இரண்டாம் உலகப்போர் முடிந்த பின்னரும் பின்வரும் வாசகங்கள் அடங்கிய விளம்பரங்கள் வெளியிடப்பட்டன, 'போர் இன்னும் முடியவில்லை, பூச்சிகளின் மீது போர் தொடரும்' போன்றவை பூச்சிகளை மனித குலத்தின் எதிரியாகச் சித்தரித்தன. இதேபோல களைகளையும் கொடுமையான எதிரிகளாகக் காட்டும்போக்கு பசுமைப் புரட்சியின் தொடர்ச்சியாக ஏற்பட்டது. கடந்த மார்ச் (2015) மாதம் தேசங்களிடை புற்றுநோய் ஆராய்ச்சி முகமை (International Agency for Research on Cancer (IARC) ) வெளியிட்ட அதிர்ச்சிகரமான தகவல் உழவர்களை மட்டுமல்லாது, நுகர்வோரையும் பேரச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
"பூச்சிக்கொல்லிகள்தாம் உயிர்களுக்குத் தீங்கு விளைவிப்பவை, களைக்கொல்லிகள் அல்ல. அதை ஒருவிதையிலைத் தாவரங்களை அல்லது இருவிதையிலைத் தாவரங்கள் என்று குறிப்பிட்ட தாவரங்களை மட்டுமே கொல்லக் கூடியவை. அவற்றால் பாலூட்டிகளுக்கு எந்தத் தீங்கும் இல்லை" என்று உரக்கப் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சூழலியல் பாதுகாவலர்கள் இவற்றை தொடக்கம் முதலே எதிர்த்து வந்தனர். குறிப்பாக களைக்கொல்லிகள் மண்ணில் உள்ள நுண்ணுயிர்களைக் கொல்லும் தன்மை கொண்டவை மட்டுமல்லாது இயற்கையில் உள்ள சாதாரணக் களைகள் வலுவான களைகளாக (super weeds) மாறிவிடும் தன்மை கொண்டவை என்றும் கூறினர். இதைத் தொடர்ந்து மறுத்துவந்த பெருங்கும்பணிகளோ தங்களது களைக் கொல்லிகளைச் சந்தையில் விற்றுவந்தன.
ஆனால் கடந்த மார்ச் மாதம் 20ஆம் நாள், உலக உடல்நல நிறுவனத்தின்((WHO)) ஒரு பிரிவான தேசங்களிடை புற்றுநோய் ஆராய்ச்சி முகமை கிளைஃபோசேட் என்று அழைக்கப்படும் பாபனோ மித்தைல் கிளைசின் என்ற களைக்கொல்லி புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டது என்று அறிவித்தது. இந்த களைக்கொல்லி மான்சாண்டோ நிறுவனத்தால் 'ரவுண்டப் ரெடி' என்ற வணிகப் பெயரில் சந்தையில் விற்கப்படுகிறது. தே.பு.ஆ.மு. (IARC) ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக புற்றுநோய் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் மதிப்பு மிக்க அமைப்பாகும். இதன் பெருமை உலக அளவில் சிறப்பிற்குரியது. மான்சாண்டோவிற்கு இது மிகப்பெரிய அடியாக மாறியுள்ளது. அதாவது இக்கும்பணியின் விற்பனை மதிப்பில் பாதிக்கும் மேல் ரவுண்டப் ரெடி களைக்கொல்லியும், விதைகளும் ஆகும். எனவே இந்த அறிவிப்பை எதிர்கொள்ள மான்சாண்டோ நிறுவனம் முயலும் என்பதில் நமக்கு மறுகருத்து இல்லை.
பொதுவாக அறிவியல் பொதுத்தன்மை கொண்டது என்றும் அதற்கு எந்தச் சார்புத் தன்மையும் கிடையாது என்றும் கூறப்படுகிறது. அறிவியல் விதிகளுக்கு வேண்டுமானால் சார்புத் தன்மை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அறிவியல் தொழில்நுட்பங்களுக்குச் சார்புத் தன்மை உள்ளது. குறிப்பாக அறம்சார் அறிவியல்நுட்பங்கள், அறமற்ற அறிவியல்நுட்பங்கள் என்று நாம் பிரிக்க முடியும். எடுத்துக்காட்டாக கத்தியைக் கொண்டு ஆளையும் வெட்டலாம் ஆப்பிளையும் வெட்டலாம் என்ற சொல்லாடலை நாம் பயன்படுத்துவோம். அதே சமயம் அணுக்குண்டை வைத்து எந்த நல்ல செயலைச் செய்துவிட முடியும்?
