தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


பாடை கட்டும் மேம்படுத்தல்


இன்று செய்தித்தாளைத் திறந்தால் எப்பொழுதும் கண்ணில் படுவது இறப்பையும், கொலையையும் பற்றிய செய்திகளே. குண்டு வெடிப்பு, தீவிரவாதக் கொலைகள், நிலச்சரிவு, இயற்கைச் சீற்றங்கள், கட்டிடம் இடிந்து சாதல், ரயில் கவிழ்தல், போக்குவரத்து விபத்துக்கள், அரசியல் கொலைகள், ஊழலை மறைக்கக் கொலைகள், மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் கல்விச் சிறார், இணையத்தில் தவறான நடத்தையால் ஒருவரை ஒருவர் கொல்லும் காதலன், காதலிகள் போன்று எண்ணற்றவை. இவை தவிரப் பெரும் வேதனையாய்க் கடன்சுமை தாங்காமல் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் - மிகச் சமீபத்தில் வளமான காவிரிக் கடைமடைப் பாசனப் பகுதியில் கூட ஒரு விவசாயி தற்கொலை செய்து கொண்டார். இவ்வருடம் தென்மேற்குப் பருவ மழை ஓரளவே பெய்யும் என்று கூறியிருக்கிறார்கள். பருவ மாற்றம், மற்றும் புவி வெப்பமடைதல் என்பதை எப்போதோ நிகழப் போகும் பிற்கால இடர் என்று இவ்வளவு நாள் அலட்சியப் படுத்தி வந்தோம். தொடர்ந்து மூன்றாவது வருடமாக மழை பெய்யாதோ என்னும் அச்சம் அடிவயிற்றைக் கவ்வும்போது இவ்விடர் இன்றைய நிதர்சனமாகி விட்டது புரிகிறது.

இயற்கை வளங்களை அழித்துக் காசாக்கிக் கணக்குக் காட்டும், இந்த வளர்ச்சியும், மேம்படுத்தலும் ஏழைகளையும், கிராமங்களையும் காவு வாங்கித்தான் வளரும் என்று நாம் பல வருடங்களாக எச்சரித்து வருகிறோம். இன்று கிரேக்க நாடு படும் பாட்டில் இருந்து அதைத் தெளிவாக அறியலாம். கிரேக்க நாடு 1981ல் தாராளமயத்திற்கும், உலக மயத்திற்கும் தன் சந்தைகளைத் திறந்து விட்டது - நம்மை விடப் பத்து ஆண்டுகளுக்கும் முன்னரே! ஐக்கிய ஐரோப்பாவுடன் கிரீஸ் இணைந்தது. அதன் நாணயமும் கிரேக்க டிராக்மாவில் இருந்து யூரோ ஆனது. இதற்கு முன்னர் நம்போல் கிரேக்கமும் வேளாண்மை, மீன்பிடித்தல், சுற்றுலா, கப்பல் போக்குவரத்து போன்றவற்றின் மூலம் உலகின் மிக அழகான மற்றும் அமைதியான நாடுகளில் ஒன்றாய் இருந்து வந்தது. உலகமயமானதன் பின்னர் சுற்றுலா மிக முக்கியத் தொழிலானது. கட்டுப்படுத்தப் படாத நிர்மாணப் பணிகள், (கட்டிடங்கள், சுற்றுலா விடுதிகள், நீச்சல் குளங்கள்), வேளாண்மை இயந்திர மயமாதல், பருத்தி, புகையிலை, திராட்சை போன்ற பணப்பயிர்கள் சாகுபடி, கிராம‌ங்களை விட்டு நகரம் பெயர்தல் போன்ற “மேம்படுத்தும்” செயல்கள் நடந்தேறின. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 80% மக்கள் நகர‌ங்களில் வசிக்கின்றனர்! அந்நிய முதலீட்டிற்கும், யூரோ நாணயத்திற்கும் சிவப்புக் கம்பளம் விரித்தத‌ன் விளைவாய் இயற்கை வளங்கள் அழிந்து, ஏற்றுமதியைப் போல் மூன்று மடங்கு இறக்குமதி செய்து மீள‌ இயலாத கடனில் சிக்கி இருக்கிறது கிரீஸ்.

இதே போல்தான் ஐஸ்லாந்து நாடும் பெரும் கடனில் சிக்கி, 2008ல் மூழ்கும் நிலைக்கு வந்தது; ஆனால் அது ஐரோப்பிய யூனியனில் இல்லாமல் தனித்து இருந்ததால் அதனால் க்ரோனர் எனப்படும் நாணயத்தை அச்சிட்டும், திற‌ம்பட நிதி நிர்வாகம் செய்தும், 3 வருடங்களில் நிலைமையைச் சரி செய்ய இயன்றது. கிரீஸோ, யூரோவுடன் ஒன்றாகத்தான் இருப்போம் என்ற பிடிவாதத்துடன், நேற்று தன் கடன்களை அடைக்கப் புதிய பெரும் கடன் ஒன்றை வாங்கித் தற்காலிகமாக நிலைமையச் சமாளித்திருக்கிறது. இத்தனைக்கும் ஒரு கோடி மக்கள்தொகை மட்டுமே கொண்ட கிரேக்கநாட்டில் ஒரு நபருக்கு 65 சென்ட் விளைநிலம் உள்ளது. இது நம்நாட்டைப் போல இரண்டு மடங்கு! இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறிக், குமரப்பா பரிந்துரைத்தது போல், கிரேக்க மக்களில் பாதிப்பேர் கிராமம் பெயர்ந்து இயற்கை வேளாண்மையைக் கைக்கொண்டால் உலகின் மிகப் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறலாம.

நாம் கிரீஸ் , ஐஸ்லாந்து நாடுகளிடம் பாடம் கற்று இந்தப் பாமரர்களுக்குப் பாடை கட்டும் மேம்படுத்துதலைக் கைவிட்டு கிராம முன்னேற்றத்தைக் கைக்கொண்டால் பிழைக்கலாம், செழித்துத் தழைக்கலாம். இல்லையேல், அன்று உலகிற்கு சாக்ரடீஸ், பிளேட்டோ போன்ற மேதைகளை வழங்கி வழிகாட்டிய கிரேக்கம் இன்று உலக வங்கியிடம் பிச்சை எடுப்பதுபோல், உலகின் மிக விவேகமான நாடான நாமும் திருவோடு ஏந்த வேண்டியதுதான்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org