தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

கிராமிய வாழ்வாதரங்களுக்கு ஒரு பயிற்சி - ராம்


[கடந்த சில மாதங்களாக ராம் அவர்கள் கிராமிய வாழ்வாதாரங்கள் குறித்து எழுதி வருகிறார். இவர், ஆரோவில்லுடனும், தமிழக அரசுடனும் இணைந்து, முழுவதும் தற்சார்பான வாழ்வாதாரப் பயிற்சி மையம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளார். அது பற்றிய அறிமுகம் இது ]

ஒரு அழகான சூழலில், வாழ்வாதாரத்தைக் குறித்துக் கலந்து உரையாடவும், சிந்திக்கவும், புதிய நூதன முயற்சிகளைக் கண்டறிய‌வும் நேர்ந்தால், நமது மக்கள் தற்சார்பு முயற்சிகளை முனைவார்கள். “நாங்க இந்த நாள்வரை எந்த அளவிற்கு மண்ணைப் பாதுகாக்க தவறிவிட்டோம் என்று இன்றுதான் உணர்ந்தேன், அவரு மண்ண உருவாக்கறாரு”, என்று முதல் முறையாக பெர்னார்டு மற்றும் தீபிகா அவர்களது “பெப்பல் கார்டன்” (pebble garden) அல்லது கூழாங்கல் பூங்காவிலிருந்து திரும்பிய ஒரு கிராமத்துப் பெண் ஆச்சரியத்துடன் கூறினார். இந்தச் சிறு பண்ணையை நேரில் சென்ற யாவரும் வியந்து பார்ப்பது, அவர்களது விடாமுயற்சி, இயற்கையுடன் இசைந்து வாழும் எளிமை, அந்தத் தோட்டத்தில் அவர்கள் இதனால் ஏற்படுத்தக்கூடிய விந்தைக‌ள்.

ஆரோவில் எனப்படும் ‘சர்வதேச கிராமம்”, தமிழகத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், பாண்டிச்சேரியை ஒட்டிய கிராமங்களில் ஏறத்தாழ 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. 1969ஆம் ஆண்டு அரவிந்தர் நினைவில், அன்னை ஆசியுடன், “என்றும் குன்றா இளமையுடனும், இயற்கை ஒத்த வாழ்வினிற்கும், தொடர் பயிற்சி மற்றும் கல்விப் பணிக்காகவும்” இந்த விந்தை கிராமமான ஆரோவில் துவங்கப்பட்டது. இங்கு வந்த முதல் வெளிநாட்டவர்கள் யாவரும், இந்தியாவின் ஆன்மீக அறைகூவலுக்கு செவிமடுத்துப் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து சேர்ந்தனர். இன்று ஏறத்தாழ 50 நாடுகளைச் சேர்ந்த 2500 பேர் ஒன்றாக வாழும், ஆரோவில் என்னும் கூட்டு முயற்சி உலகத்தில் வேறு எங்கும் சாத்தியமில்லை என்று பன்னாடுகளைப் பயணித்த பலரும் கூறுகின்றனர்.

கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக, பெர்னார்டு போன்ற பலரும் இங்கு ஆராய்ந்து, உணர்ந்த பல நீடித்த தன்மை கொண்ட வளர்ச்சிக்கான தொழில்நுட்பம், விஞ்ஞானம், மேலாண்மை முறைகள் ஆகியவை உலகின் பல கோடிகளிலிருந்தும் வல்லுனர்களையும், மாணவர்களையும் ஈர்த்துவந்துள்ளது.

இன்றைய சுற்றுப்புற சூழலில், நிலைக்கும் தன்மை கொண்ட எந்த பொருளாதாரமும், சுற்றுப்புறச் சூழலைப் பராமரிப்பதில் துவங்குவது நியதி. இந்தக் கொள்கையை ஒரு வாழும் சூத்திரமாக கடைபிடித்துவரும் ஆரோவில்லை சேர்ந்தவர்கள், உலகிற்குத் தங்கள் வாழ்க்கைமுறையைப் பகிர்வதின் மூலமே பல உத்திகளையும், சூக்குமங்களையும் உணர்த்துகின்றனர்

தமிழக அரசின், ஊரக வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், ஆரோவில்லின் கூட்டமைப்புடன் ஒரு “நிலைத்த நீடித்த வாழ்வாதார பயிற்சி மையம்” ஏற்படுத்த உள்ளதாக அரசாணை வெளியானது. இதனையடுத்து இந்த வருடம் மார்சு மாதம் அத்தகைய ஒரு பயிற்சி மையம் ஆரோவிலின் அருகாமையில் உள்ள கோட்டக்கரை கிராமத்தில் நிறுவப்பட்டு இயங்கி வருகின்றது. இங்கு அரசாங்க அதிகாரிகள் மற்றும் கிராமப்புற வாழ்வாதார திட்டத்தின் பயனாளிகளான பெண்கள் மற்றும் விவசாயிகளுக்குப் பலவிதமான பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அரசாங்க அதிகாரிகளுக்கு நிலைத்த நீடித்த தன்மை கொண்ட

