தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவில் ஒளிக்கப்பட்ட‌ உண்மைகள் - பரிதி


உலகில் மிக அதிக அளவில் உணவு உற்பத்தியாகிறது. ஆனால், ஏழு பேரில் ஒருவருக்குப் போதிய உணவு கிடைப்பதில்லை. ஏன்? உற்பத்தியாகும் உணவு எங்கே போகிறது? எவ்வளவு வீணாகிறது? இது போன்ற பற்பல வினாக்களுக்கு இந்தக் கட்டுரை மறுக்கவியலாத ஆதாரங்களுடன் விடை தருகிறது. இது கனடா நாட்டைத் தாயகமாகக் கொண்ட ETC எனும் தன்னார்வ அமைப்பினர் 2013-ஆம் ஆண்டு உருவாக்கிய அறிக்கையின் சுருக்கப்பட்ட தமிழாக்கம். ஆங்கில மூலக் கட்டுரை http://www.etcgroup.org/articles எனும் இணைய தளத்தில் உள்ளது.

கட்டுரையில் உள்ளவற்றில் அதிகப் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள், அருங்கலைச் சொற்கள், மற்றும் அயல்மொழிப் பெயர்ச் சொற்கள் போன்றவற்றின் ஆங்கில வடிவம் கட்டுரையின் இறுதியில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புக் குறிகளுக்குள் தரப்பட்டுள்ளன. - பரிதி (thiru.ramakrishnan@gmail.com), மொழிபெயர்ப்பாளர்

உலக உணவுப் பேராயம் 1963-ஆம் ஆண்டு சூன் மாதம் கூடிற்று. "நம் வாழ்நாளுக்குள் பசியையும் வறுமையையும் இப்புவியில் இருந்து ஒரேயடியாக ஒழிப்பதற்கு நம்மால் முடியும், அதற்கான திறன் நம்மிடம் உள்ளது - அதைச் செய்யவேண்டும் எனும் தீவிரம் இருந்தால் போதும்" என்று அந்தப் பேராயம் ஒன்றிய நாடுகளவையிடம் தெரிவித்தது. உணவு குறித்து உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் நடக்கும் கருத்தரங்குகளில் இது தொடர்ந்து சொல்லப்படுகிறது. ஆனாலும், உணவு உற்பத்தி, வழங்கல், நுகர்வு ஆகியன தொடர்பாக அரசுகள் போதுமான அளவு அறிந்திருக்கவில்லை. 2008-ஆம் ஆண்டு உலகை உலுக்கிய உணவுப் பற்றாக்குறை இதனை ஐயத்துக்கு இடமின்றி நிறுவுகிறது. உலக உணவுப் பேராயம் கூடி ஐம்பது ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னும் பசியும் வறுமையும் உலகில் இருந்து அகலவில்லை. அதற்கான ஆற்றலும் திறனும் ஏன் தம்மிடம் இல்லை என்பதை அரசுகள் இன்னும் அறிந்துணரவில்லை அல்லது அறிந்தும் பசி, வறுமை ஆகியவற்றை அகற்ற முற்படவில்லை.

இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன:

(அ) இப்போது நடைமுறையில் இருக்கும் மேற்கத்திய பாணி உணவு உற்பத்தி முறை, பதப்படுத்தும் வழிகள், நுகர்வு ஆகியவற்றை மறு கேள்வி கேட்காமல் அவைதான் இயல்பு என உலக நாடுகளும் மக்களும் ஏற்றுக்கொண்டிருப்பது ஒரு காரணம். இதை "ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர்" என்று குறிப்பிடலாம். உணவு (கிடைப்பதன்) உறுதித்தன்மை குறித்த நம் எண்ணங்கள் அனைத்தும் [ஆலைமயமான உணவு உற்பத்தி மற்றும் வழங்கல் முறைதான் இயல்பானது எனும்] இந்த முற்கோளின் அடிப்படையில்தான் ஏறக்குறைய அமைந்துள்ளன.

(ஆ) இரண்டாவதாக, உணவுத் துறையில் இருக்கும் மிகப்பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் வெளியிடும் குறைந்தளவு தரவுகள் மற்றும் விளக்கங்களை நாம் பெருமளவு சார்ந்துள்ளோம். சந்தைகள் குறித்த தகவல்களை வெளியிடுவதில் அந்நிறுவனங்கள் (தம் நலனுக்கு ஊறு நேர்ந்துவிடாவண்ணம்) மிக எச்சரிக்கையாக உள்ளன. இவற்றின் விளைவாக,

உலகளவில் இறைச்சி மற்றும் பால்பொருள் நுகர்வு அதிகரித்தல், உடல் பருமனாவதால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்தல், வேதியுரங்களும் உயிர்க்கொல்லிகளும் வரவர அதிகம் தேவைப்படுதல் ஆகியன தவிர்க்கவியலாத, கேள்விக்கு உட்படுத்தமுடியாத பருண்மை நிலைகள் என அரசுத் திட்டக் கொள்கை வகுப்போர் முடிவெடுத்துவிடுகின்றார்கள்.

