தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய பொருளாதாரக் கொள்கை - உழவன் பாலா

தொழில்நுட்பம் என்னும் போர்வாள்

நாம் , அரசு எத்தகைய பொருளாதாரக் கொள்கையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்து வருகிறோம். 'கடை விரித்தேன் கொள்வாரில்லை' என்றாலும், கேட்க ஆளில்லையாயினும், 'என‌க்குண்மை தெரிந்தது சொல்வேன்' என்று தர்மக் கூச்சல் போடுவது நம் கடமையாகிறது. இந்தப் பொருளாதாரக் கொள்கையில் புதுமை எதுவுமே இல்லை; கட்டுரையின் தலைப்பே தவறு! காந்தி, குமரப்பா சொல்லியவற்றைத்தான் நாம் மீண்டும் வேறு வார்த்தைகளில், வேறு உதாரணங்களுடன் சொல்கிறோம். அக்கருத்துக்கள் அன்றை விடவும் இன்று அதிகப் பொருத்தமாக இருப்பது அவர்களின் தீர்க்க தரிசனத்தையும், நம் குருட்டுக் கொள்கைகளின் பலவீனங்களையும் காட்டுகிறது. மெத்தப் படித்த பொருளாதார மேதைகளால் வடிவமைக்கப் பெற்ற திட்டங்களையும், கொள்கைகளையும் குருட்டுக் கொள்கை என்று கூற நான் யார் என்று கேட்கலாம். ஆனால் கண்ணெதிரே ஒரு அதள பாதாளம் இருப்பதைக் கண்டும், சூழல் அழிவு என்ற பெரும் பூதம் நம்மை நோக்கிப் பெரும் வேகத்துடன் வருவதைக் கண்டும் “அவ்வாறு எதுவுமே இல்லை” என்ற கூறும் அறிஞர்களைக் குருடர்கள் என்று கூறாமல் வேறு என்ன சொல்வது?பூனை கண்ணை மூடி விட்டால் உலகம் இருண்டு விடுமா?

காந்தி தன்னுடைய இந்திய சுயராச்சியம் நூலில் பிரிட்டனின் பாராளுமன்றம் ஒரு மலட்டுப் பெண் என்றும் , விலைமாது என்றும் வர்ணித்தார் (The British parliament is a sterile woman and a prostitute). இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. பல ஆண்டுகள் கழித்து அவரிடம் கேட்ட போது அதைப் படித்து விட்டு , ” நான் கூறியது அனைத்துமே சரியானதுதான்; இந்நூலில் ஒரு எழுத்தைக் கூட நான் மாற்ற விரும்பவில்லை” என்று கூறி விட்டார். நான் காந்தியின் செருப்பைத் தொடக் கூடத் தகுதியற்றவன்தான் ; எனினும் வலுத்தோரை மட்டுமே வளமாக்கும் நம் நவீனப் பொருளாதாரக் கொள்கைகள் குருட்டுக் கொள்கைகள் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை - இதைப் பற்றி எந்த மேடையிலும், எந்த அறிவாளியிடம் விவாதிக்கவும் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. நம்நாடு ஏழைகள் மிகுந்த நாடு. செல்வந்தர்கள் அதிகமாவதனால் வறுமை ஒழிந்து விடாது. நலிந்தோரைக் கருத்தில் கொள்ளாமல், காக்காமல் தீட்டப்படும் அனைத்துத் திட்டங்களும், கொள்கைகளும் குருடரின் உளறல்களே.

இந்த மேம்படுத்துதல் (development) என்னும் வடிவமைப்பில் ஒரு நூதன சூழ்ச்சி உள்ளது. அது என்னவென்றால், விஞ்ஞானத்தையும், தொழில்நுட்பத்தையும் வாணிபம் ஆளுமை செய்வதுதான். நவீன தொழில்நுட்பத்தினால் மட்டுமே மேம்படுத்த இயலும் என்று கண்கட்டு வித்தைக்காரனைப் போல ஒரு ஜாலம் ஏற்படுத்தப் படுகிறது. பின்னர் ஊடக வலுவால் அது மீண்டும், மீண்டும் பறைசாற்றப்பட்டு அது உண்மையோ என்று மக்களைச் சிந்திக்க வைக்கிறது. இதுதான் ஒரே மருந்து என்று பெருவாரியான மக்கள் நம்புவதே இந்தத் திட்ட வரைவின் வெற்றி. நன்கு படித்துப் பலவும் தெரிந்த விவரமானவர்கள் கூட, அறிவுஜீவிகள் என்று மக்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டவர்கள் கூட இந்தத் 'தொழில்நுட்ப மாதிரி' ஒன்றுதான் நம்மைக் காக்கும் என்று தீவிரமாக நம்புகிறார்கள். நவீன தொழில்நுட்பத்திற்குப் பணம் தேவை; பணம் செல்வந்தர்களிடமும், வியாபாரிகளிடமும் உள்ளது; எனவே வாணிபத்திற்குத் தொழில்நுட்பம் அடிமையாகிறது. மிகவும் மதிக்கப்படும் விஞ்ஞானிகள் எவ்வாறு வாணிப நிறுவனங்களுக்கு விலைமாதுக்கள் ஆகிறார்கள் என்று “புதிய புலவர்கள்” தொடரில் பாபுஜி எழுதி வருகிறார். உயிர் காப்பவை என்று நம்பப்படும் பல மருந்துகள் லாபம் ஈட்டப் பிறந்தவைதான் என்பது அம்மருந்தை விடக் கசப்பான ஒரு உண்மை. தொழில்நுட்பத்தினால் சந்தைகளை ஆளுமை செய்யும் வாணிப நிறுவனங்கள் மீண்டும் அதிகப் பொருள் ஈட்டி, மேலும், மேலும் புதிய கண்டுபிடிப்புக்களையும் நுட்பங்களையும் தம்முடையது ஆக்கிக் கொள்கின்றன. ஏழைகள் வெறும் நுகர்வோராகிக் கடன் படுகின்றனர்.

