தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மருந்து வாங்கப் போறீங்களா? - அறிமுகம்

[இதனை எழுதிய திரு. இ.க. இளம்பாரதி, முதுநிலை மருந்தியலை, மருந்துண்ணறிவியல் துறையில் பயின்றுள்ளார் (Master of pharmacy in pharmacology). இப்பொழுது பெங்களூரில் ஒரு தனியார் மருந்து நிறுவனத்தில் மனித வழி ஆராய்ச்சித் துறையில் பணியாற்றி வருகிறார். இன்றைய காலகட்டத்தில் மருந்துகளின் நதிமூலம், மருந்துகளில் கலப்படம், போலிகள் உருவானது, உலகில் பல இடங்களிலும் நடந்த துயர்படுத்தும் பக்க விளைவுகள், பல்வேறு ஆய்வுகள், மருந்துகளின் எதிர் மறை விளைவுகள், உலகில் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் எப்படி உலவுகின்றன என்று பல விஷயங்களையும் ஆழமாக ஆய்ந்து புத்தகமாக வெளி இட்டுள்ளார். அதன் முதல் அத்தியாயத்தை ஒரு அறிமுகமாக இங்கு வெளியிடுகிறோம். புத்தகம் வாங்கவோ, அவருடன் தொடர்பு கொள்ளவோ விருப்பமுள்ளோர் அவரை 9444738556 தொடர்பு கொள்ளலாம்.]

மருந்து. இந்தச் சொல்லைப் பலர் தமது வாழக்கையில் கேட்டிருக்கலாம். அவ்வப்போது பயன்படுத்தியிருக்கலாம். ஆனால், குறிப்பிட்ட வயதைக் கடந்தவுடன், பலருக்கு மருந்துதான் வாழ்க்கையே.

நிலம், நீர், நெருப்பு, காற்று, மற்றும் ஆகாயம் என்ற இந்த ஐம்பூதங்கள்தான் மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாதவை. சில வேளைகளில், இந்த ஐம்பூதங்கள் இருந்தும் பலரால் உயிர் வாழ முடியாது. அந்த நேரத்தில் அனைவரும் சரணடையும் ஒரே இடம் இந்த மருந்து. மனிதனின் சராசரி வாழ்நாளான 60 வயதைத் தாண்ட வைத்து, பலரும் மணிவிழாக் காண வழி வகுத்தது. இந்த மருந்து சாவின் விளிம்புக்குச் சென்று காப்பாற்றப்படும் போதும், உடல் நலமில்லாத போது தனது பழைய வலிமையை மீட்டுக் கொடுக்கும் போதும், மருந்தின் முக்கியத்துவத்தை மனிதன் தெளிவாக அறிவான்.

இருபதாம் நூற்றாண்டின் மத்தியில்தான் ஆங்கில மருந்துவத்தின் வளர்ச்சி விசுவரூபம் எடுத்தது. இதற்கு இரண்டாம் உலகப்போர் ஓர் முக்கிய காரணமாக இருந்தது. ஒரு குறுகிய‌ காலகட்டத்துக்குள், மருத்துவ உலகின் முடிசூடா மன்னனாக ஆங்கில மருத்துவம் உருவெடுத்தது. இதற்கு காரணம், அறிவியல் அடிப்படையில் மெய்ப்பிக்கபட்டதேயாகும். ஒரு மருந்து உடலில் எப்படிப் பயணிக்கிறது? நோய்க்கான காரணிகளை அழிக்க எப்படி அது தன் இலக்கை அடைகிறது?

மருந்து எவ்வாறு மறு உரு அடைகிறது மற்றும் உடலை விட்டுக் கழிவாக வெளியேறும் வரை, உடலில் மருந்தின் பயண அனுபவங்களை அறிவியல் அடிப்படையில் அனைவரும் அறியும் படித் துல்லியமாக இருப்பதுதான் ஆங்கில மருத்துவத்தின் சிறப்பு. இதுவே, உலகில் இந்த மருத்துவத்தின் எழுச்சிக்குக் காரணம். அறிவியல் அடிப்படையில் மெய்ப்பிக்க முடியாததுதான், மற்ற மருத்துவ முறைகள், ஆங்கில மருத்துவத்துக்கு இணையாக வளர்ச்சி அடையாததற்கு காரணம்.

