தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உண்ணும் கலையும், கலையில்லா உணவும் - ராம்


தற்சார்பு வாழ்வியல் என்பது மூன்று நலன்களை நோக்கிப் பயணிப்பது - உடல் நலம், மன வள‌ம், மண் நலம். இதில் ஒன்று குறையினும் மற்ற இரண்டும் சிதிலமடையும். இயற்கை உணவு, உடற்பயிற்சி போன்றவை உடல்நலத்தைப் பேணினாலும், உடலின் மறுபக்கமாக உள்ள மனத்தைப் பேணக் கலைகள் மிக இன்றியமையாதவை. இலங்கைத் தமிழரான ஆனந்த குமாரசுவாமி 1877 முதல் 1947 வரை வாழ்ந்த ஒரு தலைசிறந்த சிந்தனையாளர்; கலை ரசிகர், எழுத்தாளர். சமூகத்தில் கலைகளின் தேவையை, மனவளத்திற்கு அவை ஆற்றும் பணியை மிக ஆழமாகவும், துல்லியமாகவும் விரிவுரைத்தவர். இவரைப் பற்றித் தாளாண்மையில் பின்னர் காண்போம் - ஆசிரியர் )

தில்லியில் விமானம் ஏறும்போதே கவனித்தேன், தமிழகத்தின் பல ஊர்களிலிருந்து மக்கள் இன்று விமானத்தில் அதிகமாகவே இருந்தனர். சாதாரணமாக வரும், அரசாங்க அதிகாரிகள், மார்வாடி தொழிலதிபர்கள், பன்னாட்டுக் கும்பணி பணியாளார்கள், மருத்துவர்கள் மற்றும் பலவிதமான கூட்டங்களில் கலந்துகொண்டுவிட்டு திரும்பும் வல்லுனர்கள் அனைவருமே, தாங்கள் உண்டு, தங்கள் வேலை உண்டு என்று “உம்”மென்று உட்கார்ந்து வருவார்கள். வாடிக்கை இல்லாதவர்கள் வரும்போது விமானத்தில் சலசலப்பு அதிகமாக இருக்கும், ஒரு வித்தியாசத்தை உள்ளே நுழைந்ததுமே உணரலாம். இன்று அவ்வாறு இருந்தது.

என் இருக்கையை முன்னரே வந்திருந்த ஒரு தம்பதியினர் ஆக்கிரமித்திருந்தனர். “நாங்க முதல் முறையாக விமானத்தில் வருகிறோம், வேடிக்கை பார்க்கத்தான் ஜன்னல் ஓரமா ஒக்காந்துட்டோம், பரவாயில்லையா?” என்று குடுமியுடன் இருந்த அந்த பிராமண பூசாரி உருவானவர் என்னிடம் வினவினார். “சரி” என்று தலையசைத்துவிட்டு, நடைபாதையை அடுத்த இருக்கையில் உட்கார்ந்துகொண்டு அவர்களிடம் பேசத் துவங்கினேன். “கைலாஷ் போயிட்டு வருகிறோம்” என்றார். தமிழகத்தில் பிரசித்தி பெற்ற ஒரு சிவன் கோவிலில் பூசாரியாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அவர். “காலையில் நேராக பகவான் திருப்பள்ளி எழுச்சிக்கு போயிடணும், ஒரு மணி நேரத்தில சென்னை போயிடும் இல்லயா? பையன் கார் எடுத்துண்டு சென்னைக்கு வந்துடுவான்” என்று கூறும்போது, சொந்த ஊரை சென்றடயவேண்டும் என்னும் அவரது ஆவலும், பெருமையும் தெரிந்தது. நமது மக்களின் அபார நம்பிக்கை, தெரியாத ஊர்களுக்கு கூட தைரியமாக செல்லத்தூண்டும் தன்மையைக் குறித்து வியந்து கொண்டே நான் படித்துக்கொண்டிருந்த, “கலையும், சுதேசியும்” என்கின்ற ஆனந்த குமாரசுவாமி எழுதிய புத்தகத்தைப் படிக்கத் துவங்கினேன்.

