நெல் குருவி
(Lonchura Punctulata punctulata)
ஆசியாவைத் தாயகமாகக் கொண்ட இப்பறவை 13 உட்பிரிவுகளில் பிரிக்கப்பட்டுள்ளது. நம் இந்தியாவுக்குச் சொந்தமானது punctulata என்ற துணையினம். நெல்குருவி என்று தமிழில் அழைக்கப்படும் இது ஆங்கிலத்தில் Nutmeg Finch, Nutmeg Mannikin, Nutmeg Munia, Ricebird, Scaly-breasted Mannikin, Scaly-breasted Munia, Spice Finch, Spice Munia, Spice Bird, Spotted Mannikin, Spotted Munia, Barred Munia என்றெல்லாம் அழைக்கப் படுகிறது.
தோற்றம்
குருவி அளவு தான் இருக்கும். நீளம் 11 - 12 செ.மீ எடை 12 - 16 கிராம். தலை செம்பழுப்பு நிறம் ; சிறகு மற்றும் மேல் உடம்பு லேசான பழுப்பு ; வால் பாசிப்பச்சை நிறம்; அடிப்பகுதி வெள்ளை நிறம்; கழுத்தில் மீன்செதில்கள் போல இருக்கும். அந்த செதில்கள் சிறகுக்கடியிலும் காணலாம். மூக்கு சிறிது குட்டையாகவும் கருப்பு நிறத்திலும் இருக்கும். கண்களை சுற்றி ஒரு வெள்ளை நிற வளையம் இருக்கும். ஆண் - பெண் ஒரே மாதிரி இருக்கும். ஆனால் ஆண்பறவைதான் பாடும்.
காணும் இடம்
இந்தியாவில் இவற்றைக் காணலாம். பிற துணையினங்களை அவ்வச் சூழலில் காணலாம். ஜாவாவைச் சேர்ந்த சிட்டை நம் நெல்வயல்களில் சாதாரணமாகக் காணலாம். ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் கூண்டுப் பறவையாக வளர்க்கப்படுகிறது. அதிகமாக வயல்களில் கூட்டம் கூட்டமாக காணலாம். ஒரு கூட்டத்தில் சுமார் 30 முதல் 100 பறவைகள் வரை இருக்கும்.
உணவு
பெரும்பாலும் நெல்லை உண்ணும். புல்லின் விதைகளையும் முளைத்து வரும் புல்லையும் உண்ணும். சில சமயங்களில் மரம் வெட்டும் பொழுது, மண் தோண்டும் பொழுதும் வரும் கரையான்கள் இதற்கு விருந்துதான்.
இனப்பெருக்கம்
புல் மற்றும் மூங்கில் குச்சிகள் கொண்டு் கூடு கட்டும். வைகாசி முதல் புரட்டாசி வரை இனப்பெருக்கத்தில் ஈடுபடும். ஆண்கள் கூட்டை பாதிக் கட்டி தன் பெண் பறவையை பறந்து பறந்து ஈர்க்கும். கூட்டின் அமைப்பு, பாதுகாப்பு, இடம் போன்றவற்றை பார்த்துதான் ஆணுடன் சேருமாம். முட்டைகள் தூய வெள்ளை நிறத்தில் 4 - 6 முட்டைகள் இடும், 10 -16 நாட்களுக்குள் குஞ்சுகள் பொறித்துவிடும்.
குறிப்பு
அழகாய் இருந்தாலும் உழவனின் எதிரிதான். அறுவடைக் காலங்களில் மின்கம்பியில் பெரும் கூட்டமாக அமர்ந்து நெல்லை வேட்டையாடும். காவிரிக் கடைமடைப் பகுதியில், உழவர்கள் நிதமும் வெடி வெடித்து இவற்றை ஓட்ட முயற்சிப்பர்.