ஆங்கில மருத்துவத்தின் இந்த அசுர வளர்ச்சிக்கு மற்றொரு காரணம், உடனடித் தீர்வு. ஒரு பொத்தான் அளவுள்ள மாத்திரை அல்லது சில நீர்த்துளிகளாகக் கண்ணாடிக் குப்பியில் அடைக்கப்ப‌ட்ட மருந்து, உடலின் உள்ளே சென்றவுடன் சில மணித்துளிகளிலேயே அந்த நோய் மறைகிறது. உடல் வெப்பத்தைத் தணிக்கிறது. இதயத்தைச் சீராக இயக்குகிறது. மூளையில் உள்ள‌ குறைபாடுகளைச் சரி செய்கிறது. கல்லீரலை வேகமாக இயக்குகிறது. சிறுநீரகத்தைச் சரிய செய்கிறது. பல் வலி மறைகிறது. சளி ஒழுகுவது நிற்கிறது. இப்படிப் பல விதங்களில் மனிதனின் பிரச்சனைகளை உடனுக்குடன் சரிசெய்வது ஆங்கில மருத்துவத்தின் தனிச் சிறப்பு. மேலும், மருந்தே தேவையில்லை, நோய் வருவதற்கு காரணமாக இருக்கக்கூடிய மரபீனியை மாற்றியமைத்தாலே போதும் என்று சொல்லும் ஜீன் தெரபி (Gene therapy) வரை வளர்ந்து நிற்கிறது ஆங்கில மருத்துவம்.

சரி, இவ்வளவு சிறப்புகள் கொண்ட ஆங்கில மருத்துவத்தில் என்ன பிரச்சனை? அதன் சிறப்புகள்தான் பிரச்சனையே. ஒரு பொத்தான் அளவுள்ள மருந்து, நோயின் பிரச்சனைகளைத் தீர்க்கிறது என்றால், அந்த மருந்து எவ்வளவு வீரியமிக்க வேதிப் பொருள்களால் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும். ஒரு நோயைக் குணப்படுத்துவதற்காக, நாம் சாப்பிடும் இந்த வேதிப்பொருள்கள் நோயை மட்டும் குணப்படுத்தினால் மகிழ்ச்சி. ஆனால், கூடவே பல உறுப்புகளின் வேலைகளிலும் சென்று மூக்கை நுழைப்பதுதான் பிரச்சனையே. சிறிது தெளிவாகச் சொல்லேன் என்கிறீர்களா?

ஃபினைல் புரோபனோலமைன் (Phenyl Propanolamine) மூக்க‌டைப்பு மற்றும் சளியைக் கட்டுப்படுத்துவதற்காகப் பயன்படும் மருந்தாக நமது நாட்டில் வலம் வந்து கொண்டிருந்தது. இதே மருந்து, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் பசியைக் குறைத்து, உடல் எடையைக் குறைக்கும் மருந்தாகவும் பயன்படுகிறது. அதாவது, சளி மற்றும் மூக்கடைப்புக்காக நாம் சாப்பிடும் மருந்து. சளி மற்றும் மூக்கடைப்பைச் சரி செய்வதுடன் நின்றுவிடாமல், தேவையில்லாமல் நமது பசியையும் குறைக்கிறது.