“இந்தியா ஜாவா தீபகர்பத்தை ஆட்சிகொண்டு, சீனாவின்மீது சிந்தனை அளவில் ஆதிக்கம் செலுத்தி, ஆசியாவின் முக்கிய அரசியல் நாடாக விளங்கிய அதே காலகட்டத்தில்தான், கலையிலும் மிகச்சிறந்து விளங்கியது என்பதை நாம் உணரவில்லையா? நமது தனிமனித வாழ்க்கையில் அறத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றால், நமது சுற்றுப்புறத்தையும், வாழ்க்கைத் தரத்தையும் அழகானதாக்கிக்கொள்ள வேண்டும் என்று நாம் உணரவில்லையா? உண்மையான அழகில்லாத (கலையிழந்த) வாழ்க்கையில் அறத்தைக் கடைபிடிக்க இயலாது என்பதை நாம் உணரவில்லையா? நம்மைச் சுற்றியுள்ள கொச்சைப்படுத்தப் பட்ட நவீன இந்தியாவை நோக்குங்கள் – சுற்றுலா வியாபாரத்திற்கு விலைமாதாகிவிட்ட நமது கலைகளை பாருங்கள் – தண்ணீர் சொம்பிற்கு கெரோசின் டப்பாவை உபயோகிக்கின்ற அவல நிலையை பாருங்கள், ஐரோப்பிய உடைகளின் ஒரு மட்டமான வடிவாக உருவாக்கப்பட்ட உடைகளை பெருமையாக அணியும் நம் நாட்டவரைப் பாருங்கள், நமது வீடுகளுக்குள் புகுந்துகொண்டுள்ள ஐரோப்பிய கடலோர விடுதிகளுக்காக வடிவமைக்கபட்ட மேஜை, நாற்காலி, மற்றும் அலங்காரப் பொருட்களைப் பாருங்கள், அசிங்கமான கண்ணாடி அலங்கார விளக்குகள், (விலைகுறைவான) சீன பொம்மைகள், செயற்கைப் பூக்கள், கிராமபோனுக்கும், ஹார்மோனியத்திற்கும் அடிமையான நமது மக்கள், இவை அனைத்தும் நமது ஆன்மாவை ஆக்கிரமித்துக்கொண்டுள்ள ஒரு தீய சக்தியின் வெளிப் பரிமாணத்தின் சான்றாகவே தோன்றுகிறது.”

“தொன்மையான மற்றும் பாரம்பரிய சொத்தான நமது கலாரசனையை இழந்துவிட்டதைக் கொஞ்சமும் சிந்திக்க மறந்துவிட்ட நமது இந்த மெத்தனப் போக்கு நமது வலுவிழந்த தன்மையைக் குறிக்கின்றது. இந்தியாவின் புனர்நிர்மாணம் வெறும் அரசியல் மற்றும் பொருளாதார தளங்களில் மட்டுமில்லாமல், கலை என்கின்ற தளத்திலிருந்தும் ஏற்படுத்த இயலும் என்று நம்புங்கள். ஒரு சிறந்த நிலையான நாட்டை உருவாக்கும் திறனை வெறும் பொருள்களின் அடிப்படையிலான சிந்தனையும், சித்தாந்தமும் நம்முள் ஒருபொழுதும் ஏற்படுத்தாது. அதற்கு, ஒரு சீரிய லட்சியமும், கற்பனையும், கனவுகளும், தொலைநோக்கும், கொண்ட சமூக சிந்தனையை, தியாகிகள் மற்றும் கலைஞர்களை உருவாக்கும் உணவாக படைக்கவேண்டும்.”

“இந்தியாவின் இந்த அழகற்ற (உண்மை கலை இழந்த) நிலையை, நாம் இந்த நாட்டை நேசிக்கவில்லை என்பதற்கு ஒரு சான்றாக நான் பார்க்கின்றேன். ஏனென்றால், அனைத்து உலக நாடுகளைவிட சமீபகாலம் வரை அழகான நாடாக நாம் திகழ்ந்தோம்.”

ஆனந்த குமாரசாமியின் எழுத்துக்கள் மனதில் இனம்புரியாமல் ஒளிந்திருக்கும் இருட்டு மூலைகளைப் பளீரெனத் தாக்கின.