"பணவசதி படைத்த நுகர்வோருடைய" தேவைகள் புனிதமானவை என்பது போலவும் வறியோருடைய பசிப்பிணி அவ்வளவு பெரிய சிக்கலன்று எனவும் கருதப்படுகிறது.

"ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடருக்கு" மாற்று ஒன்று இவ்வுலகில் உள்ளது: சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்!

பயிரிடுதல், மீன் பிடித்தல், மேய்த்தல், வேட்டையாடுதல், கான்விளை பொருள்களைச் சேகரித்தல் ஆகியவற்றில் ஈடுபடுவோரை இங்கு "உழவர்" என்று பொதுவாகக் குறிக்கிறோம். அவர்கள் ஊரகம் அல்லது நகர்ப்புறத்தில் வாழ்பவராக இருக்கலாம். நில உரிமையாளராகவோ குத்தகைக்கு நிலம் எடுத்துப் பயிரிடுபவராகவோ அல்லது உழவுத் தொழிலாளியாகவோ இருக்கலாம். இவர்களும் இவர்களுடைய பகுதிகளில் வாழும் பிற மக்களும் ஒருவரோடு மற்றவர் பல்வேறு வகையான பொருளாதார உறவுகளால் பிணைக்கப்பட்டிருப்பர், ஒருவரையொருவர் சார்ந்திருப்பர். அதனால்தான் 'உணவு வலையம்' என்று குறிப்பிடுகிறோம்.

அடுத்து வரும் பக்கங்களில் இவ்விரண்டு உற்பத்தி முறைகளையும் ஒப்பிடப்போகிறோம். இந்தப் பக்கங்களில் தரப்பட்டுள்ள அனைத்துத் தரவுகளுக்கும் ஆங்கில மூலக் கட்டுரையில் முறையான மேற்கோள்கள் (ஆதாரங்கள்) 127 இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

எது நமக்கு உணவளிக்கும்?

1. இப்போது நமக்கு உணவு தருவது எது?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
மொத்த உணவு உற்பத்தியில் ... 30% இந்த முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. 70%-ஐ உற்பத்தி செய்கிறது. அதில்,
15-20% நகர்ப்புறத் தோட்டங்களில் விளைகிறது;
10-15% வேட்டை மற்றும் கான்விளை பொருள்கள்;
5-10% மீன்கள்;
35-50% சிறு குறு உழவர்கள்
விளைச்சலுக்கு உகந்த மொத்த நிலப் பரப்பில் .. 70-80% நிலத்தைப் பயன்படுத்திப் பயிர்களில்
இருந்து கிடைக்கும் மொத்த உணவில்
30-40%-ஐ உற்பத்தி செய்கிறது.
20-30% நிலத்தைப் பயன்படுத்துகிறது.
வேளாண்மை பயன்படுத்தும் [பெட்ரோல் முதலிய]
புதைபடிம எரிபொருள்களில் ...
80%-க்கும் அதிகமானதைப் பயன்படுத்துகிறது. 20%-க்கும் குறைவாகப் பயன்படுத்துகிறது
வேளாண்மை பயன்படுத்தும் பாசன நீரில் ... 70%-ஐப் பயன்படுத்துகிறது. 30%-ஐப் பயன்படுத்துகிறது.
ஆண்டுதோறும் வெளியாகும் மொத்தப்
பசுமைக் குடில் வளிகளில் ..
44-57% வளிகளை உருவாக்குகிறது. இத்தகைய வளிகளை மிகக் குறைந்த
அளவே வெளியிடுகிறது.
இயற்கைச் சூழல் மீதான தாக்கம் ஆண்டுதோறும் மூன்று கோடியே
இருபத்தைந்து லட்சம் ஏக்கர் பரப்பில்
காடுகளை அழிக்கிறது.
உயிரினப் பன்மயத்தைக் காத்து வளர்த்துப்
பயன்படுத்திக்கொள்கிறது.
வளமான மேல் மண் அழிதல் ஆண்டுதோறும் 68,00,000 கோடி கிலோ
வளமான மேல் மண்ணை அழித்துவிடுகிறது.
உணவுத் தற்சார்புக்குப் பங்களிப்பு உலகச் சந்தைக்கு வரும் உணவில் மிகப்
பெரும் பகுதியைக் கட்டுப்படுத்துகிறது.
(இது மொத்த உலக உணவு உற்பத்தியில் 15%.)
உற்பத்தியில் 85% உள்நாட்டுச் சந்தையில்
பயன்படுத்தப்-படுவதால் [பக்குவப்படுத்து-தல்,
பொதி கட்டுதல் (பேக்கிங் - packaging)
போக்குவரத்து ஆகியவற்றால் நேரும்] சூழல்
மாசு குறைகிறது.
உணவுப் பற்றாக்குறைக்கும் உண்டு
கொழுப்பதற்கும் காரணி?
340 கோடிப்பேர் பற்றாக்குறையால் அல்லது
தேவைக்கு அதிகம் உண்பதால்
பாதிக்கப்படுவதற்குக் காரணியாக உள்ளது.
உணவுப் பற்றாக்குறையால் வாடும் 200 கோடிப் பேருக்கு
இந்த உற்பத்தி முறைதான் ஓரளவு உணவு தருகிறது.