இதில் மிகப் பெரிய வேடிக்கை (வேதனையும் கூட) என்னவென்றால், எல்லாவற்றிற்கும் விடை கூறக் கிளம்பும் நவீனப் பொருளியல் மேதைகள் எவருமே, பொருளாதார மேம்பாடு (economic development) என்பதற்கு இதுவரை ஒருமித்த, தெளிவான‌ ஒரு வரைவைத் தரவில்லை ! உலகமே காப்பியடிக்கத் துடிக்கும் அமெரிக்காவின் தலை சிறந்த பல்கலைக் கழகமான ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் பொருளியல் பேராசிரியர் மைக்கேல் போர்ட்டர் என்பவர் “பல்வேறு விதமான போட்டிச் சூழல்களை உருவாக்கும் ஒரு நாட்பட்ட முறைமை” தான் பொருளாதார மேம்படுத்துதல் என்கிறார். இவர் “நாடுகளின் போட்டியிடும் திறன் உயர்வு” (The Competitive Advantage of Nations) என்ற நூலை எழுதியவர்! இவரைப் பொருத்தவரை போட்டியே பொருளாதார மேம்பாடு. தத்தம் நாட்டு வாணிபர்கள் முன்னே நிற்குமாறு பார்த்துக் கொள்வது அவ்வ‌ந்நாட்டு அரசின் கடமை என்று இவர் கூறுகிறார். நெப்போலியன் முன்பு இங்கிலாந்தைக் “கடை விரிப்போரின் நாடு” என்று கேலிசெய்தது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

சர்வதேசப் பொருளாதார மேம்பாட்டு ஆய‌ம் (International Economic Development Council) என்ன கூறுகிறது? “பொருளாதார மேம்படுத்துதல் என்பது இன்னதென்று வரையறுத்துக் கூற இயலாது. ஆனால் அதன் நோக்கங்களையும், குறிக்கோள்களையும் வைத்து அதை விவரிக்கலாம். பொதுவாக அவை வேலைகளையும், செல்வத்தையும் உருவாக்குவதும் , வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதும் என்று கொள்ளலாம் ” என்றொரு வழுக்குப்பாறையில் இறங்குகிறது. மேலும் அவ்வாயம் கூறுவது:

பொருளாதார முன்னேற்றம் என்பது மூன்று கூறுகளை உள்ளடக்கியது: அவை

- பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், மேலதிகமான வேலை வாய்ப்பு மற்றும் நிலைத்தன்மையுடைய வளர்ச்சி ஆகியவற்றை வளர்க்கும் அரசுக் கொள்கைகள்

- நெடுஞ்சாலைகள், பூங்காக்கள், நலிந்தோர்களுக்கான மருத்துவ வசதிகள், பள்ளிகள் போன்றவற்றை உருவாக்கும் அரசின் திட்டங்கள்

- வாணிபத்தையும், மக்கள் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தும் அரசுத் திட்டங்கள்

இதெல்லாம் கேட்க நன்றாய் இருப்பினும் இதில் எதுவுமே செயல்திட்டங்களை விளக்காத வார்த்தைப் பசப்புக்கள் என்று உற்றுப் பார்த்தால் புரியும்.

ஆனால் எந்த ஒரு பொருளியல் வல்லுனரும், “வலுத்தவன், இளைத்தவனைச் சுரண்டுவ‌துதான் மேம்படுத்துதல்” என்று இதுவரை கூறியதாக நான் அறியேன். திருடனைத் தேள் கொட்டியது போல, இதுதான் மேம்படுத்துதல் என்று அறுதியிட்டுக் கூற இயலாமைக்கு அதனுள் ஒளிந்திருக்கும் உண்மையும், அதை அப்பட்டமாக்க இயலாமையுமே காரணம்.

வாழ்க்கைத் தரம் என்றால் என்ன? அதிக நுகர்ச்சியா? அதிகச் செலவிடும் வலுவா? ஆற்றலை அளவின்றிப் பயன் படுத்துவதா? எது வாழ்க்கைத் தரம் ? இதற்கும் சரியான வரைவு எதுவும் யாரும் கூறவில்லை.