“இப்போது உணவு பரிமாறப்படும்”, என்கின்ற விமான பணிப்பெண்ணின் அறிவிப்பு என்னை ஏதோ தண்ணீருக்குள் மூழ்கிக்கொண்டிருந்தவன் விழித்தெழுந்து அது வெறும் கனவு என்று உணர்ந்ததைப் போல எழச்செய்தது. என்னை சுற்றிப் பார்த்தேன், விலையுயர்ந்த்த நெகிழிச் சட்டைகளைப் பெருமையாக அணிந்துகொண்டுள்ள ஆண்கள், மேற்கத்திய மோகத்தில் அசௌகரியமான ஆடைகளில் பெண்கள், சிறுகணினி மற்றும் நெகிழி சாதனங்களில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் என்று குமாரசுவாமியைப் பாதித்த போக்கு என்னைச் சுற்றியிருந்ததை உணர்ந்தேன். நமது அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் பொருட்களில் தொலைத்த கலை நயத்தை நாம், மற்ற தேசங்களில் அருங்காட்சியகங்களில்தான் காண முடியும் என்று நினைக்கும்பொழுது நாம் ஏன் இப்படியானோம்? நமக்கு நமது பாரம்பரியத்தை குறித்த பெருமை ஏன் தொலைந்து போயிற்று? வெறும் பகட்டான, மேம்போக்கான ஒரு பிம்பத்தை நாம் கலை என்று எவ்வாறு ஏற்றுக்கொண்டோம்? என்ற பல கேள்விகள் தோன்றின.

ஒரு தட்டில், சிறு நெகிழி டப்பாக்கள் - ஒன்றில் பெயர் தெரியாத இனிப்பு, ஒன்றில் சிறு வெள்ளரித்துண்டுள், ஒரு பன், அதற்கு மற்றொரு நெகிழி டப்பாவில் ஒரு தேக்கரண்டி அளவு வெண்ணையும், ஒரு அலுமினியம் காகிதத்தில் விறைத்த பச்சைநிற சாதமும் அதில் ஒளிந்து கொண்டிருந்த இரண்டிரண்டு பட்டாணியும், பன்னீர் துண்டுகளுமாக எங்கள் இரவு உணவு அவதரித்தது. பக்கத்து இருக்கையிலிருந்த அர்ச்சகரை பார்த்தேன். “நாங்க போகும்போது சாப்பாடெல்லாம் குடுக்கல்ல, இது என்ன கொஞ்சம் விலையுர்ந்த விமானமா?” என்று கேட்டவாறு தனது வலது கையால் அந்த தட்டில் உள்ள பல நெகிழி கவர்களை பிரிக்க முயற்சித்தார். மற்ற கை உணவில் படுவதற்கு அவருடைய வாழ்க்கை நெறி அவரை அனுமதிக்கவில்லை என்பதை உணர்ந்தேன். அதே சமையம் அவருடைய கஷ்டம் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தது. அவர் மனைவி, “ஒரு கையினாலேயே திற” என்று இவர் கூறிக்கொண்டு அவதிப்படுவதை பொருட்படுத்தாமல், இரண்டு கைகளையும் கொண்டு தன் உணவுப் பொட்டலத்தை திறந்து உண்ணத் துவங்கினார். இறுதியாக, “எப்படியிருந்தாலும் சிறுகரண்டியிலும், முள்கரண்டியிலும் தானே சாப்பிட போறோம், பரவாயில்லை”, என்று அவரும் தன் இரு கரங்களையும் உபயோகப்படுத்தியபோது, “இப்படித்தான் நவீனத்துவம், நமது சின்ன சின்ன பழக்கங்களை மாற்றியிருக்குமோ?” என்ற என்னுடயை சிந்தனை தொடர்ந்தது.

உணவு பரிமாறப்பட்ட போது அவருக்கு ஏற்பட்ட சங்கடத்திற்கு 100 மடங்கு அதிகமாக அவருக்கு உணவு உண்ட பின்னர் ஏற்பட்டது. கைகழுவுவதற்கு விமானத்தில் எந்த ஏற்பாடும் இல்லை. கை அலம்பாமல் இருந்து அவருக்குப் பழக்கம் இல்லை என்பது அவர் முகத்திலும், இரண்டு கைகளையும் அந்தரத்தில் ஏந்தி அவர் உட்கார்ந்த விதத்திலும் தெளிவாகத் தெரிந்தது. அவர் மடியில் வேறு ஒரு பை. அவர் அதில் கைலாயத்திலிருந்து ஏதோ புனிதப் பொருள்களை எடுத்து வந்திருந்தார் போலும். அவர் அதனை வேறு எங்கும் வைக்காமல் மிகவும் மரியாதையுடனும், பத்திரமாகவும் தன் மடியிலேயே வைத்திருந்ததை நான் முதலிலேயே கவனித்திருந்தேன்.