அது மட்டுமல்ல கட்டுப்பாடற்ற அறிவியல் நுட்பங்கள் இன்று பெருகி வருகின்றன. குறிப்பாக அணுவிற்குள் நடத்தும் ஆய்வுகள், விதையின் மீது நடத்தும் ஆய்வுகள், நோய் தீர்க்கப் போகிறோம் என்று உயிரினங்களின் மீது நடக்கும் ஆய்வுகள், ஏன் ஏழை நாடுகளின் மீது மருந்துகள் என்ற பெயரில் சோதனைகளை நடத்தும் 'பணக்கார' நாடுகள் நடத்தும் ஆய்வுகள் யாவும் சார்புத் தன்மை கொண்டவை மட்டுமல்லாது இவர்களது கைகளை மீறிச் சூழலில் கடும் விளைவுகளை ஏற்படுத்துபவை. இவற்றைச் செய்வதற்கு அறிவியல் அறிஞன் என்ற முத்திரையைப் போட்டுக் கொண்டால் போதும் என்று கருதுகின்றனர்.
களைகளைக் கொல்வதற்குத் தெளிக்கப்படும் கொல்லிகள் தொடர்ந்து மண்ணில் இருந்து தீங்கு விளைவிக்கும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், அது உடன் விளைவாக களைக்கொல்லிகளை எதிர்கொள்ளும் திறன் மிக்க பிற களைகளையும் உருவாக்கும் என்பதை வசதியாக மறந்து விடுகின்றனர். இதேபோலவே அணுவைப் பிளந்து வெளியேற்றும் கதிர்கள் (நியூட்டிரினோ உட்பட) தொடர்ந்து சூழலில் தனது 'வேலை'யைக் காட்டிக் கொண்டுதான் இருக்கும். இவர்களது கட்டுப்பாட்டில் அது இருக்காது. அணுவுலையில் இருந்து வரும் கதிரியக்கக் கழிவுகளை மறுசுழற்சிக்கு உட்படுத்தி அதை மீண்டும் பாதுகாப்பான ஒரு பொருளாக மாற்றும் அறிவியல்நுட்பம் வளரும் வரை அது மிக ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதுபோலவே நெகிழி என்படும் பிளாஸ்டிக் பொருள்கள் மறுசுழற்சிக்கு உட்பட்டு நுண்ணுயிர்களாலோ பிற உயிரியல் முறைகளில் அது சிதைக்கப்பட்டு மாறும்வரை அது மிக மோசமான பொருள் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதுபோலவே பூச்சிக்கொல்லிகளும், களைக்கொல்லிகளும் சூழலில் செய்யும் நாசவேலைகளை நாம் பகுதியாக மட்டும் பார்க்க முடியாது.
ஆக அறிவியல்நுட்பங்களை, மேலை அறிவியல் நுட்பங்கள் என்றும் கீழை அறிவியல் நுட்பங்கள் என்றும் பிரித்தரிய முடியும். சீனர்கள், ஐரோப்பியர்களுக்கு முன்பே வெடிஉப்புகளைக் கண்டறிந்தும், அதை விளையாட்டுக்கு மட்டுமே, வாண வேடிக்கைக்காகப் பயன்படுத்தினர். ஆனால் அதைக் கொலைக் கருவியாக மாற்றியவர்கள் ஐரோப்பியர்களே. நீராவியின் ஆற்றல் கீழை நாடுகளில் உணவு சமைக்கவே பயன்பட்டது. அதை எந்திரங்களில் புகுத்தி சுரங்கம் தோண்டவும், அதைக் கொண்டு சந்தை பிடித்து உலகைக் கைப்பற்றவும் மாற்றியது ஐரோப்பியர்களே. எனவே இதில் இரண்டு போக்குகள் உள்ளன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அதேபோல கட்டுப்பட்ட அறிவியல்நுட்பங்கள், கட்டுப்படா அறிவியல் நுட்பங்கள் என்றும் பிரித்துப் பார்க்க வேண்டும். அதுமட்டுமல்லாது, புதிப்புறு (renewable) அறிவியல் நுட்பங்கள், புதிப்புறா (non-renewable) அறிவியல் நுட்பங்கள் என்றும் பிரிக்க வேண்டியுள்ளது.