தொழில்நுட்பம் உருவாக்கும் பொறிகள் மிகுந்த கவர்ச்சியானவை - இதை மறுப்பதற்கில்லை. ஆட்டுக்கல்லில் மாவு அரைக்கும் ஆச்சி, மின் கல்லில் எளிதாக‌ மெய் வருத்தாமல் அரைக்கும் பொழுது நாம் தொழில்நுட்பம் கூடாது என்று சொல்வதற்கில்லை. ஆனால், நெல் அரைக்கிறேன் என்று பெரும் ராட்சத மில் அதில் உள்ள சத்து முழுவதையும் கொன்று வெறும் துணிவெளுக்கும் மாவைப்போல் அரிசியைத் தள்ளும்போது, சற்று ஏற்றுக்கொள்ளக் கடினமாய் இருக்கிறது. தெருவில் விளையாடி வளர வேண்டிய குழந்தைகளைத் தன்முன் கண்விழிக்கும் நேரமெல்லாம் கட்டிப்போடும் தொலைக்காட்சியைக் கண்டால் மிகுந்த சினம் உண்டாகிறது. தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் ஒரு கத்தியைப் போன்றவை; காயையும் ந‌றுக்கலாம், கழுத்தையும் அறுக்கலாம். எனவே நாம் தொழில்நுட்பத்தைக் குறை கூறுவதை விட, அதைப் பயன்படுத்தும் வாணிபத்தைச் சீர்திருத்தலாம். அதன் சுகங்களுக்குப் பழகி உடலையும் மூளையையும் மழுக்கிக் கொள்ளும் நம் சோம்பலைக் குறை கூறலாம்.

நவீன வாணிபமும், அதன் கைப்பாவைகளாய் உள்ள அரசியல், விஞ்ஞானம், தொழில்நுட்பம் ஆகியவையும் மனித‌ மனத்திற்கு எந்த வித முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. உண்மையைச் சொன்னால், வாணிபம் உலகளாவிய தன் ஆளுமையைக் காப்பதற்கும், வளர்ப்பதற்கும் தொழில்நுட்பத்தை ஒரு போர்வாள் போல் ஆயுதமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதே உண்மை.

உடல் உழைப்பில் இரண்டு வகை உண்டு - ஒன்று செய்ததையே மீண்டும் மீண்டும் செய்யும் திறனற்ற உடல் உழைப்பு. இன்னொன்று ஆசாரி, கொத்தனார், தையல் கலைஞர், மண்பானை செய்வோர் போன்றோரின் திறமையுள்ள உடல் உழைப்பு. இதை ஆங்கிலத்தில் drudgery என்றும் skill என்றும் வேறுபடுத்திக் கூறுகிறார்கள். நல்ல தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டும் என்றால், திறனற்ற வேலைகளுக்குப் பொறிகள் கண்டு பிடித்து விட்டுத் திறமையை மனிதர்கள் வெளிப்படுத்தும் உடல் உழைப்புக்கு வாய்ப்புக் கொடுப்பதாக இருக்க வேண்டும். சுரண்டலுக்கு ஒவ்வாத தொழில்நுட்பம் சூழலுக்கு உகந்தது; மனித நலத்திற்கு உகந்தது. இதற்கு ஒரு உதாரணம் காந்தியே கூறியிருக்கிறார். அதுதான் தையல் இயந்திரம். அது கையால் தைப்பதை எளிமையாக்கினாலும், தையல் என்னும் கலையை அழிப்பதில்லை. அதைப் பயன்படுத்துவோரின் கைவன்மையைப் புறக்கணிப்பதில்லை. செய்யும் தொழிலில் நம் திறமையை வெளிப்படுத்தினால் வேலையில் கிடைக்கும் நிறைவே தனிதான்.நல்ல தொழில்நுட்பம் என்பது ஒரு நடுப்பாதையில் பயணிக்க வேண்டும்.

இவ்வாறு பழமை முறைகளுக்கும், வெறும் இயந்திரங்களுக்கும் இடைப்பட்ட ஒரு பாதையைக் காட்டியவர்தான் ஈ. எஃப். சூமாக்கர் (E.F.Schumacher) என்னும் மிகச் சிறந்த பொருளியல் நிபுணர் . இவர் இடைப்பட்ட தொழில்நுட்பம் (Intermediate Technology) என்ற சொல்லாடலை உருவாக்கியதோடன்றி அதனை அவ்வச் சூழலுக்கு ஏற்ப பொருத்தமான தொழில்நுட்பம் ( appropriate technology) ஆகவும் மாற்றினார். இடைப்பட்ட தொநில்நுட்பத்தைப் பற்றியும், அதைப் பரப்ப் அவர் துவங்கிய இடைப்பட்ட தொழில்நுட்ப மேம்படுத்துதல் குழுவைப் (Intermediate Technology Development Group) பற்றியும், நம் நாட்டின் தற்போதைய சூழலில் அவை எவ்வாறு பொருத்தமானவை என்பது பற்றியும் வரும் இதழ்களில் பார்ப்போம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org