தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்


[பசுமை வெங்கிடாசலம் : +91 94435 45862]

இதுவரை உழவை வெல்வது எப்படி என்ற தலைப்பில் அடிப்படை தற்சார்பு பண்ணைய கொள்கைகளையும் அக்கொள்கைகளை நடைமுறையில் கடைப்பிடித்துவரும் சில பண்ணைகளையும் பற்றி அறிந்தோம். இந்த பண்ணைகள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டின் வெவ்வேறு மாவட்டங்களில் வேறுபட்ட தட்பவெப்ப சூழலில் அமைந்துள்ளன. இந்த பண்ணைகள் அனைத்தும் மிகவும் மோசமான, போதிய தண்ணீர் வசதியற்ற சூழலில் அமைந்துள்ளன. கடுமையான தண்ணீர் பற்றாக்குறையையும் மிகவும் சுலபமான முறையில் சிறிதளவே பெற்ற மழையினால் மிகவும் எளிமையான தொழில்நுட்பத்தினால் (மூடாக்கு) சமாளித்து பயிர்கள் காப்பாற்றப்பட்டு பின்னாளில் நீர் வாதியும் பெறப்பட்டுள்ளது. இதன் மூலமாக நாம் அறிவது - தினமும் மழை பெய்யும் ஜப்பானில் மட்டும்தான் இயற்கை வழி விவசாயம் வெற்றி பெரும் என்ற கருத்து தவறானது என்பதே. (குறைந்த அளவு மழை பொழியும்) எந்த பகுதியிலும் இயற்கை வழி நிலைத்த நீடித்த விவசாயம்தான் சாத்தியப்படும் என இதன் மூலம் நிதர்சனமாக நிரூபிக்கப்படுகிறது.

இன்று உலக அளவில் மிகவும் பேசப்படுவது தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினையே. நிலத்தடி நீர் குறைவு,மழை குறைவு அல்லது நீர் மாசுபாடு குறித்தே அனைவரது பேச்சும் கவலையும் உள்ளது. இதற்கு இன்று இயற்கை வழி வேளாண்மை ஒன்றே மிகவும் எளிமையான தீர்வாக அமையும். இயற்கை வழி விவசாயத்தின் மூலம் நிலத்தடி நீர் மிகவும் எளிய முறையில் சேமிக்கப்படுகிறது. நீரும் மாசுபடுவதில்லை. அந்தந்த பகுதிகளில் கிடைக்கும் சிறிதளவு மழையே அந்த பகுதி மக்களுக்கும் பயிர்களுக்கும் போதுமானதாக இருக்கும். பல கிலோமீட்டர் தூரம் குடிதண்ணீரை கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. பராமரிப்பு என்ற பெயரில் கோடிக்கணக்கில் வருடம் முழுவதும் செலவு செய்ய வேண்டியதும் இல்லை.

அடுத்து இந்த உலகத்தை அச்சுறுத்தும் செயல்பாடு காற்று மாசு அடைவது ஆகும். காற்று மாசடைவதால் எண்ணிலடங்காத தொல்லைகளுக்கு மக்கள் ஆட்படுகின்றனர். இயற்கை வழி விவசாயத்தின் மூலம் மரங்கள் நஞ்சற்ற சூழலில் வளர்க்கப்படுவதால் காற்று மாசடைவதில்லை. மாறாக அது சுத்தப்படுத்தப்படுகிறது. மரங்கள் பிற்காலத்தில் சரியான பருவமழை பெய்வதற்கும் ஏற்ற சூழலை உருவாக்குகின்றன.

நாம் இதுவரை பார்வையிட்ட மாதிரி பண்ணைகள் போல் ஒவ்வொரு கிராமத்திலும் சில பண்ணைகள் அமைந்தாலே போதும், பலவிதமான சூழல் மற்றும் பொருளாதார சிக்கல்கள் மிகவும் எளிமையாக தீர்ந்துவிடும். விவசாயி கடன்படத்தேவையில்லை. இவ்வளவு மின்சாரம் தேவைப்படாது. போக்குவரத்து மூலம் உண்டாகும் செலவு மற்றும் மாசு குறைந்துவிடும். உணவுப்பொருட்கள் வீணாகாது. அந்தந்த கிராமத்தில் உள்ளவர்களுக்கு அங்கேயே உற்பத்தி ஆகும் பொருட்கள் மிகவும் குறைந்த விலையில் (இடைத்தரகர்கள் இன்றி) கிடைக்க வாய்ப்புள்ளது. நெகிழிப் பையில் ரசாயனங்களுடன் அடைக்கப்பட்ட‌ ஆயத்த உணவுகளை உண்டு நோய் மற்றும் கடன்படுவதும் தவிர்க்கப்பட்டு ஆரோக்கியத்துடனும்,மன நிம்மதியுடனும் வாழ முடியும்.

