தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புகை வளையங்கள் - ஜார்ஜ் மொன்பியோட்

[பணத்திற்காக அரசர்களைப் பாடும் புலவர்கள் நவீன காலங்களில் அறிவியலாளார் வேடம் இட்டு, பெரும் நிறுவனங்களுக்குச் சாதகமாக ஆய்வுகளையும், கருத்துக்களையும் கூறுவதாக எழுதியிருந்தோம். அறிவியல் விரும்பிகள் பலரும் நம்மை எதிர்த்தனர். எனினும் தயங்காது, இதோ நம் புதிய புலவர் 01 - டேவிட் வார்புர்டன் ! ]

சில வாரங்களுக்கு முன்பு நான் வேறு எதையோ தேடிக்கொண்டு இருந்த போது, நான் இது வரை படித்ததிலேயே ஒரு அதி முக்கியமான கோப்பினை பார்க்க நேர்ந்தது. அது ARISE என்கிற ஒரு குழுவினைப்பற்றியது (Associates for Research Into Science for Enjoyment). இக்குழு இன்று மறக்கப்பட்டுவிட்டாலும் 1990 களில் உலகின் கருத்துகளை செறிவு செய்யக்கூடிய ஒரு மனித நல குழுவாக இருந்தது. முதலில் இக்குழுவின் கொள்கைகளை பற்றி சொல்லிவிடுகிறேன்.

இக்குழு 1998 இல் தொடங்கப்பட்டு 2004 வரையில் துடிப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. உலகின் முக்கிய அறிவியல் வல்லுனர்களின் ஒருங்கிணைந்த அமைப்பாக, அறிவியல் சார்ந்த சுதந்திரமான கருத்துகளை மக்களுக்கு அறிவிப்பதற்காகவும், நம் தின வாழ்க்கையை புகைப்பது, தேநீர் மற்றும் காப்பி அருந்துவது, சாக்லேட்கள் சுவைப்பது போன்ற இலகுவான மகிழ்ச்சிகள் எப்படி மேம்படுத்துகின்றன என்று தெரிவிப்பதற்காகவும் உண்டாக்கப்பட்டது.

நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் செயல்களை கூச்சமின்றி/அச்சமின்றி செய்வதற்கு நல்ல காரணங்கள் உள்ளதாக இக்குழு வலியுறுத்தியது. அவர்களின் மேற்கோளின்படி குற்ற மனப்பான்மையின்றி வாழ்க்கையின் எளிதான‌ மகிழ்ச்சிகளை அனுபவிப்பது நம் மன‌அழுத்தத்தை (stress) குறைத்து நம் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவதாகவும், அவ்வாறு செய்யாவிட்டால் குற்ற மனப்பான்மை நம் மன‌அழுத்தத்தை அதிகப்படுத்தி நம் நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைத்து விடும் என்றும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றதாம் (இது மறதி, உணவுக்கோளாறுகள், இதய நோய்கள் மற்றும் மூளையை செயலிழக்கச்செய்யும் நோய்களை கொண்டு வந்து விடுமாம்).

ஒரு குறுகிய காலத்திற்குள்ளாகவே Arise பற்றிய செய்திகள் வியக்கத்தக்க வகையில் அனைத்து ஊடகங்களிலும் பரவின (195 செய்தி குறிப்புகள், உலகின் மிக முக்கியமான செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் மற்றும் பிற ஊடகங்கள் வாயிலாக). இந்த செய்திப்பரவலுக்கு Arise இதனால் நடத்தப்பட்ட “குறும்புதான் எனினும் நன்றே!”('Naughty but Nice') என்கிற கருத்துக்கணிப்பு - “குற்ற மனப்பான்மையை கொடுக்கும், எந்த‌ மகிழ்ச்சியை நீங்கள் அதிகம் விரும்புகிறீர்கள் ” - என்று கண்டறிய நடத்தப்பட்டது. இந்த கருத்துக் கணிப்பு மோரி கணிப்பு (Mori Poll ) என்று பெயரிட‌ப்பட்டது.

