சூழல்சுவடு குறைவான, ஆனால் கான்க்ரீட் வீட்டைப் போன்ற நீடித்த ஆயுளும், அடிக்கடி செப்பனிடத் தேவையற்றதும் ஆன வீடு ஒன்றைப் பற்றிச் சென்ற இதழில் (கற்பகம் ஸ்ரீராம்) பார்த்தோம். இவ்விதழில் அவர்களுக்கு அருகிலேயே, அச்சுமண் சுவர் (சுடாத செங்கல்) கொண்டு தன் வீட்டைக் கட்டி வரும் திரு.சித்தார்த் அவர்களைப் பற்றிக் காண்போம். இவர் ஏற்கனவே தாளாண்மையில் தமிழக ஏரிப்பாசனம் என்ற கட்டுரைத் தொடரை எழுதியவர். சித்தார்த் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்தவர். ஐ.ஐ.டியில் பி.டெக் அதன் பின் ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ படித்தவர். இப்பொழுது ஒழவெட்டிக் கிராமத்தில் 2 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார். காய்கறிகளை இயற்கையாக விளைத்து அதை அருகில் உள்ள கிராமங்களில் விற்று வருகிறார்!
இதற்கு முன், நாம் ஏற்கனவே லாரி பேக்கரின் MUD என்ற குறுநூலில் இருந்து தொகுத்தவற்றைச் சற்று நினைவு கொள்வோம்:
அச்சுமண் சுவர்
அச்சுமண் என்பது மண்தேர்வு செய்தபின் அதை ஒரு அச்சில் வார்த்துப் பின் வெயிலில் உலர்த்தி செங்கல்கள் போல் செய்து அவற்றை வைத்து வீடு கட்டுவது. இது மெக்சிகோ நாட்டில் பாரம்பரியமாக இருக்கும் தொழில்நுட்பம். இதனை அடோபி (adobe) என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இத்தொழில்நுட்பம் முன்பு செல்வந்தர்களின் வீடு கட்டப் பயன் படுத்தப் பட்டிருக்கிறது.” பச்சை மண் செங்கல்” என்றும் இதனை அழைப்பார்கள். இதில் இரண்டு மாடிக் கட்டிடங்கள் எளிதாய்க் கட்டலாம்"