2. உற்பத்தித் திறன் அதிகமுள்ள முறை எது?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
இயல்பான தட்பவெப்பநிலை உள்ள ஆண்டில் நல்ல வளமுள்ள
நிலத்தில் வீரிய ஒட்டு வகைப் பயிரை ஓரினப் பயிர்ச் சாகுபடி
செய்தால் சந்தைப்படுத்தக்கூடிய விளைச்சல் அதே
நிலத்தில் நாட்டுரகப் பயிர் விளைச்சலைக்
காட்டிலும் அதிகமாக இருக்கும். ஆனால்,
அந்த அதிகப்படி விளைச்சலுக்காக (மனிதருடைய
உடல்நலம் உள்ளிட்ட) சூழல் நலமும் வாழ்வாதாரமும்
அதிக விலை தரவேண்டியிருக்கும். (உயிர்ம
வேளாண் முறைகளைச் செயல்படுத்தினால்
விளைச்சலை 130% அதிகரிக்க இயலும்.)
எப்பேர்ப்பட்ட நிலமாயினும் தட்பவெப்பநிலை சராசரியில்
இருந்து மாறினாலும் சிறு குறு உழவர்கள் பல்வகைப்
பயிர்களைக் கலந்து பயிரிடுதல், மீன் வளர்ப்பு, கால்ந
வளர்ப்பு ஆகியவற்றின் மூலம் மிகக் குறைந்த செலவில்
அதிக அளவு மொத்த விளைச்சல் எடுக்கிறார்கள். மேலும்,
அந்த உணவு அதிகச் சத்துள்ளது, அந்த வேளாண் முறை
நிறையப் பேருக்கு வேலை தருகிறது, சூழலுக்கு நல்லது.
சூழல் நலம் பேணும் வேளாண் முறைகளைக் கொண்டு
52 நாடுகளில் தொண்ணூறு லட்சம் சிறு
குறு உழவர்கள் 1990-களில் விளைச்சலை 93% அதிகரித்தனர்.
(இதில் மீன் வளர்ப்பு, வீட்டளவில் கால்நடை வளர்ப்பு ஆகியவை
கணக்கில் சேர்க்கப்படவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது!)

3. நாளை (2030வாக்கில்) யார் நம் உணவை உற்பத்தி செய்து தருவார்கள்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
70% மக்கள் நகர்ப்புறங்களில் வாழ்வார்கள்
உடல் பருமனானவர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயரும்
இறைச்சி மற்றும் பால் பொருள்களின் உற்பத்தி 70% அதிகரிக்கும்
உணவுத் தேவை 50%, தண்ணீர்த் தேவை 30% அதிகரிக்கும்
வேளாண்மை வெளியிடும் பசுமைக் குடில் வளிகளின் அளவு 60% உயரும்
உழுவோருக்கு நிலத்தின் மீது உரிமை கிடைத்தால் ஊர்ப்புற
மக்கள்தொகை 50% அல்லது அதைவிட அதிகமாக இருக்கும்
சத்துள்ள உணவு கிடைப்பது இரட்டிப்பாக உயரும்
உடல் பருமனாவோர் விகிதம் குறையும்
பசுமைக் குடில் வளிகளின் அளவு 60%-ஆவது குறையும் (அதற்கு மேலும் குறையவும் வாய்ப்புண்டு)
தண்ணீர்த் தேவை 50% குறையும்
வேளாண்மைக்குத் தேவைப்படும் படிம எரிபொருள்களின் அளவு 75-90% குறையும்

4. இதற்கு அரசுத் திட்டக்கொள்கைகள் எவ்வாறு மாறவேண்டும்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
மேன்மேலும் வேகமாக நிலங்களைக் கையகப்படுத்துதல்


வேளாண் பெருநிறுவனங்களுக்கு உகந்தவாறு நாடுகளுக்கு
இடையிலான வணிக ஒப்பந்தங்களை வலுப்படுத்துதல்


காப்புரிமை மூலம் பெருநிறுவனங்கள் முற்றுரிமை பெற வகைசெய்தல்


மிகச்சிறு எண்ணிக்கையிலான பெருநிறுவனங்கள் உணவு
வர்த்தகத்தைக் கட்டுப்படுத்துவதைக் கண்டுகொள்ளாதிருத்தல்
(இப்போது உலகளவில் சந்தைப்படுத்தப்படும் விதைகளின்
விற்பனை மூன்றே நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது; பூச்சிக் கொல்லி
விற்பனை பத்து பெருநிறுவனங்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.)


