தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

பீடையிலாததோர் கூடு - பயணி


சூழல்சுவடு குறைவான, ஆனால் கான்க்ரீட் வீட்டைப் போன்ற நீடித்த ஆயுளும், அடிக்கடி செப்பனிடத் தேவையற்றதும் ஆன‌ வீடு ஒன்றைப் பற்றிச் சென்ற இதழில் (கற்பகம் ஸ்ரீராம்) பார்த்தோம். இவ்விதழில் அவர்களுக்கு அருகிலேயே, அச்சுமண் சுவர் (சுடாத செங்கல்) கொண்டு தன் வீட்டைக் கட்டி வரும் திரு.சித்தார்த் அவர்களைப் பற்றிக் காண்போம். இவர் ஏற்கனவே தாளாண்மையில் தமிழக ஏரிப்பாசனம் என்ற கட்டுரைத் தொடரை எழுதியவர். சித்தார்த் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் உயர் பதவியில் இருந்தவர். ஐ.ஐ.டியில் பி.டெக் அதன் பின் ஐ.ஐ.எம்மில் எம்.பி.ஏ படித்தவர். இப்பொழுது ஒழவெட்டிக் கிராமத்தில் 2 ஏக்கரில் இயற்கை வேளாண்மை செய்து வருகிறார். காய்கறிகளை இயற்கையாக விளைத்து அதை அருகில் உள்ள கிராமங்களில் விற்று வருகிறார்!

இதற்கு முன், நாம் ஏற்கனவே லாரி பேக்கரின் MUD என்ற குறுநூலில் இருந்து தொகுத்தவற்றைச் சற்று நினைவு கொள்வோம்:

அச்சுமண் சுவர்

அச்சுமண் என்பது மண்தேர்வு செய்தபின் அதை ஒரு அச்சில் வார்த்துப் பின் வெயிலில் உலர்த்தி செங்கல்கள் போல் செய்து அவற்றை வைத்து வீடு கட்டுவது. இது மெக்சிகோ நாட்டில் பாரம்பரியமாக இருக்கும் தொழில்நுட்பம். இதனை அடோபி (adobe) என்று அழைக்கிறார்கள். தமிழ்நாட்டில் இத்தொழில்நுட்பம் முன்பு செல்வந்தர்களின் வீடு கட்டப் பயன் படுத்தப் பட்டிருக்கிறது.” பச்சை மண் செங்கல்” என்றும் இதனை அழைப்பார்கள். இதில் இரண்டு மாடிக் கட்டிடங்கள் எளிதாய்க் கட்டலாம்"

என்றும் "மண்வீடு கட்டும் தொழில்நுட்பங்கள் என்ன? செங்கல் என்றால் அனைவரும் பார்த்தது; கொத்தனார், மேஸ்திரி, பொறியாளர் என்று பலரும் இருக்கிறார்கள். மண்வீடு கட்ட யார் இருக்கிறார்கள்? மேலை நாடுகளில், மாற்று வாழ்முறையை முயற்சி செய்யும் அனைவரும் தங்களின் பெரும்பகுதி வேலையைத் தாங்களே செய்து கொள்கிறார்கள். ஆனால் நம் நாட்டில் முதலாளி வேலை செய்வது என்பது இயலாததாக இருக்கிறது. இதற்கு ஒரே வழி நாம் வீடு கட்டப் போகும் மாவட்டத்தில் ஊர்ப்புறங்களில் சென்று அங்குள்ள மண்வீடுகள், விவசாயத் தொழிலாளர்கள் வீடுகள் எந்த முறையில் கட்டப்படுகின்றன என்று அறிந்து அதே முறையில் இன்னும் நேர்த்தியாக நாம் கட்டுவதுதான்." என்றும் குறிப்பிட்டிருந்தோம்.

சித்தார்த் Barefoot Architect என்ற நூலைப் படித்து விட்டு அவற்றில் பரிந்துரைத்தது போல் சுருட்டுப் பரிசோதனை, பிஸ்கட் பரிசோதனை, குப்பிப் பரிசோதனை (ஒரு கண்ணாடிக் குப்பியில் மண்ணை நீருடன் கலக்கி மிக மிக நன்றாய்க் குலுக்கி விட்டு அதை சில மணிநேரம் அப்படியே வைத்திருந்தால் அதில் உள்ள களிமண் அடியில் தங்கி விடும் - இதன் மூலம் மண்ணில் உள்ள களிமண் விகிதத்தை அறியலாம்) போன்றவற்றைச் செய்து எவ்வாறு மண் வீடு கட்டுவது என்று பலவாறு சிந்தித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரின் உழவெட்டிக் கிராமத்தில் செங்கல் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளிகளைக் கலந்தார். அவர்கள் "இது ஒன்றும் கடினமானதல்ல. ஒரு செங்கல்லுக்கு 70 பைசா என்ற கூலி விகிதத்தில் நாங்கள் உங்களுக்கு வேண்டிய கற்களைச் செய்து தருகிறோம்" என்று செய்து கொடுத்துள்ளனர்.

