தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா


நிறைவே செல்வம்!

இதுவரை நாம் தற்போதுள்ள பொருளாதாரக் கொள்கையின் மூடத்தனத்தையும், அதன் விளைவாக உலக நாடுகள் வாணிபத்துக்காகப் போர் புரிந்து கொள்வதும், வளங்களுக்காக வறிய நாடுகளை மக்களாட்சி என்னும் போர்வையில் ஊடுருவ முயல்வதையும், அதனால் விளையும் சூழல் மற்றும் மனித உடல், மனக் கேடுகளையும் பார்த்தோம். பொருளாதாரக் கொள்கை என்பது ஒரு நாடு செல்லும் திசை. அறிஞர் குமரப்பா கூறியது போல், ஒரு நாட்டின் கொள்கை அதன் அடிப்படைத் தத்துவ நம்பிக்கைகளின் பேரில் அமைய வேண்டும். உலகின் இப்போதும் தொடர்ந்து வரும் இரு பெரும் நாகரிகங்கள், கலாசாரங்கள் என்று பார்த்தால் சீனா, இந்தியா இரண்டுதான் - கிரேக்கம் பல ஞானிகளையும், அறிஞர்களையும் உலகிற்களித்தாலும் இன்று மேலை நாடுகளின் கொள்கைகளைக் காப்பியடித்ததால் ஓட்டாண்டியாகி நிற்கிறது. சீனா, இந்தியா இரண்டு நாட்டின் அறிஞர்களும், நிறைவை விழைதல், இயற்கையை மதித்தல், உடல், மன நலம் பேணுதல் ஆகிய கொள்கைகளையே பல்வேறு வார்த்தைகளில் பல்வேறு மொழிகளில் எடுத்துரைத்துள்ளனர். காந்தி தோல்ஸ்தாயிடம் உங்கள் எழுத்துக்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன என்ற பொழுது தோல்ஸ்தாய் 'நான் சொல்வது எல்லாமே உங்கள் திருக்குறளில் ஏற்கனவே சொன்னதுதான்' என்று எழுதினாராம்.

எனவே நாம் கிரேக்க நாட்டைப் போல் நம் அழிவை நாமே தேடிக் கொள்ளாமல், நம்மிடம் தொன்றுதொட்டு இருந்து வரும் அறிவுக் களஞ்சியங்களின் முத்துக்களைச் செயல்படுத்தினாலே போதும். செயல்முறையில் பார்த்தால் நம் பொருளாதாரக் கொள்கை தற்சார்பு என்னும் அடிப்படையை நோக்கியே செல்ல வேண்டும். தன் தேவைகளுக்குப் பிறரைச் சாராதவன்தான் உண்மையான செல்வந்தன். எனவே நம் பொருளாதாரக் கொள்கை


1. தற்சார்பான கிராமங்களை உருவாக்க வேண்டும். இயற்கை வேளாண்மை அதன் நடு நாயகமாக இருக்க வேண்டும். அனைத்து அடிப்படை உற்பத்திகளும் அதைச் சார்ந்து ஏர்ப்பின்னர் சுழல வேண்டும். கிராமத் தொழில்களே உற்பத்தியில் 90% பங்கு வகிக்க வேண்டும். முக்கியமாக உணவைப் பதப்படுத்தும் கிராமியத் தொழில்நுட்பங்கள் எண்ணற்ற கிராமிய வேலைகளை உருவாக்கும். இதற்குத் தேவையான‌ தொழில்நுட்பமோ, அறிவியலோ எல்லாமே 70 வயது மேற்பட்ட கிராமத்துப் பெரியவர்களுக்குத் தெரிந்ததுதான்!
2. மாநில அரசானது கல்வி, பொது மருத்துவம், சட்ட ஒழுங்கு, கொள்கை மற்றும் திட்டமிடல் போன்ற மிக முக்கிய நிர்வாகங்களுடன் தன் செயல்பாட்டை நிறுத்திக் கொள்ள வேண்டும். மாநில அரசு தன்னைக் கிராமப் பஞ்சாயத்துகளுக்கு ஒரு பாதுகாப்போனாகவும், சேவகனாகவும் மட்டுமே கொள்ள வேண்டும். வனப் பாதுகாப்பு, நீர்நிலைகள் , நதிகள் பாதுகாப்பு போன்றவற்றை முழு மூச்சுடன் கவனிக்க வேண்டும்.
3. மத்திய அரசானது சட்டம், எல்லைப் பாதுகாப்பு, அந்நிய நாட்டுத் தலையீடுகளைத் தடுத்தல், உள்நாட்டுச் சந்தைப் பாதுகாப்பு, இறக்குமதிக்கு எதிர்ப்பு போன்ற மிக முக்கிய விடயங்களை மட்டுமே கவனிக்க வேண்டும். மத்திய அரசு தன்னை மாநில அரசின் பாதுகாப்போனாகவும், சேவகனாகவும் மட்டுமே கொள்ள வேண்டும்.
4. மக்களைச் சந்தைச் சக்திகளிடமிருந்தும், குறிப்பாக இளைஞர்களை ஊடக மயக்கத்திலிருந்தும் பாதுகாக்க வேண்டும்.5. சுரண்டலுக்குக் கைக்கூலிகள் ஆகாத கொள்கைகள் இருக்க வேண்டும். இச்சிந்தனைகளை அரசு இயந்திரம் மிகவும் பரப்புரைமை செய்ய வேண்டும். நம்நாட்டில் வள்ளுவரும், புராணங்களும், பண்டை இலக்கியங்களும் காட்டிய‌ வழியில் நாம் செல்கின்றோம் என்று எல்லோரும் பெருமைப் படும்படி இப்பரப்புரைமை இருக்க வேண்டும்.