பல ஆண்டுகளுக்கு முன் ஒவ்வொரு விவசாயியும் தனது குடும்பத்திற்கும் தன்னைச் சார்ந்துள்ள பண்ணை குடும்பங்களுக்கும் உண்டான தேவைகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து அந்த அந்த பருவத்தில் பயிர் செய்யும் உற்பத்தி முறை (Need Based Farming என்று சொல்லப்படும் தேவைக்கேற்ற விவசாயம்) அமைந்திருந்தது. அன்று வருவாய்க்காக அவர்கள் எந்த விதமான பயிர்களையும் பயிர் செய்யவில்லை. மிகவும் எளிமையாக ஆனந்தமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தனர். அந்தந்த பகுதிக்கு ஏற்ற பயிர் ரகங்களும், தொழில்நுட்பமும் மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. முக்கியமாக விதைகள் அவர்கள் வசமே இருந்தன.

ஆங்கிலேயர்களின் ஆக்கிரமிப்புக்குப்பின் ஆங்கிலேயர்களின் தேவைக்காக பருத்தி, புகையிலை, தேயிலை,காபி, ரப்பர் போன்ற வணிக பயிர்கள் செய்யத்தூண்டப்பட்ட்டனர். இது போன்ற பொருட்களை ஆங்கிலேயர்கள் தங்கள் ஆலைகளுக்கு கொண்டுசென்று துணி, பீடி, சிகரெட், டீ தூளாக மாற்றி திரும்பவும் இங்கேயே கொண்டுவந்து மிகவும் திறமையாக வாணிபம் செய்துள்ளனர். பணத்திற்காக ஆசைப்பட்ட நமது விவசாயிகளும் சிறிது சிறிதாக மாறி இன்று தமது தற்சார்பு வாழ்வியலை முற்றிலும் மறந்து தமது உற்பத்தி முழுவதும் ஒரு தொழிற்சாலைக்காகவோ அல்லது வியாபாரிக்காகவோ சென்று சேர்வதற்காக பாடுபடும் நிலைக்கு வந்துவிட்டனர். விவசாயிக்கு தன் விளைபொருட்களுக்கு விலை நிர்ணயிக்கும் உரிமை போய் இப்போது (பன்னாட்டு) வணிக நிறுவனங்கள் தங்களுக்கு லாபமீட்டும் அளவுகோலை மட்டுமே வைத்து விலை நிர்ணயிக்கும் சூழலுக்கு ஆளாகிவிட்டோம்.

நமது விவசாயிகள் மீண்டும் மகிழ்வுடனும், பொருளாதாரத்தளைகள் இன்றியும் வாழவேண்டும் எனில் இயற்கைவழி தற்சார்பு விவசாய முறையை மீண்டும் பின்பற்றவேண்டும். இது ஒன்றே சரியான வழி என்பதை தெளிவாக விளக்கும் விதமாக நாம் இதுவரை பார்த்த பண்ணைகள் அமைந்துள்ளன. நாமும் நமது நாடும் உலக மக்களும் வளமுடன் வாழ இயற்கை வழி தற்சார்பு விவசாயம் ஒன்றே மிகவும் சரியான தீர்வாகும். ஆக நாம் அனைவரும் வீட்டுத்தோட்டமோ, ஒரு ஏக்கர் பண்ணையோ அல்லது 100 ஏக்கர் பண்ணையோ - பரப்பு பற்றிய கவலை இன்றி இயற்கை வழி தற்சார்புக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து உற்பத்தி செய்தாலே போதும், அந்த உற்பத்தி அவர்களுக்கும், மீதமானவை பக்கத்தில் உள்ள மக்களுக்கும் தரமானதாகவும் மலிவானதாகவும் கிடைக்கும். இது பரவலாக செயல்படுத்தப்ப்படும்போது நாடு முழுவதும் விவசாயத்தில் நஷ்டம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடும்.

ஆக விவசாயம் என்பது வியாபாரமல்ல, இது வாழ்வியல் (agriCULTURE) என்பதை புரிந்துகொண்டால் எல்லா விதமான கஷ்டங்களும் விலகி நிற்கும். நாமும் நமது குடும்பமும் நமது சமுதாயமும் நோயின்றி மகிழ்வுடன் வாழும் என்பதற்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. வாழ்க வளமுடன்!