“நீங்கள் கையை அலம்புவதற்கு இங்கும் வசதி உள்ளது” என்று கூறி, அந்த பக்கம் வந்த பணிப்பெண்ணை உதவுமாறு கூறி அவரை விமானத்தில் உள்ள கழிவறைக்கு செல்லவைத்தேன். அந்த அர்ச்சகர், தன் உடையிலேயும், பையிலேயும் கை வைக்காது எழுந்து அந்த பணிப்பெண்ணை தொடர்ந்து செல்வதற்குள் பட்ட பாடு கொஞ்சமல்ல. பாவம் மனிதர், திரும்பி வந்தபோது மிகவும் சந்தோஷப்பட்டார். “இந்த விமானம் உண்ட பிறகு கை அலம்பும் பழக்கம் கொண்ட மக்களால் கட்டப்படவில்லை. அப்படி இருந்தால் உணவு பரிமாறுதலே வேறு விதமாக அமைந்திருக்கும்”, எனது சிந்தனையை அவரிடம் பகிர்ந்து கொண்டேன். “பரவாயில்லை, கூடவே வந்து நல்லா சொல்லி கொடுத்தா!” என்று அவர் வெகுளித்தனமாக கூறியபோது, இப்படித்தான் முன்னர் வெள்ளைக்காரனும், இப்பொது வெளியூர்க்காரனும் அளிக்கும் சிறு சலுகைகளில் மயங்கி நமது பழக்கங்களின் அழகை, கலையை, இழந்தோமோ? என்று தோன்றியது.

நெகிழிப் பொட்டலத்திலிருந்து உண்பதற்கோ, கரண்டியில் இரு கரங்களையும் கொண்டு உண்பதற்கோ, அந்த உணவு யாரால், எங்கு, எப்போது, எப்படி தயார் செய்ப்பட்டது என்பதை சிந்திக்க அந்த அர்ச்சகர் தயங்கவில்லை. ஆனால் உண்ட பின்னர் பிற பொருட்களை தொடுவதால் தன் சுத்தத்திற்கு பங்கம் ஏற்பட்டுவிடும் என்ற வகையில் அவர் நடந்து கொண்டது, நாம் எந்த அளவிற்கு சுத்தத்தை இன்று கடைபிடிக்கின்றோம் என்று சிந்திக்கத் தோன்றியது. கொஞ்சமாவது உணவிற்கும், சுத்தத்திற்கும் தொடர்பைத் தக்க வைத்துக்கொண்டுள்ள அர்ச்சகருக்கே இந்த நிலைதான் என்றால், அதுவும் இல்லாத என்னைப்போன்ற பெரும்பாலானவர்களின் நிலை? இது குறித்து மேலும் சிந்திக்கும்போது, எவ்வாறு நாம், அன்றாட வாழ்க்கையில் கலைகளைச் சுலபமாக இழந்துவிட்டோம் என்று தோன்றியது.

உணவு உட்கொள்ளுவதை நம் முன்னோர் ஒரு கலையாகத்தானே ஏற்படுத்தியிருந்தனர்!

உணவை சமைப்பது முதல், அதனை அருமையாகப் பரிமாறி, உட்கொண்டபின், கை அலம்பி, வாய்சுத்தம் செய்து, உண்ட இடத்தையும் தண்ணீரால் சுத்தம் செய்வது நம் குடும்பங்களில் இன்றும் முக்கியமாகக் கருதப்படுகின்றது. உணவில் சுத்தம் என்பது அது எங்கிருந்து வருகிறது என்பது முதல், அதனை யார் சமைத்து எவ்வாறு படைக்கிறார்கள் என்பது வரை ஒவ்வொரு நிலையிலும் நமது முன்னோர்கள் சிந்தித்து பழக்கவழக்கங்களை ஏற்படுத்தியுள்ளனர். நாம் எவ்வாறு உணவை ஒரு கலாச்சாரம், ஒரு கலை என்ற நிலையிலிருந்து, வெறும், வயிற்றிற்கும், உடலுக்கும் தேவையான ஊட்டம் மாத்திரமே என்று ஒப்புக்கொண்டோம்? யார், எங்கு, எப்படி உற்பத்தி செய்கின்றார்கள் என்பதறியாமல் உணவை எப்படி நம்மால் உட்கொள்ள முடிகிறது? அதன் தரத்தை பற்றி எவ்வாறு ஊகிக்கிறோம்? வண்ண டப்பாக்களின் ஓரத்தில் ஒட்டப்பட்ட காகிதத்தின் பிரச்சார வார்த்தைகளை எவ்வாறு நாம் தரநிர்ணய சான்றாக ஏற்றுக்கொள்ளுகிறோம்? பூமியின் கருவிலிருந்து பிழிந்து எடுக்கும் கச்சா எண்ணெயின் கழிவுப்பொருளான நெகிழியில் சுற்றி, பொட்டலமாக்கி, பல தொழிற்சாலைகளைக் கடந்து, குளிரூட்டும் பெட்டிகள் மாறி, நம்மை வந்தடையும் பொருட்களை உணவு என்று ஏற்கும் அரக்கர்களாக நாம் எப்படி உருமாறினோம்?