மிகவும் எளிதாக சித்தார்த்தின் வயலிலேயே மண் எடுத்து, அதில் ஒரு மூலையில் தொட்டி போன்ற ஒரு குழி வெட்டி அதில் நீர் நிரப்பி, பல நாட்கள் மண்ணை நன்றாய்ப் புளிக்க வைத்து சரியான பதத்தில் செங்கல் அச்சுகளில் நிரப்பிப் பின் வயலிலேயே காய வைத்து 3 நாட்களில் (40 டிகிரி வெய்யிலில்!) மிக உறுதியான, சுடாத செங்கல் தயாராகிறது. சித்தார்த்தின் வயல் களிமண் பூமியாக உள்ளதால் இது எளிதில் சாத்தியமாகிறது.

இதில் நுட்பங்கள் என்றால்


1. சரியான பதத்தில் மண்ணைத் தேர்வு செய்வது; அதிகம் களிப்பானால் வெடிப்பு விடும்; அதிகம் மணற் பாங்கானால் ஒட்டாது. லாரி பேக்கர் சொன்னது போல், களிப்பானால் மணலையும், மணற்பாங்கானால் களிமண்ணையும் கலந்து கொள்ள வேண்டும். உறுதிப்பொருட்களையும் பயன்படுத்தலாம். இது அனுபவப் பாடத்திலேயே கற்றுக் கொள்ள வேண்டும்.


2. மண்ணைப் புளிக்க வைப்பது என்றால், நீரில் கலந்து நெடுநாட்கள் அது ஈரத்திலேயே இருக்க வேண்டும். ஏனெனில், களிமண் மிகுந்த பசைத் தன்மை உள்ளது. ஈரம் பட்டதும் அது பசைபோல் ஆகி ஈரமாகாத மண்ணைச் சுற்றிப் பசைபோல் படர்ந்து அதை ஈரத்தில் இருந்து காத்து விடும். எனவே பரவலாக மண்ணும், நீரும் கலக்க வேண்டுமென்றால், காலால் பிசைந்து, புளிக்க வைக்க வேண்டும்.


3. கல் அறுக்கும் பதம் சரியாக இருக்க வேண்டும். இதுவும் அனுபவ‌த்திலேயே கற்றுக் கொள்ள இயலும். தற்போது அரசின் ஹட்கோ (HUDCO) போன்ற நிறுவனங்கள் தங்கள் பொறியியல் வல்லுநர்களை இது போன்ற தொழில்நுட்பங்களைக் குறிப்பெடுத்துப் பாதுகாக்கவும், இவற்றைப் பரிசோதித்துப் பயன்படுத்தும்படியும் பணிக்க வேண்டும். அரசின் ஐ.டி.ஐ (ITI) போன்ற நிறுவனங்களில் இத்தகைய பாடத் திட்டங்களைச் சேர்க்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இவற்றைப் பரப்புரைமை செய்தும், கட்டிக் கொடுக்கும் பொறியியல் வல்லுனர்களை உருவாக்கவும் வேண்டும். இதனால் ஆற்றல் தேவை பெரிதும் குறைந்து மின்சாரத்திற்காகக் காட்டை அழிப்பது, அணை கட்டுவது, அணு உலைகள் நிறுவுவது போன்ற கோமாளித்தனங்களைச் செய்யாமல் இருக்கலாம்.

நமக்குத் தேவையான எளிய, இனிய தொழில்நுட்பங்களும் அதில் அனுபவம் மிக்க‌ வல்லுனர்களும் நம்மைச் சுற்றியே, நம் ஊர்ப்புறங்களிலேயே உள்ளனர். நாம் அவற்றிற்கு உரிய மரியாதையோ, அங்கீகாரமோ அளிக்காமல், ஏட்டுக் கல்வியை மட்டுமே பெரிதாக மதிக்கிறோம். இதுவும் ஒரு அடிமைச் சிந்தனையே - என்றுதான் மடியும் நம் அடிமையின் மோகம்!

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org