தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நம்மிடையே உள்ள நாயகர்கள் - செம்மல்


இம்மாதம் நாம் காணவிருக்கும் நண்பர், கார்த்திக் என்கிற சுப்ரமணியன். இவ்விளைஞர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். கல்லூரியில் வணிகவியல் பயின்று, ஒரு பெரிய பாட்டரி நிறுவனத்தில் கணக்கியல் (வரவு, செலவு, வரிக்கணக்கு) துறையில் பணி புரிந்தவர். அவர் மனைவி, ப்ரியாவும் ஒரு சென்னைவாசியே. அவரும் சென்னையில் பிறந்து, படித்து, ஒரு பன்னாட்டு வங்கியில், மென்பொருள் துறையில் மேலாளராகப் பணி புரிந்து கொண்டு இருந்தவர்.

இவ்விருவரும் "நல்ல வேலை", சுகமான நகர வாழ்க்கை, அங்குள்ள வசதிகள் எல்லாவற்றையும் துச்சமாய் ஒதுக்கி விட்டு, பொள்ளாச்சிக்கு சுமார் பன்னிரண்டு கி. மீ தொலைவில், அதிகம் போக்குவரத்து வசதி இல்லாத கோடங்கிப்பட்டி கிராமத்திற்கு தம் ஒரு வயது கூட நிறையாத குழந்தையுடன் கடந்த வருடம் குடி பெயர்ந்துள்ளனர். என்ன தேடல் இவர்களை இந்த வழக்கத்துக்கு மாறான மாற்றத்திற்குத் தூண்டியது என்ற வியப்புடனே இந்த‌ உரையாடல் / நேர்காணலுக்குச் சென்றோம்.

சுப்ரமணியன் மற்றும் ப்ரியா இருவருமே, மிக எளிய எதிர்பார்ப்புகளும் உயர்ந்த சிந்தனைகளும் உள்ளவர்கள் என்பது நாம் அவர்களுடன் பேசத் துவங்கியவுடனே தெளிவாகிறது. எங்களின் இந்த இட, வாழ்க்கை முறை மாற்றம் ஒரு சாதனையல்ல, மிகச் சுயநலமான, இயல்பான முடிவே என்கிறார் ப்ரியா.

"நாம் நம் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய செல்வம், காகிதப் பணமோ, விலை உயர்ந்த ஆடைகளோ, விளையாட்டுச் சாதனங்களோ அல்ல. திடமான உடலும், தெளிவான சிந்தனைத் திறனும், இயற்கையைப் பேணும்/ நேசிக்கும் வாழ்க்கை முறையுமே. எங்கள் குழந்தையின் மேல் நாங்கள் உண்மையான அக்கறை கொண்டுள்ளதாலேயே இந்த முடிவை எடுத்தோம். தவிரவும், என்னுடைய மதிப்பீடுகள் எல்லாருடைய மதிப்பீடுகளை சார்ந்தே இருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லையே"

அவர்கள் பெற்றோர், உறவினர், நண்பர்களின் ஆதரவு கிட்டியதா என்று கேட்டோம். சுப்ரமணியன், புன்னகையுடன், "பெற்றோரிடமிருந்து எதிர்ப்பு ஏதும் இல்லை. அதுவே பெரிய ஆறுதல்." என்றார்.

அவரவர் எண்ணங்களையும் திட்டங்களையும் தத்தம் சுய முயற்சி கொண்டே செயல் படுத்த வேண்டும் என்ற கருத்தில் அவர் உறுதியாக இருக்கிறார்.

சுப்ரமணியனிடம், அவருக்கு எவ்வாறு இயற்கை விவசாயத்தில் ஈடுபாடு வந்தது, அவரை தூண்டிய சிந்தனையாளர், செயல்வீரர் எவரேனும் உண்டா என்று கேட்டோம். அவர் மிகுந்த அடக்கத்துடன், தான் புத்தகங்கள் அதிகம் படிப்பதில்லை என்றார். சிறுவயது முதலே தன் தந்தை வீட்டில் சிறு காய்கறித் தோட்டம் அமைக்கும் போது உடன் உதவி செய்ய ஆரம்பித்தவர், நாளடைவில் அதில் தீவிர ஆர்வம் கொண்டு விட்டார்.

"என் தந்தையே என் ஆசான். நான் அவருடன் இணைந்திருந்த காலத்தில், பல அனுபவ பாடங்களைக் கற்றுக் கொண்டேன். வீட்டுக்கழிவுகளை உரமாக்குவது, மனிதக்கழிவு சுழற்சி, பயிர்களைப் பராமரித்தல், வீட்டில் விளையும் காய்களை அண்டை வீட்டாருடன் பகிர்தல், உடலைப் பேணுதல் என்று பல நல்ல நடைமுறைகளை பாடமாகச் சொல்லாமல் செயல்களாய் எனக்குப் புலப்படுத்தினார்"

சுப்ரமணியன் சிறு வயது முதலே யோகாசன பயிற்சி, தினசரி வாழ்வில் இராசயனங்களைத் தவிர்த்தல் (சோப்பு, பற்பசை), வீட்டுக் காய்கறிகளையே உண்ணுதல் என்று ஒரு இயற்கைக் குழந்தையாய் வளர்ந்துள்ளார்.