மூன்று தோஷங்களையும் அனுசரித்து, நாவிற்கு அறுசுவையையும் அனுபவிக்க அளித்து, ஒவ்வொறு காலத்திற்கேற்ப கிடைக்கக்கூடிய பொருட்களைகொண்டு, ஒரு கலையாகவே உணவைப் படைத்த கலாச்சாரத்தில் வந்தவர்களா, இப்போது நெகிழி டப்பாக்களில் நிரப்பப்பட்ட பொருட்களை - சுவைக்குகூட ரசாயனத்தைக் கொண்டுள்ள பொருட்களை- உணவெனக் கொண்டுள்ளோம்? நமது நகரங்களில் பெருகிவரும் உணவகங்களிலும், வீடுகளிலும் தொலைக்காட்சிகளில் விளம்பரப் படுத்தப்படும் வர்த்தகத்தை நுகர்ந்தவண்ணம், எதை நுகர்கிறோம் என்கின்ற உணர்வே இல்லாமல், உடலில் உணவை சேர்க்கும் ஒரு உணர்வில்லா செயலை எவ்வாறு உணவு உட்கொள்ளுதல் எனக் கொள்வது?

தொழில்நுட்பத்தின் வளர்ச்சியைக் காரணமறியாது பேணும் நிலையில், உணவுட்கொள்ளும் நொடிகளுக்கிடையே, கைபேசியில் வார்த்தைகளை கக்கும் நிமிடங்களைக் களிக்கும் நம்மக்கள் நிஜமாகவே எக்காலத்திலும் அழியாத அறம்கண்ட வழிவந்தவர்களா? என்று பல கேள்விகள்.

விமானப்பயணம் முடித்த மூன்றாவது நாள், வேலூரில் உள்ள பேருந்து நிலையத்தின் உணவகத்தில் காலை உணவிற்க்குச் செல்ல நேர்ந்தது. அருகில் விவசாயி போன்ற தோற்றமுள்ள ஒருவர் வந்தமர்ந்தார். “இரண்டு இட்லி, வாழையிலையில்” என்று சர்வரிம் கூறினார். கூர்ந்து பார்த்ததில் கையில் காப்பு தெரிந்தது. ஊர் திருவிழாக்காலங்களில் இத்தகைய கோரிக்கைகள் உணவகங்களில் சகஜம்தான். ஆனால், சர்வர், ஒரு நெகிழித் தட்டில் அலுமினிய காகித்தைச் சுற்றி அதில் இரண்டு இட்டலிகளை பரிமாறியபொழுது ஆச்சரியப்பட்டேன். எங்கோ சுரங்கத்திலிருந்து சுரண்டியெடுக்கப்பட்ட, தொழிற்சாலைக்கு பயணித்து, பதப்படுத்தி, காகிதமாக்கி, பெட்டியில் அடைத்து, மீண்டும் பயணித்து, உணவகங்களில் அலுமினிய காகிதமாக வெளிவரும்ம் செலவு, உள்ளூரில் விளையும் வாழை இலையைவிட குறைவாகிவிட்டதா? என்று என் மனது கணக்கு போடும் நேரத்தில், எப்படி அந்த விவசாயியால், அலுமினிய காகிதத்தில், தன் உள்ளூர் கடவுளுக்குத் தேவையான சுத்தம் உள்ளது என்று நிர்ணயிக்க முடிகின்றது? என்ற கேள்வி மேலோங்கியது.

இயற்கையில் உள்ள நன்மைகளை உணர்ந்து அதனைக் கலைவடிவுடன் சுத்ததையும் கலாசார சரடைக்கொண்டு இணைத்த நமது நாட்டில், நவீன தொழில்நுட்பமும், உலகமயமாக்கப்பட்ட சந்தைப் பொருளாதாரமும், எந்த அளவிற்கு மாற்றியுள்ளன? இன்னமும் சிந்திப்போம்…

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org