங்களை நாம் கைக்கொள்ள வேண்டும். நமது பண்ணையில் கிடைக்கும் பொருள்களைக் கொண்டே நமது பண்ணைக்கான இடுபொருள்களை உருவாக்க வேண்டும். எரு, விதை, பூச்சி விரட்டிகள் என்று ஒவ்வொன்றாக நாம் நமது கைவசப்படுத்தியாக வேண்டும். ஒவ்வொரு பயிர்களைப் பற்றிய அறிவை நமது மூத்தோர்கள் அண்டை அயலார்களிடமிருந்து தெரிந்து ஆவணப்படுத்திக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் நமது சந்தையை உருவாக்க வேண்டும். அண்டைச் சந்தையும், இயற்கைவழி வேளாண் சந்தையும் நமக்கு கைக்கொடுக்கும், தற்சார்பு வேளாண்மைக்கு உதவுவது இயற்கைவழி வேளாண்மை என்பதால் அதை நாம் முன்னெடுக்க வேண்டும். இப்படியாக தற்சார்புள்ள உழவர்கள் பெருகி தங்களுக்குள் ஒரு கூட்டமைப்பாக மாறும் போது அரசு நம்மைத் திரும்பிப் பார்க்கும். அப்போது நமக்கென மதிப்பு உருவாகும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org