தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


இன்று செய்தித்தாளைத் திறந்தால் எப்பொழுதும் கண்ணில் படுவது இறப்பையும், கொலையையும் பற்றிய செய்திகளே. குண்டு வெடிப்பு, தீவிரவாதக் கொலைகள், நிலச்சரிவு, இயற்கைச் சீற்றங்கள், கட்டிடம் இடிந்து சாதல், ரயில் கவிழ்தல், போக்குவரத்து விபத்துக்கள், அரசியல் கொலைகள், ஊழலை மறைக்கக் கொலைகள், மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் கல்விச் சிறார், இணையத்தில் தவறான நடத்தையால் ஒருவரை ஒருவர் கொல்லும் காதலன், காதலிகள் போன்று எண்ணற்றவை. இவை தவிரப் பெரும் வேதனையாய்க் கடன்சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் - மிகச் சமீபத்தில் வளமான காவிரிக் கடைமடைப் பாசனப் பகுதியில் கூட ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இவ்வருடம் தென்மேற்குப் பருவ மழை ஓரளவே பெய்யும் என்று கூறியிருக்கிறார்கள். பருவ மாற்றம், மற்றும் புவி வெப்பமடைதல் என்பதை எப்போதோ நிகழப் போகும் பிற்கால இடர் என்று இவ்வளவு நாள் அலட்சியப் படுத்தி வந்தோம். தொடர்ந்து மூன்றாவது வருடமாக மழை பெய்யாதோ என்னும் அச்சம் அடிவயிற்றைக் கவ்வும்போது இவ்விடர் இன்றைய நிதர்சனமாகி விட்டது புரிகிறது.

இயற்கை வளங்களை அழித்துக் காசாக்கிக் கணக்குக் காட்டும், இந்த வளர்ச்சியும், மேம்படுத்தலும் ஏழைகளையும், கிராமங்களையும் காவு வாங்கித்தான் வளரும் என்று நாம் பல வருடங்களாக எச்சரித்து வருகிறோம். இன்று கிரேக்க நாடு படும் பாட்டில் இருந்து அதைத் தெளிவாக அறியலாம். கிரேக்க நாடு 1981ல் தாராளமயத்திற்கும், உலக மயத்திற்கும் தன் சந்தைகளைத் திறந்து விட்டது - நம்மை விடப் பத்து ஆண்டுகளுக்கும் முன்னரே! ஐக்கிய ஐரோப்பாவுடன் கிரீஸ் இணைந்தது. அதன் நாணயமும் கிரேக்க டிராக்மாவில் இருந்து யூரோ ஆனது.

முழுக் கட்டுரை »

தோரோ பக்கம் - சாட்சி


நாம் எல்லோருமே வாழ்வின் ஒரு கட்டத்தில் காணும் இடம் எல்லாம் இதை நம் வீட்டு மனையாக்கிக் கொள்ளலாமோ என்று சிந்தித்ததுண்டு. நான் வாழ்ந்த இடத்தில் இருந்து 12 மைல் தூரத்திற்குக் காணும் இடத்தையெல்லாம் நான் அளந்ததுண்டு. கற்பனையில் நான் எல்லாப் பண்ணைகளையும் ஒன்றுக்குப்பின் ஒன்றாய் வாங்கி இருக்கிறேன். ஒவ்வொரு உழவனின் பண்ணையிலும் நான் நடந்து, அதில் உள்ள ஆப்பிள் பழங்களை உண்டு, பண்ணை நிர்வாகத்தைப் பற்றி அவ்வுழவருடன் வம்பளந்து, அவர் சொன்ன விலைக்கு , என்ன விலையாயினும், வாங்கி, அவரிடமே அதை என் நினைவுகளில் அடமானம் வைத்து, அவர் வாக்கே சாசனமாய் - கிரயம் செய்வதைத் தவிர எல்லாம் செய்திருக்கிறேன்! அப்பண்ணையையும், அவரையும் நினைவுகளில் பண்படுத்தியபின், அப்பண்ணையை முழுவதுமாய் அனுபவித்தபின், வாங்காமல் அமைதியாய்ப் பின்வாங்கி இருக்கிறேன். விரைவில் மேம்படுத்தப் படாத இடங்கள் பலவற்றை வீட்டு மனைக்கென நான் கண்டறிந்ததுண்டு; அவை ஊரிலிருந்து தொலைவில் இருப்பதாகப் பலர் எண்ணக் கூடும், ஆனால் என் கண்ணிற்கு அவ்விடத்தில் இருந்து ஊர் மிகத் தொலைவாக இருப்பதாகப் பட்டது.