இது ஒரு சிறு உதாரணம்தான். இன்னும் தெளிவாகச் சொல்வது என்றால், நீங்கள் கால் சுண்டுவிரலின் வலிக்காக‌ச் சாப்பிடும் மருந்து, உடலில் ரத்தத்தில் கலந்து கால் சுண்டு விரலின் வலியைக் குறைப்தோடு மட்டுமில்லாமல், அந்த மருந்துக்கான ரிசெப்டார்கள் (receptors) (ரிசெப்டார்கள் என்பவை புரதத்தினால் ஆன மூலக்கூறுகள், இந்த ரிசெப்டாரில் சென்று பொருந்தித்தான் உடல் உறுப்புகளின் வேலையை மாற்றியமைக்கும்) உடலில் எங்கெல்லாம் இருக்கின்றவோ, அங்கே சென்று அதில் அமர்ந்து வேறு வேலைகளிலும் ஈடுபடுகிறது.

ரிசெப்டார்கள், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம் மற்றும் மூளை உள்பட மற்ற உறுப்புக்களிலும் குறைந்த அளவிலோ அல்லது அதிக அளவிலோ இருக்கின்றன. இதனால், எந்த ஒரு மருந்தும் நோயைத் தீர்ப்பதோடு நின்று விடாமல், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், இதயம் மற்றும் மூளை உள்பட பல முக்கிய உறுப்புகளின் வேலைகளிலும் தலையிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. நான் காய்ச்சலுக்காக மருந்து சாப்பிடுறேன். எனது சிறு நீரகம், மூளை, இதயம் என அனைத்துமே சீராகத்தானே இயங்குகின்றன. எந்த ஒரு மாற்றத்தையும் உணரவில்லை என்று நீங்கள் சொல்லலாம். இதற்கான‌ விளக்கம் என்னவென்றால், நீங்கள் காய்ச்சலுக்காகச் சாப்பிடும் மருந்தின் மூலக்கூறு, அதன் வேதியியல் அமைப்பு (chemical structure) உடலில் உள்ள எந்தெந்த ரிசெப்டார்களில் பொருந்தக் கூடியதாக இருக்கிறதோ, அவை அனைத்திலும் பொருந்தும். அந்தப் பொருந்தக்கூடிய ரிசெப்டார்கள், உங்கள் சிறுநீரகத்தில் இருந்தால், கண்டிப்பாக அதன் வேலைகளில் மாற்றங்கள் நிகழ்த்தும்.

இதில் குறிப்பிடும்படியான செய்தி என்னவென்றால், அனைத்து விதமான மருந்துகளும் செயலாற்றக்கூடிய பல வகையான ரிசெப்டார்கள், உடல் முழுவதும் பரவியிருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட மருந்தை நாம் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளும்போதுதான், இந்தப் பிரச்சனை விசுவரூபம் எடுக்கிறது. ஏனென்றால், காலப்போக்கில் நோய் குணமாவதோடு, அந்த மருந்து பொருந்தக்கூடிய ரிசெப்டார்கள் அதிகம் உள்ள மற்ற உறுப்புகளும் பழுதடைந்து அல்லது செலிழந்துவிடுகின்றன. எனவே, உறுப்புக்களில் பிரச்சனை அல்லது செயலிழப்பு என்று வரும்போதுதான் உங்களால் உணரமுடியும்.

இது போன்று தனது வேலையைச் செய்வதோடு நின்றுவிடாமல், மற்ற உறுப்புகளின் வேலைகளிலும் அதிகமாகத் தலையிட்டு இறுதியில் உயிருக்கே ஆபத்தை விளைவிப்பதாகக் கருதக்கூடிய மருந்துகள்தான், அவ்வப்போது உலகில் பல நாடுகளில் தடை செய்யப்படுகின்றன. ஆனால், நம்மில் பலர் படிக்காமலேயே பாதி மருத்துவராக ஆகிவிட்ட நமது நாட்டில், இது போன்ற உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய மருந்துகள் தடை செய்யப்படாமல் இருப்பதுதான் வருத்தம் அளிக்கக்கூடிய செய்தி. இது போன்ற காரணங்களால் தான் அவ்வப்போது, மருந்தினால் ஏற்படும் பல உயிர் இழப்புகள் எச்சரிக்கை மணியாக ஒலித்துக் கொண்டு இருக்கின்றன.