(இந்த தொடரில் நாம் பார்வையிட்ட செஞ்சேரிமலை 6 ஏக்கர் பண்ணையின் உரிமையாளர் பாபுஜி, இக்கட்டுரைத் தொடரைத் திரு.வெங்கிடாசலத்துடன் இணைந்து வடிவாக்க உதவியவர். அவர் தன் அனுபவத்தில் கூறுவது: "தற்சார்பு இயற்கை விவசாயம் எனக்கு புகுவொகாவின் ஒற்றை வைக்கோல் புரட்சி என்ற புத்தகத்தின் மூலம் (One Straw Revolution) அறிமுகமானது. நான் அதற்கு முன்னரே எனது பண்ணையை வாங்கியிருந்தேன். இயற்கை விவசாயம் பற்றிய தேடலில் எனது கோவை நண்பர்கள் ரகு மற்றும் நிஷா ரகுவின் மூலம் திரு. பசுமை வெங்கிடாச்சலத்தின் தொடர்பு கிட்டியது. அவரை எனது பண்ணைக்கு அழைத்துச்சென்று பார்க்கச்செய்தேன். அப்போது அவர் என்னிடம் 'நீங்கள் உங்களது பண்ணையில் என்ன செய்ய விரும்புகிறீர்கள்?' என்று கேட்டதும் ஆர்வ மிகுதியில் 'ஒரு வனம் போன்று ஆக்க வேண்டும்' என்று சொன்னேன். ஒரு நிமிட யோசனைக்கு பின் 'அப்படின்னா வாங்க, பூட்டிட்டு ஊருக்கு போய்டலாம். அது தானா காடாகிக்கும்' என்றார்! அதன் பின்னர் என்னையும் என் மனைவியையும் உட்காரவைத்து எங்கள் தேவைகளை (காய்கறிகள், பழங்கள், மரங்கள், கால் நடைகள் ..) பட்டியலிடச்சொன்னார். அதன் பின்னர் அத்தேவைகளை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகளை தோட்டத்தில் செய்து காண்பித்தார்.

மழை நீர் சேகரிப்பு,சூரிய ஒளியின் சேகரிப்பு, மரங்களின் அவசியம்,கால்நடைகளின் அவசியம் என்று எங்களின் பசுமை உலகம் படிப்படியாக நேர்த்தியாக உருவாவதில் பங்குபெறும் பகிழ்வு வார்த்தைகளில் விவரிக்க இயலாதது. அவரது பங்களிப்பு இன்று வரை எமது பண்ணையில் தொடர்கிறது. ஆரம்பத்தில் வாணி எடுத்து இரு வருடங்கள் கடுமையான வறட்சியிலும் பெய்த சிறிதளவு மழை மற்றும் மாதம் மும்முறை உயிர்த்தண்ணீர் விலைக்கு வாங்கி ஊற்றியதாலும் 90 சதவீத தென்னை மரங்கள் உயிர் பிழைத்தது அந்த கிராமத்தில் அதிசய நிகழ்வாக இன்றுவரை பேசப்படுகிறது. வாணிகள் எடுத்து, தென்னை வேரில் சொட்டிய தண்ணீரை அதன் மட்டைகள் முட்டும் தூரத்தில் வாணிகளுக்குள் மாற்றி வைத்து ஒவ்வொரு வாணியையும் ஒரு உணவுத்தட்டாக மாற்றியதன் பயன் இந்த வருடம் மரங்களில் பாளைகள் வெடித்து நன்கு ஆரோக்கியமாக வளர்ந்துள்ளன. 400 தென்னைகள் மட்டுமே இருந்த பரப்பில் இன்று ஆயிரக்கணக்கான மரங்களை நட்டு அவைகளும் வளரத்தொடங்கியுள்ளன. இந்த மாறுதல்களை அருகில் இருந்து கவனித்து வரும் கிராமத்து பெரியவர்களின் பொதுவான கருத்தான 'வாணி எடுத்ததில் வேர் வெட்டுப்பட்டுடுச்சே, நிறைய மரங்களையும் வைத்து தென்னை வேர்களுக்கு போட்டியையும் உண்டக்கிட்டீங்களே, உரம் குடுக்குறதையும் சுத்தமா நிறுத்திட்டீங்களே, தேங்காய் விளைச்சல் குறைஞ்சிடுமே' என்ற கவலைக்கு நான் சொல்லும் பதில் இதுதான் 'தென்னை மட்டுமே வருமானம் என்ற நிலை மாறி இந்த ஆயிரக்கணக்கான மற்ற மரங்களும் பயன் தரும்போது கிடைக்கும் விளைச்சலுக்கு தென்னை விளைச்சல் குறைஞ்சால் தப்பில்லையே!'.

நான் சொல்வதில் உள்ள உண்மை அவர்களுக்கு புரியும் நாள் தொலைவிலில்லை. திரு. வெங்கிடாசலத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள். "

கட்டுரை வடிவாக்க உதவி - பாபுஜி (9698373592)

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org