தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் தீர்வு - அனந்து


இன்று, மேகி (maggie) செய்தியில் மிகவும் அடிபடும் வேளையில் நாமும் அதனை தொட வேண்டுமல்லவா? மேகி தடைப்படுத்தப் படும் முன்னரே நாம் தாளாண்மையில் அடிசில் தீர்வில் எழுதியிருந்ததைச் சற்று நினைவு கூறுவோம்:

“அடுத்து 'நூடில்ஸ்'! அதுவும் இன்று விளம்பரங்களினால் மட்டுமே பிரபலம் அடைந்துள்ள இந்தப் பதப்படுத்தப்பட்ட பொருள், பல கொடிய நச்சு ரசாயனங்கள், மிக அதிக உப்பு, அடிமைத்தன்மைக்காக (அதன் சுவைக்கு நாம் அடிமையாவதற்கென‌) சில கேடு நிறைந்த பொருட்கள், எனப் பலவற்றை உள்ளடக்கியவை.

இதனுள் , அமிலம் சமன்படுத்துபவை, மணம் கூட்டுபவை, கெட்டிப்படுத்துபவை, ஈரப்பதம் காப்பவை, வண்ணமூட்டிகள், திடப்படுத்துபவை, மாவை வெளுக்கும் காரணிகள், பதப்படுத்துபவை, கட்டியாகாமல் தடுப்பவை என்று ஒரு மிக நீண்ட வேதிப் பட்டியலே உண்டு! நமது உடல் (குடல்!) மற்ற சத்துக்களை ஈர்ப்பதைத் தடுத்து மேலும் பல துன்பங்களை இவை விளைவிக்கும் என்றும், புற்று நோய் முதல் பல நோய்களை பயக்கின்றன என்றும் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல மணி நேரம் இவை செரிமானம் ஆகாமல் அப்படியே இருக்கும். பல உப்புக்களையும் அமிலத்தன்மையும் கொண்ட இந்த நூடில்ஸ் பெரும் ஆபத்தைப் பயக்கக்கூடிய பொருள். இந்த 'உடனடி' நூடில்ஸ் பல்வேறு உபாதைகளை அளிப்பதாக பல வெளி நாட்டு படிப்பினைகள் தெரிவிக்கின்றன.”

இன்று மேகி பிரச்சினைக்குள்ளாகி இருக்கும் காரணங்களான‌ அளவிற்கதிகமான காரீயமோ (lead) ரசாயன உப்பான மோனோசோடியம் க்ளூட்டமேட்டோ உண்மையான தீங்கு அல்ல.

காரீயம் நிலத்தடி நீரிலிருந்தும் வந்திருக்கலாம். சந்தையில் உள்ள பல்வேறு உணவுப் பொருட்களிலும் இருக்கலாம். அதன் பாதிப்புகளை நாம் அலட்சியப்படுத்த கூடாது. ஆனால் அது ஒன்றே இன்றைய மேகி பிரச்சனை அல்ல. மோனோசோடியம் க்ளூட்டமேட் (MSG) என்னும் கொடிய ரசாயனத்தை அவர்கள் போட்டது மட்டுமல்ல , அதனை இன்றளவும் மறைத்த‌து, மறைத்தது மட்டுமல்லாமல், பாக்கட்டின் மேலேயே ' மோனோசோடியம் க்ளூட்டமேட் இல்லை” என்று

நாக்கூசாமல் பிரசுரித்ததுதான் பிரச்சனை!

எப்படி மறைக்க‌ இயலும் என்கிறீர்களா?

இன்றைய கம்பனிக்கள் என்னவெல்லாம் மறைக்கின்றனர் தெரியுமா? நாக்கூசாமல் விளம்பரங்களில் இது என்னவோ ஆரோகியமானது, சத்து நிறைந்தது என்றும் கூறும் இவர்கள் சமீப காலமாக காய்கறிகள் நிரம்பியது என்றும் ஒரு கதை விட்டனர்! சில மணி நேரங்களில் கெட்டுப்போகும் (ந‌ல்) உணவுப் பொருட்கள் என்று நாம் பார்த்திருக்கிறோம். பின் எப்படி இதைப் போல் பாக்கட்டுகளில் வைக்கப்பட்ட இவர்களது காய்கறிகளும் மற்ற பொருட்களும் அப்படியே இருக்கும்? சற்று சிந்தித்துக் கேள்வி கேட்கிறோமா நாம்?