அதைவிட அறம்சார் அறிவியல்நுட்பங்கள், அறமிலி அறிவியல் நுட்பங்கள் என்றும் பிரிக்க வேண்டும்.
'அறிவினால் ஆகுவதுண்டோ பிறிதின் நோய் தன்நோய்போல் போற்றாக்கடை'
என்று திருக்குறள் அறிவியலை திட்டமாகப் பிரிக்கின்றது.
ஆகவே இவ்வளவு வேறுபாடுகளைக் கொண்ட அறிவியல் நுட்ப உலகத்தை நாம் அனைவருக்கும் பொதுவானது அறிவியல் என்று மேம்போக்காகப் பேச முடியாது.
பொதுவாக களைகளைக் கட்டுப்படுத்த வேண்டுமே தவிர முற்றிலும் அழிக்கக் கூடாது. இதைத் தான் திருக்குறள், 'களைகட்டனோடு நேர்' என்றும் 'எருஇடுதல் கட்டபின் நீரினும் நன்று' என்று இரண்டு இடங்களில் களைளைக் கட்டுப்படுத்துவது பற்றியே கூறுகிறார், அழிக்கக் கூறவில்லை. களைகள் ஒரு மண்ணிக்கு மேலும் தேவையான சத்துக்களை வழங்கவரும் நண்பர்கள். ஒரு நிலத்தில் வெவ்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு வகையான களைகள் முளைப்பதில்லை. பருவத்திற்குப் பருவம் களைகள் மாறும். மண்ணில் வளம் அதிகமாக அதிகமாக களைகள் மாறிக் கொண்டே இருக்கும். ஒரு நிலத்தை நாம் தொல்லை செய்யாமல் அதன் போக்கிலேயே விட்டுவிட்டால் ஒரு குறிப்பிட்ட களை அதிக அளவாக ஆறு ஆண்டுகள் மட்டுமே இருக்கும். அதன் பிறகு அது இடம் மாறிவிடும். இது இயற்கையின் நிகழ்வு, விதி. எடுத்துக்காட்டாக ஒரு வறண்ட நிலத்தில், கடுங்காற்று போன்ற பெருந்தொல்லைகள் இல்லாத குறிப்பாக நம்மைப் போன்ற வெப்பமண்டில நிலங்களில், முட்புதர்கள் தோன்றும். ஏனெனில் அதை ஆடு போன்ற கால்நடைகள் தின்றுவிடக் கூடும். அதற்குப் பாதுகாப்பாக முட்களுடன் கூடிய களைகள் தோன்றும், அதன் பின்னர் ஒரு பறவை அதின் ஊடாக ஒரு வேப்பம் பழத்தைத் தின்று தனது எச்சன் வழியாக அப்புதருள் இட்டுச் செல்லும். அடுத்து வரும் மழைக்காக் காத்திருக்கும் விதை மழைத்துளி பட்டவுடன் துளிர்க்கும். அதை கால்நடைகள் கடித்துவிடாதபடி முட்புதர்கள் பாதுகாக்கும். பின்னர் மரம் வளர்ந்து பெரிதானவுடன் மரத்தின் நிழல்பட்டு முட்புதர்கள் வளர முடியாத நிலையை அடையும். இப்படியாக ஒரு மரம் களைகளுடன் வளர்ந்து பெரிதாகும். இந்த இயற்கை நிகழ்வில் நாம் ஊடாடும்போது சில இயற்கை விதிகளைக் புரிந்து கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட களைகள் குறிப்பிட்ட மண்ணில் தோன்றக் காரணம், அந்த மண்ணை வேறொரு அடுத்த கட்ட பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லவே. இந்த அடிப்படையில்தான் ஓருயிரி முதல் மாந்தர் குலம் வரை வளர்ந்துள்ளது. இன்னும் நுட்பமாகப் பார்த்தால், ஒரு பயிருக்குத் தேவைப்படும் சத்துக்கள் 16 என்று பயிரியல் அறிவியல் கூறுகிறது. என்னைக் கேட்டால் பதினாறுக்கும் மேல் (16+) தேவை என்று கூறுவேன். ஏனெனில் பதினாறு சத்துக்களை மட்டும் ஒரு குடுவையில் இட்டுச் செடிக்குக் கொடுத்துவிட முடியாது. அது பசிக்கு மாத்திரையைச் சாப்பிடுவதுபோல.