வாழ்வாதாரத்தை நிறுவும் உத்திகளையும், கிராம‌ப்புரப் பெண்களுக்கு, பல கைத்தொழில் சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

இவற்றில் சில முக்கியமான பயிற்சிகள்


1. இயற்கைவழி வேளாண்மை பயிற்ச்சி
2. இயற்கைவழி கால்நடை பராமரிப்பிற்ககான பயிற்ச்சி
3. உள்ளூர் மூலிகைகள் கொண்டு ஆரோக்கியமான வாழ்விற்கான பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி
4. கிராமப்புற தொழில்களுக்கான பலவிதமான பயிலரங்குகள்
5. சுருள்பாசி தயாரிப்பிற்கான பயிற்சி
6. உள்ளூர் ம‌ண் கொண்டு அழகான மற்றும் திடமான வீடுகள் கட்டுவதற்கான பயிற்சி
7. உள்ளூர் சந்தைப்படுத்துதலில் லாபம் ஈட்டும் விதத்தில் தொழில் திட்டங்களைத் தயாரித்தலுக்கான பயிற்சி

“நிலைத்த நீடித்த தன்மையை அடைவதற்கு முக்கியமான துவக்கம், வேகமான வாழ்முறையிலிருந்து நிதானமான வாழ்க்கை முறைக்கு மாறுதல்தான்”, என்று இந்த பயிற்சி நிறுவனத்தின் வித்திட்டவர்களில் ஒருவரான ஜாஸ் தெரிவிக்கின்றார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாஸ், 35 ஆண்டுகளாக உழைத்து இங்கு ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார். இவருடைய காட்டில், இளம் காலை பொழுதில், பறவைகளின் ஓசைகள் மட்டுமே கேட்டுக்கொண்டு மூலிகைகளின் மணத்தை சுவாசித்துக்கொண்டே நடத்து கொண்டு, “நிலைக்கும் தன்மை எதில் உள்ளது” என்று வினாக்களை மனதில் அசை போட்டுக்கொண்டு இவருடன் நடக்கும் பெரும்பாலான அரசாங்க அதிகாரிகள் இவருடன் ஒப்புக்கொள்ளுகின்றனர். இலக்கை எட்ட வேண்டும் என்னும் சுமையில், பலவிதமான அழுத்தத்தின் மத்தியில் வேலை செய்யும் ஊரக வளர்ச்சித்துறை அரசாங்க அதிகாரிகள் பலர் இங்கு அமைதியான சூழலில் பயிற்சியில் பங்கு கொள்ளுவதன் மூலம் தாங்கள் புத்துணர்ச்சி பெறுவதாகத் தெரிவிக்கின்றனர். வயலில் வேலை செய்தல், யோகாசனம் மற்றும் அமைதி காத்து உணவருந்துதல், மன அழுத்தத்தைக் குறைக்கும் இசை என்று பலவிதமான மனதை அமைதிப்படுத்தும் பயிற்சிகள் இந்த பயிற்சி மையத்தில் நடக்கும் ஒவ்வொரு பயிற்சியிலும் இடம் பெறுகின்றன‌.

செயல்முறை பயிற்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதால், இங்கு வரும் பயனாளிகள் தாங்கள் கற்பவற்றின் பயனை உடனுக்குடன் உணர முடிகின்றது. உதாரணமாக, கால்நடைக்கான மூலிகை பயிற்சி, கால்நடைக்கான ஒரு மூலிகை முகாம் கிராமத்தில் நடத்தி அதன் மூலமாம் நேரடியாக பயிற்சியாளர்கள் அதன் பயனை உணரும் வண்ணம் பயிற்சி அமைந்துள்ளது. இங்கு பயிற்சிக்கு வரும் பலரும், “இத்தகைய சூழலில் நாங்கள் இதுவரை ஒரு பயிற்சியில் பங்கு கொண்டதில்லை. எங்கள் வாழ்நாளில் இங்கு கற்றவற்றை மறக்க இயலாது. இங்கு கற்றவற்றை நடைமுறைப்படுத்துதல் இனி எங்கள் குறிக்கோள்” என்று கூறுகின்றனர். அரசாங்கத்தின் இச்சிறு முயற்சி, சிறு அளவிலேனும் கிராமப்புற வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையூட்டுகிறது.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org