“எல்லாம் சரி , ஆனால், இதையெல்லாம் செயலாக்க முடியாத அளவு நாம் செயற்கையில் புரையோடி விட்டோம் - எனவே ஆட்டு மந்தையுடன் போவதுதான் ஒரே வழி” என்று சாக்கடையில் குளிப்பதை நியாயப் படுத்தலாகாது. சாக்கடையில் இருந்து முயன்று மீள்வதுதான் விடுதலைக்கு ஒரே வழி - அது எவ்வளவு கடினமாக இருப்பினும்.

இன்று உலக அழிவுகளுக்கெல்லாம் ஒரே ஒரு காரணி இருக்கிறது என்றால் அது மனிதப் பேராசைதான். பகுத்துண்ணத் தெரியாத/விரும்பாத மாந்த இனத்தின் சுயநலமே எல்லாத் தீங்குகளுக்கும் ஆணிவேராக உள்ளது. இதை அரசியல் மாற்றங்களாலோ, திட்டமிடலாலோ தீர்க்க இயலாது. தனிமனிதர்கள் அறிவிலே தெளிவு பெற்றவர்களாகி, தத்தம் நுகர்ச்சியைக் குறைத்துக் கொண்டு, இருக்கும் வளங்களைக் கண்மூடித்தனமாக‌ அழிக்காமல் அனைவருடனும் பகிர்ந்து கொள்வது ஒன்றே நிலைத்த, நீடித்த நல்வாழ்விற்கு வழிவகுக்கும். (பகிர்ந்து கொள்வது என்பது கூடத் தவறு; சரியாய்ச் சொன்னால் மற்றவருக்கு விட்டு வைப்பது என்றே கூற வேண்டும் - எல்லா வளங்களும் பொதுச் சொத்தே).

இக்கொள்கைகளை நடைமுறைப் படுத்தத் தேவையானது நிறையத் தனிமனிதர்கள் சமூகத்தினின்று வெளிச்சென்று தற்சார்பு அடைவதுதான். அன்பு அதிகமாகும் போது அறமும் எளிதாகும். தனிமனித மாற்றம் எவ்வாறு சமூகத்தை மாற்றும் என்ற கேள்வி நியாயமானதாய்த் தோன்றினாலும் அது மேலோட்டமான கேள்வியே. ஒரு பெரும் பாத்திரத்தில் பத்து லிட்டர் பால் இருந்தாலும், அதில் ஒரே ஒரு கிண்ணம் மோர் கலந்தால் மொத்தப் பாலும் தயிராகி விடுகிறது. அந்தக் கிண்ணம் மோர் இல்லையென்றால் மொத்தப் பாலும் வீணாகி விடுகிறது. உலகில் எவ்வளவு தீமையும், அழுக்காறும், அவாவும் இருந்தாலும், ஆங்காங்கே உள்ள தனிமனிதர்கள் தாங்கள் மாறினால், அவர்களது மனத் தூய்மைக்கும், தேடலின் தீவிரத்திற்கும் ஏற்ப அவர்களது தாக்கம் உலகில் ஏற்படத்தான் செய்யும்.

உலகில் எல்லாப் புரட்சிகளுக்கும் தெருவில் இறங்கிக் குரல் கொடுத்தவர்கள், போராடியவர்கள், சிறை சென்றவர்கள் என்று பார்த்தால் 1 % மக்களே. இதுவே புரட்சிகள் வெற்றிபெறப் போதுமானதாக இருக்கிறது. செய‌லை விடச் சிந்தை நூறு மடங்கு ஆற்றல் மிக்கது. எனவே 0.01 % , அதாவது பத்தாயிரத்தில் ஒருவர் தன் சுயநலத்தைத் துறந்து, நுகர்ச்சியைக் குறைத்துக் கொண்டு அதை மற்றவருக்கும் எடுத்துரைத்தாலே ஒரு நிரந்தரப் புரட்சியும் மாற்றமும் ஏற்பட்டு விடும். இது நல்லவர்கள் எல்லோராலும் எல்லா இடங்களிலும் முயலக் கூடியதே. மன மாற்றம் ஒன்றுதான் வேறு எதற்காகவும் காத்திருக்கத் தேவையில்லாமல், வேறு எதையும் சார்ந்திருக்காமல் உடனே செய்யக் கூடியது. இமயமலையை ஏறுவது மிகக் கடினமானதுதான். அதற்காக மலைத்துப் போய் நிற்பதைவிட நாம் முதல் அடியை எடுத்துவைப்போம் - அடுத்த அடி தானாய்த் தெரியும்.

முற்றும்

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org