அந்த விள‌ம்பரங்களில் வரு்பவர்ளுக்கு நம்மை அவ்வப் பொருளை வாங்கச் சொல்லி சிபாரிசு செய்யும் பிரபலங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? அவர்கள் இந்தப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனரா? இப்பொழுது வெடித்திருப்பது போல் பிரச்சினை வெடிக்கும் பொழுதாவது இதைப் போல் கோடிகளை பெற்றுக் கண்டமேனிக்கும் நாப்பிளக்கப் பொய்யுரைக்கும் இந்தப் 'பெரியவர்களை' உள்ளே தள்ள வேண்டாமா?

யாருக்கும் எதுவும் புரிந்து விடக்கூடாது என்றே அறிவியல் சொற்களையோ அல்லது பயன்பாட்டில் இல்லாத சொற்களையோ உணவுப்பையின் அட்டையில் பொடி எழுத்தில் அச்சிடுகிறார்கள். எடுத்துக்காட்டாக - partially hydrogenated oil அல்லது hydrogenated vegetable oil அல்லது shortening என்று போட்டிருக்கும். இவை மிகவும் மோசமான எண்ணைகள் (அ) பதப்படுத்தப்பட்ட எண்ணைகள். இவை இந்த பொருட்களின் இருப்புத்தன்மையை (அலமாரிகளில் பல மாதங்கள் இருக்க உதவும்) அதிகரிக்கும். ஆனால் நமது வாழ்க்கையை சுருக்கும். இவற்றால் இரத்த நாணல்களில் அடைப்பு ஏற்படுவது உறுதி. பாம்ஆயில் என்று போட்டிருந்தால் காத தூரம் ஓடவும். அதுவும் பல நலக்கேடுகளுக்கு உறுதியளிக்கும்.

பென்சீனில் தயாரான சோடியம் பென்சொவேட், பொட்டசியம் பென்சொவேட் போன்ற பதப்படுத்திக் காப்பவை (preservatives), என்ற பெயரில் வலம் வருகின்றன. ஆனால் பென்சீனோ தைராய்டு மற்றும் புற்றுநோய் ஏற்படுத்தக் கூடியது. Butylated Hydroxyanisole - என்றும் நமக்கெல்லாம் புரிந்து விடக்கூடாது என்று (BHA) என குறிப்பிடப்படும் இது உணவு கெடாமல் இருக்க உபயோகிக்கப்படும் கொடிய ரசாயனம். இது நரம்புத் தளர்ச்சி முதல் புற்றுநோய் வரை கொடுக்க வல்லது. பல்வேறு பெயர்களில் பல உணவுப்பொருட்களிலும் சேர்க்கப்படுகிறது இது. மிகவும் கொடிய வேதிப்பொருளான இது மிக அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது.

வண்ணமூட்டிகள் - பல வண்ணங்களை உணவிற்கு சேர்க்க, பச்சை, மஞ்ச‌ள், சிகப்பு என இயற்கைக்கு மாறான வண்ணங்களை கொடுக்க, நம் உடலைக்கெடுக்க வந்தவை. தைராய்டு முதல் புற்று வரை பலதையும் அளிக்க வல்ல இவை மிகவும் கொடிய ரசாயனங்கள். நம் உடலில், இவை சேர்ந்து (cocktail effect) பன்முனைத் தாக்குதல் நடத்தும் - 30 வருடங்களுக்கு முன் உணவு ஒவ்வாமை (food allergy) , உயிரிக்கெதிரிகளுக்கு எதிர்ப்புத் தன்மை (anti-biotic resistance) போன்றவற்றைக் கேட்டு இருக்கிறோமா?

இனிப்பூட்டிகள் - அஸ்பர்டாமே, சாக்கரீன், சோள சிரப், என பலதும் உண்டு. இவை யாவும் மிகவும் விலை குறைந்த ஆனால் பல்வேறு உடல்தொல்லைகளைத் தரக்கூடியவை. இயற்கை சர்க்கரையையே அதிகம் உட்கொள்ளக்கூடாது எனும் போது, இவை எப்படி இருக்கும் எனக் கூறவும் வேண்டுமோ? இன்று நமது நாட்டிலும் காபி, தேனீர் போன்ற பானங்களுக்கு இந்த செயற்கை இனிப்பூட்டிகள் மிக எளிதாக நுழைந்து விட்டன‌ - அதுவும் நீரிழிவு நோய் உள்ளவர்களால், சர்க்கரையை குறைப்பதாக எண்ணி.

