தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


பாம்பின் வாய்ப் பாடம்

2001ல் குஜராத் மாநிலத்தில் மிகப் பெரிய பூகம்பம் தாக்கிப் பல்லாயிரக் கணக்கானோர் இறந்தனர். 2004ல் சுனாமி தாக்கிக் கிழக்குக் கடற்கரையில் சொல்லொணாச் சேதம் ஏற்பட்டது. வருடா வருடம் இயற்கையின் சீற்றம் அதிகமாகிக் கொண்டே போகிறது. 2011ல் ஃபுகுசிமாவில் ஏற்பட்ட நில நடுக்கமும் அதனால் ஏற்பட்ட அணு உலை விபத்தும் உலகையே உலுக்கி எடுத்து விட்டன. எண்ணற்றோர் இறந்தது மட்டுமன்றி இருப்போர் நிலையும் கவலைக்கிடமாக உள்ளது. தற்போது 2000 பேர் தைராய்ட் புற்றுநோயால் பாதிக்கப் படும் அபாயத்தில் இருக்கிறார்கள். இதன் நாட்பட்ட தாக்கம் எப்படி இருக்கும் என்றே அளவிட முடியாத நிலையில் இருக்கிறோம். ஃபுகுசிமாவிலன் கதிர்வீச்சின் தாக்கம் நாங்கள் அளவிட்டதைப் போல் 11 மடங்கு இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.

இந்த வருடம் உத்தரகண்ட் மாநிலத்தில் மழையால் பெரு வெள்ளமும், மண் அரிப்பும் ,பேரழிவும் எல்லாம் கண்டோம்; காண முடியாத சோகத்துடன் தொலைக்காட்சிகளில் உயிர்சேதங்களைக் கண்டோம். ராணுவம் தியாகத்தின் உச்சிக்குப் போய் தங்கள் நல்லுயிர் ஈந்தும் பலரைக் காத்தனர். எனினும் இது ஏன் ஏற்பட்டது என்று அறிந்து கொண்டோமா? அரசின் ஒவ்வொரு வாரியமும், அமைச்சும் இன்னொன்றைக் குறை கூறுவதில்தான் குறியாக உள்ளன.

சுனாமிக்குப் பின் மத்திய அரசு தேசிய பேரிடர் நிர்வாக ஆணையம் (National Disaster Management Authority) என்ற ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள். உத்தரகண்டில் 11000 பேருக்கு மேல் இறந்திருக்கக் கூடும் என்று இந்த அமைப்பு கூறுகிறது. இவ்வழிவுக்குக் காரணம் திட்டமற்ற மேம்படுத்துதல்தான் (unplanned development) என்று மேதா பட்கர் கூறியிருக்கிறார். அவரை யாரும் மறுத்துப் பேசவில்லை. இது உண்மைதான் என்று NDMA ஒப்புக்கொண்டிருக்கிறது. “ஆற்றுப் படுகைகளில் அடுக்கு மாடிக் கட்டிடங்களை அனுமதிக்காதீர்கள் என்று நாங்கள் பலமுறை எச்சரித்து உள்ளோம் ஆனால், தடுக்க எங்களுக்கு அதிகாரம் இல்லை; மாநில அரசுகள்தான் எங்கள் பரிந்துரைகளைச் செயலாக்க வேண்டும்” என்று கூறியுள்ளது.

சென்ற வருடம் உத்தரகண்ட் மாநிலத்தின் சூழல் பாதுகாப்பு ஆணையத்தின் மறுப்பையும் மீறி பாவுர் ஆற்றின் படுகையில், சூழல் பாதுகாப்புக்கும், உயிர்ப் பன்மையத்திற்கும் முக்கிய இடங்களில் ஒன்றாக விளங்கும் கார்பெட் தேசியச் சரணாலத்தின் மிக அருகே (32 கி.மீ) மணல் மற்றும் கல் எடுப்பதற்கு அனுமதி வழங்கியிருக்கிறது அரசு! இங்கே நம் தமிழ்த் திருநாட்டில் பவானி ஆற்றின் படுகையில் 200 கி.மீ நீளத்திற்குக் கரைகளைக் கான்க்ரீட் கொண்டு மூடும் திட்டம் ஒன்று மத்திய அரசின் அனுமதிக்கும் உலக வங்கியின் கடனுக்கும் காத்திருக்கிறது!

தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பு பழுப்பு நிலக்கரி மற்றும் மீத்தேன் எரிவாயு ஆகியவற்றைச் சுரண்டி எடுப்பதற்காகத் தனியார் கம்பனி ஒன்றிற்குத் தாரை வார்த்துக் கொடுக்கப் பட்டுள்ளது. கூடங்குளம் திறந்தாயிற்று. பொருளாதார வளார்ச்சி என்ற பெயரில் எண்ணற்ற கனிமச் சுரங்கங்களுக்கு நாடு முழுதும் அனுமதி அளித்தாயிற்று.

மேம்படுத்துதல் என்ற பெயரில் இயற்கையுடன் விளையாட, விளையாட இயற்கை, பெறும் சீற்றத்துடன் மேலும், மேலும் நம்மை அழிக்கிறது. ஆனால் அடிப்படைப் பாடங்களைக் கற்க யாரும் தயாரில்லை.

“தேம்பூண் சுவைத்து ஊன் அறிந்தறிந்தும் பாம்பார் வாய்க் கைவிடல்”

(பாம்புப் புற்றில் கைவிட்டு விடம் தீண்டியும், மீண்டும் அதிலேயே கைவிடுவது போல்) என்று திருவாய்மொழியில் வரும். இயற்கைப் பேரிடர்கள் என்னும் அரவின் நஞ்சு எவ்வளவு தாக்கியும் நாம் மேம்படுத்துதலைக் கைவிடும்பாடம் கற்பதாய் இல்லை. இனிமேலாவது விழிப்போமா?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org