மேற்கூறிய சத்துகள் சில இடங்களில் பற்றாக்குறையாக இருக்கும். அதை நிறைவு செய்ய களைகள் உருவாகுகின்றன. சுண்ணாம்பு நிலத்தில் அதிகமாக துத்திச் செடி இருப்பதாக பதிவுகள் உள்ளன. அதேபோல சில செடிகளில் குறிப்பிட்ட தனிமம் மற்றவற்றைவிடக் கூடுதலாக இருக்கிக்கிறது. மாங்கனீஸ் எனப்படும் தனிமம் ஆவரை எனப்படும் தாவரத்தில் உள்ளது. இதுபோல எருக்கில் இரும்பு, போரான் போன்ற தனிமங்கள் கூடுதலாக உள்ளன. ஆக ஒரு நிலத்தில் வரும் களை அந்த நிலத்தில் குறிப்பிட்ட சத்தைக் கொடுப்பதற்காக வந்துள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும். அந்தக் களைகளை வெட்டி அந்த மண்ணுக்கே உணவாக/உரமாகக் கொடுக்க வேண்டும். அதைவிடுத்து களைகளை வெட்டி வரப்பில் போட்டுவிட்டால் பயிர் வரப்பில்தான் வளருமேயன்றி நிலத்தில் வளராது.
களைக்கொல்லிகளின் வரலாறு பூச்சிக்கொல்லிகளுக்குப் பின்னர் தோன்றியிருந்தாலும் 1970களில்தான் கிளைபோஃசேட் வகை களைக்கொல்லிகள் சந்தையில் தடம் பதித்தன. இது பின்னர் மான்சாண்டோ நிறுவனத்ததால் காப்புரிமை பெறப்பட்டது.
முதன்முதலாக 2012ஆம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த பன்றி வளர்க்கும் பண்ணையாளர் ஜான்பீட்டர்சன் என்பவர் தனது பன்றிகளுக்கு மரபீனி மாற்றப்பட்ட சோயா மொச்சையைக் கொடுத்துவந்துள்ளார். அதில்தான் கிளைஃபோசேட் களைக்கொல்லியின் தீங்கு கண்டறியப்பட்டது. இதன் பின்னர் உலகம் முழுமைக்கும் இது பெரிய சர்ச்சையாக மாறியது. ஐரோப்பா மட்டுமல்லாது, அர்சென்டைனா, ஈகுவேடார் என்று தென் அமெரிக்கா நாடுகளிலும் இதன் தீங்குகளைப் பற்றி ஆய்வுகள் வந்துவிட்டன.
ஆனால் நமது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், தனது இணைய தளத்தில் கிளைஃபோசேட் கொல்லியை பரிந்துரை செய்துள்ளது. அதுமட்டுமல்ல ஜெர்மனி போன்ற நாடுகளில் தடை செய்துள்ள ஃபுளுகுளோரலின் என்ற களைக் கொல்லியையும் பரிந்துரைத்துள்ளது. இதை மாற்றி சூழலைக் காக்கும் நடவடிக்கையில் நமது பல்கலைக்கழகம் ஈடுபட வேண்டும்.
களைக்கொல்லிகள் பொதுவாக மண்ணுக்கும் சூழலுக்கும் தீங்கு விளைவிப்பவை. குறிப்பாக கிளைஃபோசேட் வகை புற்றுக்நோய்க்கான காரணியாகவும், பேறுகாலத் தீங்குகளைக் கொடுப்பவையாகவும் உள்ளன என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. அத்துடன் சூழலில் மிக மோசமான திறன் மிக்க களைகளை உருவாக்கி அவற்றை எந்தக் கொல்லிகளாலும் அழிக்க முடியாத நிலைக்கு இட்டுச் சென்றுவிடும். அது மட்டுமல்ல, மண் மெல்ல மெல்ல வளமிழந்து பாறைபோல இறுகிவிடும்.