ஒரு உதாரணம் இதோ:

' பழமைவாத உடல்நல ஆர்வலர்கள் மக்கள் புகை பிடிக்கலாமா கூடாதா என்றும், மது அருந்தலாமா கூடாதா என்றும் வரையறுப்பது நம் தின வாழ்க்கையின் நற்தன்மையை பாழ்படுத்தும் செயல் என்று மேதைகள் குழு ஒன்று கருதுகின்றது…“எங்களின் பொதுவான கருத்து என்னவென்றால் இத்தகைய மகிழ்ச்சிகளை அனுபவிப்பது தனி மனித உரிமை” என்றார் டேவிட் வார்புர்டன் (David Warburton). இவர் இங்கிலாந்தின் ரீடிங் பல்கலைக்கழகத்தில் ஒரு மருந்தியல் பேராசிரியர். மேலும் இந்த கருத்துக்கணிப்பு “உடல்நல‌ மேம்பாடு பற்றிய இயக்கம் தவறான கருத்துகளோடு அரசியல் ஆதாயத்திற்காக செயல்படுகிறது” என்றும் கூறுகிறது.

ஒரு முக்கியமான தொலைக்காட்சியின் நேர்காணலில் டேவிட் வார்புர்டன் புகைப்பதின் நன்மைகளை (புகைப்பவர்களை அமைதிப்படுத்துகிறதாம்) மிக உயர்த்தியும் அதற்கு எதிரான பொது பிரசார வாதங்களை மிகக் கடுமையாக சாடியும் பேசினார்.Arise இன் ஊடக ஆதிக்கம் அக்டோபர் 2004 வரை தொடர்ந்தது. கார்டியன் மற்றும் டைம் போன்ற மிக முக்கியமான பத்திரிகைகளில் Arise இன் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. டைம் பத்திரிகை Arise இன் கருத்தான ” நிரூபிக்கப்படாத உடல் நல பாதிப்புகளை எண்ணிக் கவலைப்படுவதை விட்டுவிட்டு நமக்கு பிடித்தவற்றை செய்வதன் மூலம் நம் உடலின் நோய் எதிர்ப்பு தன்மை தூண்டப்பட்டு அது தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும்” என்பதை முன்வைத்தது. நூற்றுக்கணக்கில் இந்தக் கருத்தை ஆமோதித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் இடையே ஒரே ஒரு பத்திரிகையாளர் (கார்டியனில் எழுதும் மேடலின் பன்டிங் மட்டுமே) Arise இன் அறிவியல் ஆதாரங்களையும் அதன் உள்நோக்கங்களையும் விமர்சித்திருக்கிறார் என்று கண்டேன் (ஒரே ஒருவர்!).

இந்தக்குழுவின் தலைவர் என்று கருதப்படும் டேவிட் வார்புர்டன் ரீடிங் பல்கலைக்கழகத்தில் மனமருந்தியல்(psychopharmacology) என்ற பிரிவின் தலைவர். Arise மிக துடிப்புடன் செயல்பட்ட காலகட்டத்தில் இவர் நிகோட்டின் எனப்படும் வேதிப்பொருளைப் பற்றி ஏறத்தாழ 12 கட்டுரைகள் எழுதியுள்ளார். ஒரு கட்டுரையில் அமரிக்க தலைமை அறுவை சிகிச்சை நிபுணரின் 'நிகோட்டின் அதை பயன்படுத்துபவர்களை பழக்கத்துக்கு அடிமை ஆக்கி விடும்' என்ற கூற்றை கடுமையாக கேலி செய்து எழுதியுள்ளார் (1989 இல் The Psychologist என்ற புகழ்வாய்ந்த பத்திரிகையில்). மேலும் அவர் நிகோட்டின் நம் கவனத்தையும் நினைவுத்திறமையையும் மேம்படுத்துவதாகவும் கூறியுள்ளார். இது இவ்வாறிருக்க 1998 இல் புகையிலை நிறுவனங்களுக்கு எதிரானதொரு அமெரிக்க வழக்கின் தீர்ப்பில் ஒரு பகுதியாக அந்த நிறுவனங்கள் தம் உள் ஆவணங்களை (internal documents) பொது மக்கள் பார்வைக்கு வைக்கவேண்டும் என்று முடிவாயிற்று. போன மாதம் நான் அவற்றை ஆராய்கையில் ஃபிலிப் மாரிஸ் என்கிற உலகின் மிகப்பெரிய புகையிலை நிறுவனத்தின் ஆவணம் ஒன்றைக் காண நேர்ந்தது. அதன் தலைப்பு “Arise 1994-1995 செயல்பாடுகள் மற்றும் நிதியுதவி” என்பதாகும்!!