ஒவ்வொரு இடத்திலும் அரை நாள் அமர்ந்து என்னென்ன மரம் நடலாம், பண்ணையின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும், பழ மரங்கள் எங்கே நடுவது, கால்நடை எங்கே மேய்ப்பது, விறகை எங்கு அடுக்குவது - கோடை , இளவேனில், பனி போன்ற காலங்கள் எப்படி இருக்கும் என்றெல்லாம் நான் கற்பனை செய்து விட்டுப் பின் அவ்விடத்தை அப்படியே தரிசாக விட்டு விட்டு நான் என் வழியே சென்றதுண்டு - ஏனெனில் ஒரு மனிதன் எவ்வளவு விஷயங்களை அப்படியே விட முடிகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவன் செல்வந்தன்!

முழுக் கட்டுரை »

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


இதுவரை நாம் தற்போதுள்ள பொருளாதாரக் கொள்கையின் மூடத்தனத்தையும், அதன் விளைவாக உலக நாடுகள் வாணிபத்துக்காகப் போர் புரிந்து கொள்வதும், வளங்களுக்காக வறிய நாடுகளை மக்களாட்சி என்னும் போர்வையில் ஊடுருவ முயல்வதையும், அதனால் விளையும் சூழல் மற்றும் மனித உடல், மனக் கேடுகளையும் பார்த்தோம். பொருளாதாரக் கொள்கை என்பது ஒரு நாடு செல்லும் திசை. அறிஞர் குமரப்பா கூறியது போல், ஒரு நாட்டின் கொள்கை அதன் அடிப்படைத் தத்துவ நம்பிக்கைகளின் பேரில் அமைய வேண்டும். உலகின் இப்போதும் தொடர்ந்து வரும் இரு பெரும் நாகரிகங்கள், கலாசாரங்கள் என்று பார்த்தால் சீனா, இந்தியா இரண்டுதான் - கிரேக்கம் பல ஞானிகளையும், அறிஞர்களையும் உலகிற்களித்தாலும் இன்று மேலை நாடுகளின் கொள்கைகளைக் காப்பியடித்ததால் ஓட்டாண்டியாகி நிற்கிறது. சீனா, இந்தியா இரண்டு நாட்டின் அறிஞர்களும், நிறைவை விழைதல், இயற்கையை மதித்தல், உடல், மன நலம் பேணுதல் ஆகிய கொள்கைகளையே பல்வேறு வார்த்தைகளில் பல்வேறு மொழிகளில் எடுத்துரைத்துள்ளனர். காந்தி தோல்ஸ்தாயிடம் உங்கள் எழுத்துக்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன என்ற பொழுது தோல்ஸ்தாய் 'நான் சொல்வது எல்லாமே உங்கள் திருக்குறளில் ஏற்கனவே சொன்னதுதான்' என்று எழுதினாராம்.

எனவே நாம் கிரேக்க நாட்டைப் போல் நம் அழிவை நாமே தேடிக் கொள்ளாமல், நம்மிடம் தொன்றுதொட்டு இருந்து வரும் அறிவுக் களஞ்சியங்களின் முத்துக்களைச் செயல்படுத்தினாலே போதும். செயல்முறையில் பார்த்தால் நம் பொருளாதாரக் கொள்கை தற்சார்பு என்னும் அடிப்படையை நோக்கியே செல்ல வேண்டும். தன் தேவைகளுக்குப் பிறரைச் சாராதவன்தான் உண்மையான செல்வந்தன். எனவே நம் பொருளாதாரக் கொள்கை

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org