உழவர்கள் நல்ல விதைகளைத் தேர்ந்தெடுத்துப்
பயன்படுத்துவதைத் தடுத்து நிறுத்துதல்

படிம எரிபொருள்கள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்தல்


பாதுகாப்பான உணவு கிடைப்பதற்கு ஆகும் செலவுகளை
மேன்மேலும் அதிகமாக நுகர்வோர், சிறு குறு உழவர்கள்
ஆகியோர் தலையில் சுமத்துதல்

பின்வருவனவற்றைச் செயல்படுத்துவதன் மூலம் உணவு உற்பத்தி
மற்றும் வழங்கல் முறைகளில் மக்களுடைய இறையாண்மைக்கு
அடிகோலுதல்:

நிலம், நீர் ஆகியவற்றின் மீது உரிமை தருதல்

நியாயமான வணிக முறைகளை திறுவுதல்

விதைகள் மீதான உரிமைகளையும் விதைகள், கால்நடைகள் ஆகியவற்றில்
தரமானவற்றைத் தேர்ந்தெடுத்துப் பரிமாறிக்கொள்வதற்கான
உரிமைகளையும் உழவர்களுக்கு மீட்டுத் தருதல்

உள்ளூர்ச் சந்தைப் பரிமாற்றங்களையும் உயிரினப் பன்மயத்தையும்
பாதுகாக்கும் சட்டதிட்டங்களைச் செயல்படுத்துதல்


சூழலுக்கு உகந்த வேளாண்மை நிலை பெறுவதற்கும் சிறு குறு
உழவர்களின் தேவைகளை நிறைவு செய்வதற்கும் ஏற்ப அரசுத்
துறைகளில் நிகழும் ஆராய்ச்சி, புத்தாக்கம் ஆகியவற்றின்
போக்கினைத் திருத்தியமைத்தல்

5. நம் உணவுப் பயிர்களை இனப்பெருக்கம் செய்து காப்பவர் யார்?

ஆலைமயமான உணவுச் சங்கிலித் தொடர் சிறு குறு உழவர்களைச் சார்ந்த உணவு வலையம்
150 வகைப் பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. ஆனால்
அவற்றில் 12 வகைகளுக்கே முதன்மைக் கவனம் தரப்படுகிறது
(எ.கா. விதை தொடர்பான ஆராய்ச்சி மற்றும் புத்தாக்கச் செயல்பாடுகளில்
45% மக்காச்சோளத்தின் மீது குவிக்கப்பட்டுள்ளது!)


1960-கள் முதல் 80,000-க்கும் மேற்பட்ட புது இனங்கள்
உருவாக்கப்பட்டுள்ளன; இவற்றில் 59% அழகுச் செடிகள்!

மரபீனி மாற்றப் பயிர் ஒன்றை உருவாக்குவதற்கு ஆகும் ஆராய்ச்சிச்
செலவு (சராசரியாக) 857 கோடி ரூபாய்; ஆனால், வளரும் நாடுகளின்
தேவைகளைப் பொருத்தவரை 10-20% மட்டுமே வணிகத் துறையினால்
ஈடு செய்யப்படுகிறது. வணிக அடிப்படையிலான ஆய்வுகளில்
பெரும்பங்கு [மக்காச்சோளம், சோயாபீன்சு போன்ற வணிக முக்கியத்துவம்
வாய்ந்த] ஒரு சில பயிர்களைச் சூழல் மாற்றத்தின் தாக்கத்தைத்
தாங்கும்வண்ணம் அவற்றின் இயற்கையான மூலப் பயிர்களுடன்
ஒட்டு வைப்பவையாகவே உள்ளன.

1960-கள் முதல் 7,000 பயிர் வகைகளில் 21 லட்சத்துக்கும் மேற்பட்ட புது
இனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன; (இவற்றில் சில மட்டுமே அழகுச் செடிகள்.)

புது இனங்களை உருவாக்குவதில் எவ்வகையான
வணிகச் செலவுகளும் இல்லை

80-90% விதைகள் வணிகச் சந்தைகளுக்கு அப்பால்
இருந்து பெறப்படுகின்றன

50-60,000 வகை இயற்கை மூல இனங்களைப் பயன்படுத்த வழியுண்டு.
இவற்றின் வணிகச் சந்தை மதிப்பு ஆண்டுக்கு 7,24,500 கோடி ரூபாய்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org