பல நாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்று தெரிந்தும் இந்தியாவில் தடை செய்யப்படாத காரணத்தால் மக்கள் நலன் விரும்பும் பல மருத்துவர்கள் கூட அம்மருந்துகளை மக்களுக்குப் பரிந்துரைக்கும் நிலைக்குக் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பது வருத்தமளிக்கக் கூடிய விசயமாகும். மருத்துவத்துறையைச் சார்ந்தவர்களான மருந்தாளுநர்கள் மற்றும் செவிலியர்களில் பலருக்கும், இதுபோல் தடைசெய்யபட்ட மருந்துகளைப் பற்றித் தெரியவில்லை என்பது வேதனை அளிக்கக்கூடியது. இவர்களின் நிலையே இப்படி என்றால், மற்ற துறைகளைச் சார்ந்தவர்கள் மற்றும் சராசரிப் பமரனின் நிலை என்ன?

மற்ற துறைகளைச் சார்ந்தவர்களும் மற்றும் சராசரிப் பாமரனும் மருந்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா என்றால், ஆம் என்பதுதான் பதில். மருந்தைப் பற்றி முழுவதும் தெரிந்து வைத்திருக்க வேண்டியதில்லை. ஆனால் மருந்து பற்றிய விழப்புணர்வு (அடிப்ப‌டைத் தகவல்கள்) அனைவருக்கும் வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். உயிரைக் காப்பாற்றுகின்ற மருந்து, அந்த உயிரையே பறிக்கும் போது தேவைதானே!

மருந்து பற்றிய விழப்புணர்வு அவ்வளவு முக்கியமா? நாம் வெளியே உடுத்தும் ஆடை, அணிகலன், முகப்பூச்சு போன்றவற்றுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தில், ஒரு சதவீதமாவது உடலுக்கு உள்ளே எடுத்துக்கொள்ளும் மருந்து மற்றும் உணவுக்குக் கொடுத்திருப்போமா? காலில் அசுத்தம் ஒட்டிவிடாமல் இருக்கவே, நான்கு கடைகளில் ஏறி இறங்கி காலணி வாங்கும் நாம், மருந்தே அசுத்தமாக மாறி நிலை பற்றித் தெரிந்துவைத்திருக்கிறோமா, என்ன? அவ்வளவு ஏன், உடலை விட்டு வெளியேறும் கழிவை வாங்கும், கழிவறை உபகரணத்தையே தரமானதா என்று பார்த்து வாங்கும் நாம், உடலுக்கு உள்ளே செல்லும் மருந்தைப் பற்றித் தெரிந்துவைத்திருப்பதில் தவறில்லை.

நமது உதிரத்தை வெப்பப்படுத்தும் செய்தி, நிறுவனங்கள், இந்தியாவில் மருந்தை விற்பனை செய்யும் போது, இந்த மருந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் (USFDA) அனுமதி பெற்றது என்று கூவிக் கூவி நமது மருத்துவர்களிடம் சொல்லி விற்கும் பல மருந்து நிறுவனங்கள், அதே அமெரிக்க மற்றும் மருந்து நிர்வாகத்துறையினரால் தடை செய்யப்பட்ட பல மருந்துகளை, இந்தியாவில் சத்தம் இல்லாமல் விற்றுத் தள்ளுகின்றன.

இந்தியா என்ன உங்களுக்கு தேவையற்ற மருந்தைக் கொட்டும் குப்பை தொட்டியா? என்றல்லவா கேட்கத் தோன்றுகிறது.

நாங்கள் முப்படி கோடி ஜனங்களும்
நாய்களோ பன்றிச் - சேய்களோ?
நீங்கள் மட்டும் மனிதர்க ளோவிது
நீதமோ? பிடி - வாதமோ?

என்ற‌ மகாகவியின் வரிகள் மனத்தில் அழுத்தமாக எழுந்து செல்கின்றன. மருந்தின் மறுபக்கம் இந்த நிலையில் இருக்க, மருந்து விழப்புணர்வில் நமது நிலை என்ன?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org