மைதா போன்ற தீட்டிய‌ (refined) மாவுக்கள் எப்பொழுதும் தீமையே. நார் மற்றும் எந்த‌ சத்தும் அற்ற இந்த சுத்திகரிக்கப்பட்ட மாவுக்கள் கேடு விளைவிப்பவை. உடம்பில் சர்க்கரையை அப்படியே அதிகப்படுத்தி (நார், சத்து இல்லாத வெறும் மாவுச்சத்துடன் மட்டும் இருப்பதால்) பல நலக்குறைகளை ஏற்படுத்தும். இப்படி நமக்குப் புரியாதவாறு பல்வேறு பெயர்களிலும் ஒளிந்துகொண்டு ஒரு பெரும் பட்டாளமே இருக்க, இன்னும் தெரியாமல் எவ்வளவு ஒளிந்திருக்கின்றனவோ? MSG என்றும் வெறும் க்ளூட்டமேட் என்றும் E621 என்றும் புரியாக் குறிப்பாக (மணமூட்டியாக) குறிப்பிடப்படும் இது ஒரு excitotoxin- நம்மை அறியாமல் ஊக்கமும், புத்துணர்ச்சியும் தூண்டக்கூடிய ஒரு பொருள்! பிடிபட்ட பின்னரும் நெஸ்லே நிறுவனம் தாங்கள் அந்த கொடிய க்ளூட்டமேட்டை கலக்கவில்லை என்று புளுகியது. இது வரை அந்த க்ளூட்டமேட் நல்லதா கெட்டதா என்று தெரியாதவர்களுக்கு நெஸ்லே புளுகியதிலிருந்தே சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிந்திருக்க வேண்டும்!

இப்படி இன்னும் எவ்வளவு எந்த எந்த பொருட்களில் யார் யாரெல்லாம் மறைக்கிறார்களோ? அது தான் நமக்கு பெரிய கவலை. வசதி, நேரமின்மை, வெரைட்டி, புதுமை என பல காரணங்கள் கூறி ஏமாற்றிக்கொண்டு நமது ஆரோக்கியத்தை கெடுத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு முறை கேம்பிரிட்ஜ் பல்கலைகழகத்தின் முனைவர் ஒருவர் கூறினார்: சிறு வயதில் கோவமும், ஆக்ரோசமும் நிறைந்த‌ தம்மை ஒரு “பிரசசினையான குழந்தை” என்றும் பெற்றோர் வளர்ப்பு சரியில்லை என்றும் முத்திரை குத்தப்பட்டாராம். இவரது பெற்றோர் பின்னர் உணவின் மேல் ஏற்பட்ட ஐயத்தின் பேரில் ஒவ்வொன்றாக நிறுத்த, E102 என்னும் வண்ணமூட்டியை(எல்லா கோலாக்களிலும், குளிர் பானங்களிலும் இருக்கும்!) நிறுத்தியதும், புதிய மிகவும் சாதுவான குழந்தையானாராம். இவர் இன்று் பாதுகாப்பான உணவிற்கு, உலகளவில் பங்களிக்கும் ஒரு பெரும் இந்திய மேதை !