அந்த கோப்பில் குறிப்பிட்டுள்ளபடி Arise முந்தைய நிதியாண்டில் $373,400 (சுமார் 2 கோடி ரூபாய்) நிதியுதவியை புகையிலை பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்தே (99 %) பெற்றுள்ளது என்று தெரிய வந்தது! (புலவருக்குப் பரிசு கிடைத்தது!)

மேலும் நடப்பு நிதியாண்டிற்கு இந்த நிதியுதவி $ 773,500 ஆக உயருமென்றும் அந்த கோப்பு குறிப்பிட்டது. இவை எல்லாவற்றையும் விட கவனத்தை கவரும் செய்தி ஒன்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது, முந்தைய ஆண்டில் நடத்திய 'Naughty but Nice' என்ற கருத்துக் கணிப்பு மிக நன்றாக ஊடகங்களால் பரப்பப்பட்டதாகவும் நடப்பு ஆண்டில் 'அலுவலகத்தில் அழுத்தம்' என்ற தலைப்பில் மற்றொரு கருத்து கணிப்பு நடத்த உள்ளதாகவும் அதற்கான மாதிரி கேள்விகளை ஏற்கனவே ஃபிலிப் மாரிஸ் இன் வழக்கறிஞர்களுக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகவும், ஃபிலிப் மாரிஸ் நிறுவனம் இந்த கணிப்பை ஐரோப்பாவில் நடத்த திட்டமிட்டு (அங்குள்ள ஊடகங்கள் இதனை மிக நன்றாக பரப்புகின்றனவாம்) ஏற்கனவே இலண்டனில் ஒரு அலுவலகம் தொடங்கி அதில் Arise தம் பணியாள‌ர்களை அமர்த்த அந்நிறுவனமே உதவப்போவதாகவும், Arise க்கு தேவைப்படும் நிதியுதவியை முறையான கட்டுப்பாடுகளின்றி எளிதாக சேரும் வகையில் நிறுவனத்தின் வரவு செலவு கவனிக்கும் குழுமம் உத்தரவிடப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது!

இதிலிருந்து Arise குழு சொல்லிக்கொள்வது போல் அது மேன்மை மிக்க அறிவியலாளர்களால் வழிநடத்தப்படவில்லை என்பதும் பன்னாட்டு புகையிலை நிறுவனங்களாலேயே வழி நடத்தப்படுகிறது என்றும் தெளிவாகிறது.

மற்றொரு கோப்பில் Arise நிறுவனம் எப்படி ஆரம்பிக்கப்பட்டது என்பதும் தெளிவாக குறிப்பிடப்படிருக்கின்றது 1988 இல் அமரிக்க தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் 'நிகோடின் பழக்கம் ஹெராயின் மற்றும் கோகைன் போன்ற போதை பொருட்களை போலவே பயன்படுத்துபவர்களை தனக்கு அடிமையாகிக்கொள்ளும்' என்று சொல்லியிருந்தார். உடனே புகையிலை நிறுவனங்கள் அதற்கு பதில் அளிக்கும் விதமாக நிகோடினை மற்ற இரண்டு போதைப்போருட்களிடம் இருந்து வேறு படுத்திக்காட்டுவதற்காக ஒரு கல்வியாளர்கள் குழுவை நியமித்து அவர்களை அறிவியல் பூர்வமாக இதை சாதிக்க சொன்னது.

நான் பேராசிரியர் டேவிட் வார்புர்ட்டனுக்கு அனுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்க அவருக்கு நேரமில்லை என்று மறுத்து விட்டார்.