" ஒரு திருமண வலைத்தளத்தின் மூலமாக எங்கள் பெற்றோர் நான்கைந்து வரன்களை தேர்ந்தெடுத்தார்கள். அதில் கார்த்திக்கும்(சுப்ரமணியனை வீட்டார், நண்பர்கள் கார்த்திக் என்று அழைக்கிறார்கள்) ஒருவர். திருமணத்திற்கு முன்னால் நாங்கள் இருவரும் சந்தித்தோம். அப்பொழுதே கார்த்திக்கின் நேர்மை, அவரின் இலக்கு உறுதி, எண்ணத்தெளிவு யாவுமே என்னை மிகவும் கவர்ந்து விட்டன"

அவருக்கு இந்த மாற்றம் என நாம் எண்ணுவது வெறும் இடம் பெயர்தல் மட்டும் தான் என்கிறார் ப்ரியா.

"எனினும், இப்பொழுது அலுவலகம் என்ற பெரும் பாரம் என் மேலிருந்து இறங்கி விட்டது. தவிர, சென்னையின் இப்போதைய சூழலுக்கு, கோடங்கிப்பட்டி ஒரு சுத்தமான சொர்க்கம்" என்று மலர்ந்த கண்களுடன் சுப்ரமணியன் அவரைப் பற்றிய பேச்சுக்கு முத்தாய்ப்பு வைத்தார். ப்ரியா விடாமல் தொடர்ந்தார். ஒரு முறை சென்னையில் ஒரு கூட்டத்தில் நம்மாழ்வாரைச் சந்தித்துள்ளார்கள், இந்த தம்பதிகள். சுப்ரமணியனின் ஆர்வத்தை உணர்ந்த அய்யா அவர்கள், "சுப்ரமணி, நீ கண்டிப்பா விவசாயம் செய்வே" என்று வாழ்த்தி இருக்கிறார்.

அவர்களது தோட்ட இல்லம், செங்கற்களால், சிமென்ட் பூச்சின்றி கட்டப்பட்டுள்ளது. இரும்பு விட்டங்கள் மேலே ஓடு வேய்ந்துள்ளார்கள். நுழைந்தவுடன் ஒரு சிறு அறை, அதைத் தொடர்ந்து விசாலமான ஒரு அறை, ஒரு படுக்கையறை, சமையலறை எனக் கச்சிதமான வீடு. வீட்டைச் சுற்றி சிமென்ட் தளம் இடப்பட்டுள்ளது, விளை பொருட்களை உலர்த்த. அவர்கள் இல்லத்தேவைக்காக விளைக்கப்பட்ட ராகியை உலர்த்தி இருந்தார்கள். சமையல் அறை மூலையில் சிறு உரல், உலக்கை வைக்கப் பட்டிருந்து. ப்ரியா, அவ்வப்போது தேவைக்கேற்ப, தானே அவ்வுரலில் ராகியைக் குத்திக் கொள்வதாகக் கூறினார். சென்னையில் வளர்ந்த ஒரு பெண்ணுக்கு ராகி குத்தத் தெரியுமா என்று வியக்குமுன், ப்ரியா "எனக்கு இங்கே வருமுன் உலக்கை பிடிக்கக் கூடத் தெரியாது. ஆனால், இப்பொழுது, நன்றாகக் கற்றுக் கொண்டு விட்டேன்" என்று புன்னகைத்தார்.

நாங்கள் மதியம் சுமார் பன்னிரண்டு மணியில் இருந்து மூன்று மணி வரை பேசிக் கொண்டிருந்தோம். வீட்டுக்குள் நல்ல சூரிய ஓளி இருந்தது. மின்விசிறி ஏதும் இடாமல் இருந்த போதும், வீட்டுக்குள் வெப்பத்தை உணரவேயில்லை. சுப்ரமணியன் அதன் காரணங்களை விவரித்தார்.


1. வீட்டின் சுவர் உயரம் பன்னிரண்டு அடி, கூரையின் நடு உயரம் பதினைந்து அடிக்கும் மேல்.


2. நாங்கள் செங்கற்களை, நீண்ட நாட்கள் (மூன்று மாதங்களுக்கு மேல்), தண்ணீரில் ஊற வைத்த பின்னரே, கட்டிட வேலைகளை தொடங்கினோம். இதனால் எங்களுக்கு சுவர்ப்பூச்சுக்கு அவசியமேற்படவில்லை.


3. சிமென்ட் பூச்சு, பார்வைக்கு அழகாய்த் தோன்றினாலும், செங்கல் வழியே வரும் காற்றோட்டத்தை அது அறவே தடுத்து, தவிர்த்து விடுகிறது. வீடுகள் உள்ளே சூடாவதற்கு சிமென்ட் பூச்சின் பங்கு, மிக அதிகம்.


