தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தோரோ பக்கம் - சாட்சி

நாம் எல்லோருமே வாழ்வின் ஒரு கட்டத்தில் காணும் இடம் எல்லாம் இதை நம் வீட்டு மனையாக்கிக் கொள்ளலாமோ என்று சிந்தித்ததுண்டு. நான் வாழ்ந்த இடத்தில் இருந்து 12 மைல் தூரத்திற்குக் காணும் இடத்தையெல்லாம் நான் அளந்ததுண்டு. கற்பனையில் நான் எல்லாப் பண்ணைகளையும் ஒன்றுக்குப்பின் ஒன்றாய் வாங்கி இருக்கிறேன். ஒவ்வொரு உழவனின் பண்ணையிலும் நான் நடந்து, அதில் உள்ள ஆப்பிள் பழங்களை உண்டு, பண்ணை நிர்வாகத்தைப் பற்றி அவ்வுழவருடன் வம்பளந்து, அவர் சொன்ன விலைக்கு , என்ன விலையாயினும், வாங்கி, அவரிடமே அதை என் நினைவுகளில் அடமானம் வைத்து, அவர் வாக்கே சாசனமாய் - கிரயம் செய்வதைத் தவிர எல்லாம் செய்திருக்கிறேன்! அப்பண்ணையையும், அவரையும் நினைவுகளில் பண்படுத்தியபின், அப்பண்ணையை முழுவதுமாய் அனுபவித்தபின், வாங்காமல் அமைதியாய்ப் பின்வாங்கி இருக்கிறேன். விரைவில் மேம்படுத்தப் படாத இடங்கள் பலவற்றை வீட்டு மனைக்கென நான் கண்டறிந்ததுண்டு; அவை ஊரிலிருந்து தொலைவில் இருப்பதாகப் பலர் எண்ணக் கூடும், ஆனால் என் கண்ணிற்கு அவ்விடத்தில் இருந்து ஊர் மிகத் தொலைவாக இருப்பதாகப் பட்டது.

ஒவ்வொரு இடத்திலும் அரை நாள் அமர்ந்து என்னென்ன மரம் நடலாம், பண்ணையின் வடிவமைப்பு எப்படி இருக்க வேண்டும், பழ மரங்கள் எங்கே நடுவது, கால்நடை எங்கே மேய்ப்பது, விறகை எங்கு அடுக்குவது - கோடை , இளவேனில், பனி போன்ற காலங்கள் எப்படி இருக்கும் என்றெல்லாம் நான் கற்பனை செய்து விட்டுப் பின் அவ்விடத்தை அப்படியே தரிசாக விட்டு விட்டு நான் என் வழியே சென்றதுண்டு - ஏனெனில் ஒரு மனிதன் எவ்வளவு விஷயங்களை அப்படியே விட முடிகிறதோ அவ்வளவுக்கவ்வளவு அவன் செல்வந்தன்! நான் எந்தப் பண்ணையையும் சொந்தமாக வாங்கவில்லை எனினும், ஹால்லோவெல் பண்ணையை கிட்டத் தட்ட வாங்குவதாக விலை பேசிவிட்டு, அதற்கான விதைகள், மண்வெட்டி, கைவண்டி எல்லாம் செய்யத் தயாராகி விட்டேன்; ஆனால் அதன் உரிமையாளர் அதை எனக்குக் கிரயம் செய்யுமுன் அவரின் மனைவி தன் மனதை மாற்றிக் கொண்டு விட்டார்; அவரோ அதை விட்டுக் கொடுப்பதற்கு எனக்குப் பத்து டாலர்கள் கொடுப்பதாகச் சொன்னார்.

உண்மையைச் சொல்வதானால், என்னிடம் அப்போது பத்து சென்ட் மட்டுமே இருந்தது - நான் பத்து சென்ட் உடையவனா, பத்து டாலர் உடையவனா, பண்ணை உடையவனா அல்லது மூன்றும் உடையவனா என்று என் கணித அறிவிற்கு எட்டவில்லை! ( 1 டாலர் = 100 சென்ட்). எனினும் அந்தப் பண்ணையையும், அவர் கொடுப்பதாகச் சொன்ன 10 டாலரையும் அவரையே வைத்துக் கொள்ளச் சொல்லிவிட்டேன்; வேறுவிதமாகச் சொல்வதானால் நான் பண்ணையை வாங்கிய விலைக்கே அவரிடம் கொடுத்து விட்டு, அவருக்குப் பத்து டாலர்களையும் பரிசாக அளித்து விட்டேன் - என் பத்து சென்ட் பணமும், விதைகள், மண்வெட்டி, கலப்பைகளும் என்னிடமே தங்கின. இப்படியாக என் வறுமைக்கு எந்தப் பழுதும் வராமலே நான் பெரும் செல்வந்தனாக ஆனதை உணர்ந்தேன்! ஆனால் அந்த நிலப்பரப்பின் அழகை மட்டும் நான் என்னுடன் கொண்டு சென்று, அப்பண்ணையின் மகசூலை இன்றளவும் ரசித்து வருகிறேன்.

வால்டன் (Walden or Life in the Woods) நூலில் இருந்து

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org