தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


இம்மாதம் நாம் காணவிருக்கும் நண்பர், கார்த்திக் என்கிற சுப்ரமணியன். இவ்விளைஞர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் வணிகவியல் பயின்று, ஒரு பெரிய பாட்டரி நிறுவனத்தில் கணக்கியல் (வரவு, செலவு, வரிக்கணக்கு) துறையில் பணி புரிந்தவர். அவர் மனைவி, ப்ரியாவும் ஒரு சென்னைவாசியே. அவரும் சென்னையில் பிறந்து, படித்து, ஒரு பன்னாட்டு வங்கியில், மென்பொருள் துறையில் மேலாளராகப் பணி புரிந்து கொண்டு இருந்தவர்.

இவ்விருவரும் "நல்ல வேலை", சுகமான நகர வாழ்க்கை, அங்குள்ள வசதிகள் எல்லாவற்றையும் துச்சமாய் ஒதுக்கி விட்டு, பொள்ளாச்சிக்கு சுமார் பன்னிரண்டு கி. மீ தொலைவில், அதிகம் போக்குவரத்து வசதி இல்லாத கோடங்கிப்பட்டி கிராமத்திற்கு தம் ஒரு வயது கூட நிறையாத குழந்தையுடன் கடந்த வருடம் குடி பெயர்ந்துள்ளனர். என்ன தேடல் இவர்களை இந்த வழக்கத்துக்கு மாறான மாற்றத்திற்குத் தூண்டியது என்ற வியப்புடனே இந்த‌ உரையாடல் / நேர்காணலுக்குச் சென்றோம்.

சுப்ரமணியன் மற்றும் ப்ரியா இருவருமே, மிக எளிய எதிர்பார்ப்புகளும் உயர்ந்த சிந்தனைகளும் உள்ளவர்கள் என்பது நாம் அவர்களுடன் பேசத் துவங்கியவுடனே தெளிவாகிறது. எங்களின் இந்த இட, வாழ்க்கை முறை மாற்றம் ஒரு சாதனையல்ல, மிகச் சுயநலமான, இயல்பான முடிவே என்கிறார் ப்ரியா.

"நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய செல்வம், காகிதப் பணமோ, விலை உயர்ந்த ஆடைகளோ, விளையாட்டுச் சாதனங்களோ அல்ல. திடமான உடலும், தெளிவான சிந்தனைத் திறனும், இயற்கையைப் பேணும்/ நேசிக்கும் வாழ்க்கை முறையுமே. எங்கள் குழந்தையின் மேல் நாங்கள் உண்மையான அக்கறை கொண்டுள்ளதாலேயே இந்த முடிவை எடுத்தோம். தவிரவும், என்னுடைய மதிப்பீடுகள் எல்லாருடைய மதிப்பீடுகளை சார்ந்தே இருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லையே"

முழுக் கட்டுரை »

உணவில் ஒளிக்கப்பட்ட‌ உண்மைகள் - பரிதி


உலகில் மிக அதிக அளவில் உணவு உற்பத்தியாகிறது. ஆனால், ஏழு பேரில் ஒருவருக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை. ஏன்? உற்பத்தியாகும் உணவு எங்கே போகிறது? எவ்வளவு வீணாகிறது? இது போன்ற பற்பல வினாக்களுக்கு இந்தக் கட்டுரை மறுக்கவியலாத ஆதாரங்களுடன் விடை தருகிறது. இது கனடா நாட்டைத் தாயகமாகக் கொண்ட ETC எனும் தன்னார்வ அமைப்பினர் 2013-ஆம் ஆண்டு உருவாக்கிய அறிக்கையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம். ஆங்கில மூலக் கட்டுரை http://www.etcgroup.org/articles எனும் இணைய தளத்தில் உள்ளது.

கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. - பரிதி (thiru.ramakrishnan@gmail.com), மொழிபெயர்ப்பாளர்

உலக உணவுப் பேராயம் 1963-ஆம் ஆண்டு சூன் மாதம் கூடிற்று. "நம் வாழ்நாளுக்குள் பசியையும் வறுமையையும் இப்புவியில் இருந்து ஒரேயடியாக ஒழிப்பதற்கு நம்மால் முடியும், அதற்கான திறன் நம்மிடம் உள்ளது - அதைச் செய்யவேண்டும் எனும் தீவிரம் இருந்தால் போதும்" என்று அந்தப் பேராயம் ஒன்றிய நாடுகளவையிடம் தெரிவித்தது. உணவு குறித்து உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் கருத்தரங்குகளில் இது தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆனாலும், உணவு உற்பத்தி, வழங்கல், நுகர்வு ஆகியன தொடர்பாக அரசுகள் போதுமான அளவு அறிந்திருக்கவில்லை.