4. முக்கிய காரணமாய், நான் கருதுவது, அருகில் சாலை எதுவும் இல்லாதது."

அவர்களது இரண்டரை ஏக்கர் பண்ணையைக் காண வெளியே வந்தோம். சுமார் ஒரு ஏக்கருக்கு வேர்க்கடலை பயிரிட்டிருக்கிறார்கள். தாழ்வான ஒரு சிறு வயலில், மாப்பிள்ளை சம்பா நெல் நடவு செய்யப்பட்டிருக்கிறது. தோட்டத்தின் ஒரு கோடியில் முப்பது உயர்ந்த தென்னை மரங்கள் நம்மைப் பார்த்து கையசைக்கின்றன. மீதமுள்ள இடமெல்லாம் சணப்பை, செழிப்பாய் நிற்கிறது.

வேர்க்கடலையுடன், நாம் பொதுவாய்க் களை எனக் கருதும் பயிர்களும் வளர்ந்திருக்கின்றன. சுப்ரமணியன், அவர் அனுபவத்தில் களை எடுப்பதன் அணுகுமுறையை விவரித்தார். நாம் பயிரிட்டதைத் தவிர எல்லாப் பயிரும் களை என்று எண்ணுவது தவறாகும். அவரைப் பொறுத்தவரை, பல்விதப் பயிர்கள் நம் பயிருடன் வளரந்தால் அதனால் பெரிய பாதிப்பில்லை. எப்பொழுது ஒரே ஒரு விதத் தாவரம் மட்டும், அபரிமிதமாக வளர்கிறதோ அதை நாம் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். இந்தப் பாகுபாட்டை நாம் புரிந்து செயல்பட்டால், களை எடுக்கும் செலவு, மெனக்கடல் பெருமளவு குறையும். களை, பூச்சி எல்லாமே ஒழிக்கப்பட வேண்டியவையல்ல. நாம் நுட்பமாக உணர்ந்து செய்ய வேண்டிய ஒரு புனிதமான பணி விவசாயம். அந்த சூக்குமங்களை, நம் முன்னோர்கள் நன்றாக புரிந்து வைத்திருந்தார்கள். இப்போது விவசாயம் ஒரு முரட்டுத் தனமான, மூர்க்கம் நிறைந்த யாரும் செய்ய விரும்பாத பணியாகி விட்டது. உதாரணத்துக்கு, ஒற்றைப் பயிர் வேளாண்மை நம் மண்ணின் வளத்தை பெருமளவு குறைத்து விடும். இன்றைய விவசாயிகள் உடனடி பண வரவை மட்டுமே பார்க்கிறார்கள். நாட்பட்ட மண் வள பாதிப்பையோ, தத்தம் உழைப்பின் மதிப்பையோ எண்ணுவதே இல்லை.

பேசிக் கொண்டே நாங்கள், நெற்பயிர் வயலை அடைந்தோம். வழக்கமான நெல் வயல் போலன்றி, இடையிடையே களைகளுடன், மிதமான ஈரத்துடன் ( நீர் கட்டி நிற்காமல்) ஆனால், ஆரோக்கியமாக நெற்பயிர் வளர்ந்திருந்தது. சுப்ரமணியன், மிக குறைந்த பரப்பில், வீட்டுத் தேவைக்காக மட்டும், மாப்பிள்ளை சம்பா பயிர் செய்துள்ளார். இந்த ஈரம் போதுமா என்ற சந்தேகத்தை எழுப்பினோம். அவர் போதும் என்று உறுதியாகச் சொன்னார். " நெல் வயலில் நீர் தேக்குவதே, களைக்கு பயந்து தான். நான் ஒரு சிறு பரிசோதனைக்காக இம்முறையைக் கையாண்டிருக்கிறேன். இதன் பலன் / பயன் பற்றி உஙகளுக்கு, அறுவடைக்குப் பின் தகவல் தருகிறேன். கடந்த ஆண்டு, காட்டு யாணம், இதே வயலில் இதே முறையில் விளைவித்தோம். பயிர் நம் உயரத்துக்கு வளர்ந்து மிக அருமையாய்க் கதிர் விட்டது. என்ன!, சுற்று வட்டாரத்தில் வேறு உணவு இல்லாமையால், மயில்கள் படையெடுத்து, எங்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை."

மூன்று மணி நேரம் கழிந்ததே தெரியாமல், விடை பெற மனமில்லாமல் ப்ரியா, சுப்ரமணியன் தம்பதியரிடம் விடை பெற்று, அவர்கள் தோட்டத்தில் இருந்து புறப்பட்டோம். நிறைந்த மனத்துடன், இது போல் இன்னும் பல இளைஞர்கள் கிராமம் நோக்கி குடி பெயர்வார்களாயின் நம் நாடு எவ்வளவு அற்புத பூமியாக மாறும் என்ற நினைவுடன் நாம் விடை பெற்றோம்.

[ தொடர்பிற்கு: செம்மல் - 9994447252; சுப்ரமணியன் - 9962105692 ]

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org