E எண்களை கண்ணில் விளக்கெண்ணை விட்டுக் கண்டறிதல் வேண்டும். முழுவதுமாக தெரிவிப்பதற்கு பதில் இப்படி குறியீடுகளில் தெரிவிகின்றனர் உணவு நிறுவனத்தினர் ! E100-199 வண்ணங்கள்; E200-282 அமிலங்கள் மற்றும் (ஈரப்பதம்)காப்பவை. E300-341 அமிலம் சமன்படுத்துபவை (antioxidants and acid regulators). E400- கெட்டிப்படுத்துபவை, திடப்படுத்துபவை, கட்டிப்படுத்துபவை ; E500-E599 தாது உப்புக்கள் மற்றும் கட்டியாகாமல் தடுப்பவை(Mineral salts& Anti-caking agents); E600-E699 மணம் கூட்டுபவை; E900-E1520 – மற்றவை. இவற்றுள் ஒரு பெரும் ரசயானக் கிடங்கே உள்ளது, பலதும் பல்வகைக் கேடு விளைவிப்பவை. இவற்றில் சில, தெளிவாக நோய்க்காரணிகளாகவும் மற்றும் சில கொடிய பக்க விளைவு கொண்டவையாகவும் நிரூபிக்கப்பட்டவை . சில மேலை நாடுகளில் தடை கூட செய்யப்பட்டவை. (E200களில் பலவும் பல நாடுகளில் தடை செய்யப்பட்ட காப்பவை ஆகும்). மற்றவை எல்லாம் ஒரு அளவிற்குள் மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்கிறது சட்டம். ஆனால் நமது நாட்டில் யார் இதை எல்லாம் கண்காணிப்பது? இன்று ஆர்கானிக்/இயற்கை பொருட்கள் என்று கூறிக்கொண்டு எல்லா இயற்கை அங்காடிகளும் இந்த மேற்கூறிய பதப்படுத்துபவை, வண்ணமூட்டிகள், போன்றவற்றை அடக்கிய பழ ரசங்களை விற்பதும் தவறு தான்.

ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் ( high fructose corn syrup) என்பது ஒரு செயற்கை இனிப்பூட்டி. அமெரிக்காவில் இது கரும்பு சர்க்கரையை விட அதிகம் புழக்கத்தில் உள்ளது. சந்தைச் சக்திகளின் பணவலுவால், மக்காச்சோளத்தின் விலையைக் கட்டுக்குள் வைத்து, அதனின்று சர்க்கரை எடுத்து (இது எளிதும் காசு கம்மியும் ஆகும்!) அதனை இனிப்பூட்டியாக எல்லா இடங்களிலும் உபயோகித்து இன்று பெரும் உடற்பருமன் (obesity) முதல் நீரிழிவு நோய் வரை பல நோய்களுக்குக் காரணம் என்று அறியப்பட்டுள்ளது. முன்னாளில் அதனை முன்னிறுத்தித் திணித்த‌ அரசே வேண்டாம் என்கிறது! இன்று சந்தையில் இருக்கும் எல்லா செயற்கை இனிப்பூட்டிகளும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையே.

என்ன தான் சுகர் ஃப்ரீ, ஈக்வல், என்று பெயர் வைத்துக்கொண்டாலும் அவை மிகவும் அதிகம் ரசாயனம் உள்ள பல்கேடுகளை விளைவிக்கும் பொருளாக மட்டுமே இருக்கும். நம் தாத்தா காலத்தில் அவர்கள் உட்கொண்ட சக்கரைக்கும் நாம் உட்கொள்ளும் அளவிற்கும் ஒப்பிட்டு அதனால் இதன் கேடுகள் எவ்வளவு மடங்கு அதிகம் என்றும் பார்க்க வேண்டும். [ஹை ஃப்ரக்டோஸ் கார்ன் சிரப் தயாரிப்பாளர்கள் இன்று அதற்கு கெட்ட பெயர் வந்து விட்டதால் அதன் பெயரை இனி 'கார்ன் சுகர்' (சோள சக்கரை) என்று போட அனுமதி கோருகின்றனர்! யாராவது அமெரிக்காவில் விதிமுறைகள் மற்றும் கண்காணிப்பு சிறப்பாக இருக்கும் என்று கூறினால் அவரைத் தாளாண்மை படிக்கச் சொல்லுங்கள்!]

6 வயதில் பூப்பெய்தல், 10 வயதில் நரை, இளம் வயதில் நீரிழிவு நோய், எல்லா வயதிலும் எல்லா பக்கமும் புற்று நோய், 12 வயதில் சதை அழற்சி(muscle atrophy), இன்னும் என்ன என்னவோ ஊரும் பெயரும் தெரியாத வியாதிகள்: இவற்றுக்கும் நமது தட்டுக்கும் (உணவுக்கும்) சம்பந்தம் இல்லாதது போல் எவ்வளவு நாள் தான் இருக்க முடியும்?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org