முழுக் கட்டுரை »

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்


இதுவரை உழவை வெல்வது எப்படி என்ற தலைப்பில் அடிப்படை தற்சார்பு பண்ணைய கொள்கைகளையும் அக்கொள்கைகளை நடைமுறையில் கடைப்பிடித்துவரும் சில பண்ணைகளையும் பற்றி அறிந்தோம். இந்த பண்ணைகள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் வேறுபட்ட தட்பவெப்ப சூழலில் அமைந்துள்ளன. இந்த பண்ணைகள் அனைத்தும் மிகவும் மோசமான, போதிய தண்ணீர் வசதியற்ற சூழலில் அமைந்துள்ளன. கடுமையான தண்ணீர் பற்றாக்குறையையும் மிகவும் சுலபமான முறையில் சிறிதளவே பெற்ற மழையினால் மிகவும் எளிமையான தொழில்நுட்பத்தினால் (மூடாக்கு) சமாளித்து பயிர்கள் காப்பாற்றப்பட்டு பின்னாளில் நீர் வாதியும் பெறப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாம் அறிவது - தினமும் மழை பெய்யும் ஜப்பானில் மட்டும்தான் இயற்கை வழி விவசாயம் வெற்றி பெரும் என்ற கருத்து தவறானது என்பதே. (குறைந்த அளவு மழை பொழியும்) எந்த பகுதியிலும் இயற்கை வழி நிலைத்த நீடித்த விவசாயம்தான் சாத்தியப்படும் என இதன் மூலம் நிதர்சனமாக நிரூபிக்கப்படுகிறது.

இன்று உலக அளவில் மிகவும் பேசப்படுவது தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையே. நிலத்தடி நீர் குறைவு,மழை குறைவு அல்லது நீர் மாசுபாடு குறித்தே அனைவரது பேச்சும் கவலையும் உள்ளது. இதற்கு இன்று இயற்கை வழி வேளாண்மை ஒன்றே மிகவும் எளிமையான தீர்வாக அமையும். இயற்கை வழி விவசாயத்தின் மூலம் நிலத்தடி நீர் மிகவும் எளிய முறையில் சேமிக்கப்படுகிறது. நீரும் மாசுபடுவதில்லை. அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் சிறிதளவு மழையே அந்த பகுதி மக்களுக்கும் பயிர்களுக்கும் போதுமானதாக இருக்கும். பல கிலோமீட்டர் தூரம் குடிதண்ணீரை கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. பராமரிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கில் வருடம் முழுவதும் செலவு செய்ய வேண்டியதும் இல்லை.

முழுக் கட்டுரை »

கிராமிய வாழ்வாதரங்களுக்கு ஒரு பயிற்சி - ராம்


[கடந்த சில மாதங்களாக ராம் அவர்கள் கிராமிய வாழ்வாதாரங்கள் குறித்து எழுதி வருகிறார். இவர், ஆரோவில்லுடனும், தமிழக அரசுடனும் இணைந்து, முழுவதும் தற்சார்பான வாழ்வாதாரப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளார். அது பற்றிய அறிமுகம் இது ]

ஒரு அழகான சூழலில், வாழ்வாதாரத்தைக் குறித்துக் கலந்து உரையாடவும், சிந்திக்கவும், புதிய நூதன முயற்சிகளைக் கண்டறிய‌வும் நேர்ந்தால், நமது மக்கள் தற்சார்பு முயற்சிகளை முனைவார்கள். “நாங்க இந்த நாள்வரை எந்த அளவிற்கு மண்ணைப் பாதுகாக்க தவறிவிட்டோம் என்று இன்றுதான் உணர்ந்தேன், அவரு மண்ண உருவாக்கறாரு”, என்று முதல் முறையாக பெர்னார்டு மற்றும் தீபிகா அவர்களது “பெப்பல் கார்டன்” (pebble garden) அல்லது கூழாங்கல் பூங்காவிலிருந்து திரும்பிய ஒரு கிராமத்துப் பெண் ஆச்சரியத்துடன் கூறினார். இந்தச் சிறு பண்ணையை நேரில் சென்ற யாவரும் வியந்து பார்ப்பது, அவர்களது விடாமுயற்சி, இயற்கையுடன் இசைந்து வாழும் எளிமை, அந்தத் தோட்டத்தில் அவர்கள் இதனால் ஏற்படுத்தக்கூடிய விந்தைக‌ள்.

ஆரோவில் எனப்படும் ‘சர்வதேச கிராமம்”, தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், பாண்டிச்சேரியை ஒட்டிய கிராமங்களில் ஏறத்தாழ 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1969ஆம் ஆண்டு அரவிந்தர் நினைவில், அன்னை ஆசியுடன், “என்றும் குன்றா இளமையுடனும், இயற்கை ஒத்த வாழ்வினிற்கும், தொடர் பயிற்சி மற்றும் கல்விப் பணிக்காகவும்” இந்த விந்தை கிராமமான ஆரோவில் துவங்கப்பட்டது. இங்கு வந்த முதல் வெளிநாட்டவர்கள் யாவரும், இந்தியாவின் ஆன்மீக அறைகூவலுக்கு செவிமடுத்துப் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து சேர்ந்தனர். இன்று ஏறத்தாழ 50 நாடுகளைச் சேர்ந்த 2500 பேர் ஒன்றாக வாழும், ஆரோவில் என்னும் கூட்டு முயற்சி உலகத்தில் வேறு எங்கும் சாத்தியமில்லை என்று பன்னாடுகளைப் பயணித்த பலரும் கூறுகின்றனர்.

முழுக் கட்டுரை »

 
 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org