ரீடிங் பல்கலைக்கழகம் பேராசிரியர் டேவிட் வார்புட்டனுக்கு புகையிலை நிறுவனங்கள் நிதியுதவி செய்தது தமக்கு தெரியும் என்று பதிலளித்தது. இந்த பல்கலைக்கழகமே Arise இடம் இருந்து 300,000 பிரிட்டிஷ் பவுண்டுகள் நிதியாகப்பெற்றுள்ளதாகவும் அந்த நிதி Arise இனால் எவ்வாறு திரட்டப்பட்டது என்பது எப்போதுமே தெளிவற்றதாகவே இருந்தது என்றும் தெரியப்படுத்தியது.

1995இல் இருந்து 2003 வரை புகையிலை நிறுவனங்கள் டேவிட் வார்புட்டனுக்கும் பல்கலைக் கழகத்துக்கும் நிதியுதவி வழங்கியபோதிலும் அப்பல்கலைக்கழகம் இந்த நிதியின் மூலத்தை பற்றி ஆராய வில்லை என்றும் டேவிட் வார்புர்டன் எழுதிய நிகோடினை ஆதரிக்கும் கட்டுரைகளில் அவர் புகையிலை நிறுவனங்களின் நிதி பெற்றே தம் ஆராய்சிகளை செய்கிறார் என்ற உண்மையை வெளியிட அவரை வற்புறுத்தவில்லை என்றும் (அவ்வாறு செய்தால் அது -இருட்டடிப்பு - censorship - மற்றும் கல்வியாளர்களின் சுதந்திரத்தை கட்டுப்படுத்துவது போலாகி விடும் என்பதனாலும்) தெரிவித்துள்ளது!

மனமருந்தியல்(Psychoparmacology) பத்திரிகையும் டேவிட் வார்புர்டன் புகையிலை நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்று வந்தது தெரியாது என்றும், அந்த பத்திரிகையில் கட்டுரை எழுதுபவர்கள் தாமாகவே முன் வந்து இத்தகைய செய்திகளை தெரியப்படுத்தினால் அன்றித் தம்மால் ஒன்றும் செய்ய இயலாது என்றும் கூறிவிட்டது.

பேராசிரியர் டேவிட் வார்புர்டன் அவருடைய துறை எதிர்பார்க்கும் நேர்மை கருதிய இத்தகைய கேள்விகள் எதனாலும் வருத்தப்படாமல் தம் பணிக்காலத்தை செவ்வனே நிறைவு செய்து விட்டு 2003 இல் நிரந்தர ஒய்வு பெற்று இப்போதும் ரீடிங் பல்கலைக்கழகத்தில் விரிவுரைகள் நடத்திக்கொண்டிருக்கிறார் (Professor Emeritus ).

இதைப் போல இன்னும் எத்தனை எத்தனை அறிவியல் கருத்துகள் தம் உள்நோக்கத்தை வெளிப்படுத்தாது கல்விப்பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுகின்றன?

இன்னும் எத்தனை எத்தனை ஊடக செய்திப்பரவல்கள்/போராட்டங்கள் (கட்டுப்பாடை எதிர்ப்பதாம், நிரூபிக்கப்படாத மக்கள் பயங்களை எதிர்ப்பதாம், etc) ரகசியமாக உள்நோக்கம் கொண்ட நிறுவனங்களால் வழி நடத்திச்செல்லப்படுகின்றன?

இன்னும் எத்தனை எத்தனை விற்பன்னர்கள்/கல்வியாளர்கள் இந்நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்றுக்கொண்டு தொலைக்காட்சி நிகழ்சிகளில் இலவச மக்கள் தொடர்பு சேவை செய்கிறார்கள்?

இந்த நிகழ்வு எனக்கு ஒன்றை உறுதியாக காண்பிக்கிறது. அது என்னவென்றால் கல்வி நிறுவனங்களும் ஊடகங்களும் பகுத்தறியும் மனப்பான்மையுடன் தம் கடமையை செய்ய முற்றிலுமாகவே தவறி விட்டன என்பதே.

இனிமேலாவது ஒவ்வொரு பத்திரிகையும் பத்திரிகையாளரும் 'உங்களுக்கு யார் நிதியுதவி செய்கிறார்கள்?' என்ற கேள்வியுடன் இத்தகைய புலவர்களை அணுகுவார்களா?

[ கார்டியன் (Guardian) செய்தித்தாளில் 7.2.2006 வெளியானதன் தமிழ் சுருக்கம் - தமிழில் பாபுஜி

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org