தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

சென்னையில் உணவுத் திருவிழா - அனந்து


பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பு (safe food alliance) என்பது பல்வேறு உழவர் குழுமங்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், மருத்துவர்கள், விவசாயிகள், வழக்கறிஞர்கள், தன்னார்வலர்கள் என்று பலரும் சேர்ந்த, பாதுகாப்பான நஞ்சில்லா உணவு மற்றும் தற்சார்பு வாழ்வியலுக்கான, ஒர் கூட்டமைப்பு. இதன் மூலம் தமிழகமெங்கும் பல விழிப்புணர்வுக் கூட்டங்கள் மற்றும் உணவுத்திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அப்படி ஒன்று சூலை 5 அன்று சென்னை அண்ணா நகரில் டவர் பூங்காவில் அரங்கேற்றப்பட்டது.

இம்முறை முதல், இது பாதுகாப்பான உணவுத்திருவிழாவாக மட்டும் இல்லாமல் தற்சார்பு வாழ்வியலை முன்னிறுத்தும் விழாவாக இருக்கும் என முன்பே அறிவித்தது போலவே நிகழ்வை வடிவமைத்திருந்தனர். உணவு உற்பத்தி மற்றும் நுகர்வுக் கோணங்களில் மட்டும் பார்க்காமல் நஞ்சில்லா உணவையும் தாண்டி நாம் நுகர்வன எல்லாம் சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் இருப்பதன் அவசியத்தையும் “மனசாட்சிக்கு இசைந்த‌ நுகர்வு” (conscious consumerism and eco friendly) என்ற அடிப்படையில் இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாகவும் இருந்தது. எல்லாவற்றிற்கும் மேலாக நாம் நுகரும் பொருட்களெல்லாம் சரியான/ நியாய விலை கொடுக்கப்பட்டு பொருளை உற்பத்தி செய்வோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும், என்ற சமூகப் பொறுப்பும் கொண்டதாக இருந்தது..

நமது உணவு நஞ்சில்லாத‌தாக இருப்பதை வலியுறுத்த நல்ல கீரை மற்றும் இயற்கை விவசாயிகள் சந்தை (organic farmers market- OFM) என்னும் இயற்கை அங்காடிகளின் கூட்டுறவு,ஆகிய இரு அமைப்புக்களும் அரங்கங்கள் அமைத்தன.இதன் வாயிலாக ரசாயனங்களற்ற இயற்கைப் பொருட்கள் பார்வைக்கும் நுகர்வுக்கும் வைக்கப்பட்டன.

இயற்கை விவசாயிகளையும் அவர்களது இயற்கைப் பொருட்களையும் ஆராதிக்க வேண்டியதன் அவசியத்தையும் இதனை அனைவருக்கும் தொடர்ந்து எடுத்துச்செல்லும் 'இயற்கை விவசாயிகள் சந்தை' (organic farmers market- OFM) என்னும் இயற்கை அங்காடிகளின் கூட்டுறவு சென்னையில் எங்கெல்லாம் கிளைகள் இருக்கின்றன என்பதையும் தெரிவித்து அமைக்கப்பட்டது.

இப்படி இயற்கை அங்காடிகளை மட்டுமே நம்பியிராமல், நாமே நம் தோட்டத்தில், மாடியில் என்ன என்ன விளைவித்து நுகர முடியும் என்பதையும் எடுத்துக்காட்டும் வண்ணம் ஒரு அரங்கம்.

பின்னர் உணவு மட்டுமில்லாது நம் உடைகளும் மிகவும் விஷமேற்றப்பட்டு, விதேசி விதை வியாபார சூழ்ச்சியில் சிக்கி மிகவும் மாசு ஏற்படுத்தும் ஒரு தொழிலாக இருப்பதை சித்தரித்து, அதனால் நஞ்சற்ற பருத்தியினின்று கையால் நூல் நூற்று, கைத்தறியாக நெய்யப்பட்டு, இயற்கை சாயமூட்டப்பட்ட, அருமையான “துலா” ஆடைகள் காட்சிக்கும் வாங்கவும் வைக்கப்பட்டன. இதனால் உழவு, நூற்பு, நெசவு, இயற்கைச் சாயம் ஆகிய‌ நான்கு வாழ்வாதாரங்கள் முன்னேற்றப்படுவதை எடுத்துரைத்து இதனை ஆதரிக்க வேண்டியதன் அவசியத்தையும் முன்வைத்தனர்.

அடுத்து இந்த நல்ல இயற்கைப் பொருட்களைச் சமைக்க அருமையான மண் பானைகள், களிமண் சமையல் பாத்திரங்கள் வைக்கப்பட்டிருந்தன. இப்படிப்பட்ட மண் பானைகளில் சமைக்கப்படும் உணவானது மிகவும் சுவையாகவும் நீண்ட நேரம் கெடாமலிருப்பதுடன், இன்று அறிவியல்பூர்வமாக மண் பானைகளில் சமைத்த உணவின் சத்து 100 சதவிகிதம் சமைத்த பிறகும் நிறைந்து இருப்பது எடுத்துரைக்கப்பட்டது. (அலுமினியத்தில் சமைத்த உணவு 13%ம், பித்தளையில் சமைத்தவை 90%ம், கறைபடா எஃகில் (stainless steel) செய்தவை 23% மட்டுமே சத்து தங்குவதாக ஆய்வுகள் உரைக்கின்றன‌!).

பின்னர் சத்தான உணவு மிகவும் சுவையாகவும் இருக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் “தாய் வழி இயற்கை உணவு” குழுமம் சமைத்திருந்த உணவு வகைகள், பல்வேறு சாறுகள் எல்லாம் மக்களால் பெருவாரியாக ஆதரிக்கப்பட்டன. நெல்லி சாறு, அருகம் புல் சாறு, யானை நெருஞ்சில் சாறு , இனிப்பு & கார அவல், வரகு அரிசி சாம்பர் சாதம், கம்பு-சோளம் தயிர் சாதம், கொள்ளு துவயல், பீட்ரூட் ஊறுகாய், முளை கட்டிய பல தானியம், கருவேப்பிலை கீர் என்று அசத்திய இந்த குழு மேலும் தூதுவளை, முடக்கத்தான், முருங்கை, கொள்ளு, வெந்தய கீரை, வல்லாரை என ஆறு வகை சூப்களையும் வைத்து பிரமாதப்படுத்தினர்.

பெரும் திரளாக வந்திருந்த மக்கள் எல்லோரும் வாழ்த்தியும் வாங்கியும் மகிழ்ச்சியுடன் சென்றனர். தொடர்ந்து இவற்றை ஆதரிப்பதாகவும், நஞ்சு மற்றும் மாசு அற்ற நுகர்வை மேற்கொள்வோம் என்றும் கூறினர். இந்த முயற்சியினைப் பல்வேறு இடங்களுக்கும் எடுத்துச் செல்லுமாறு பலரும் வேண்டினர்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org