தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றையவை


கால்நடைக் காப்பு - ஜெய்சங்கர்

இன்னும் தொற்று வியாதிகள் முடியவில்லை! இந்த மாதமும் மேலும் சில நோய்களைப் பற்றி பார்ப்போம்.

1. கோமாரி: இந்நோய் கண்ட மாடுகளுக்கு காராமணி அளவில் கொப்புளங்கள் வாய், கால்களில் தோன்றும். எனவே இதனை கால் கோமாரி என்றும் அழைப்பர். ஆங்கிலத்தில் இதனை காரணப்பெயராக 'ஃபுட் அன்ட் மவுத் டிஸீஸ்’ (Foot and Mouth Disease - FMD) என்று அழைக்கின்றனர். முற்றிய நிலையில் மூக்கு, நாக்கு, மடி, முகம் என்று எல்லா இடங்களிலும் கொப்புளங்கள் தோன்றும். தோன்றிய ஒரு நாளுக்குள் கொப்புளம் உடைந்து புண்ணாகி, அதிலிருந்து நீர் வடியும். மாடுகள் நடக்கவும், சாப்பிடவும் மிகவும் சிரமப்படும். 106 டிகிரி வரை காய்ச்சலும் ஏற்படும். வாயிலிருந்து எச்சில் கம்பி போல ஒழுக ஆரம்பிக்கும். மாடு மந்தமாக இருக்கும். சரியாக கவனிக்காமல் போனால் இரண்டு மூன்று தினங்களில் மாடுகள் இறந்து விடும் அல்லது புண்களில் புழுக்கள் தோன்றி விடும். புழுக்கள் தோன்றி விட்டால் புண்களை ஆற்றுவது மிகவும் கடினம் மட்டுமல்ல, வெகு நாட்களும் ஆகும்.

இந்த நோய் பல வழிகளில் பரவுகிறது. இந்தக் கிருமி உள்ள தண்ணீர், எரு, சாணி, வைக்கோல், புல் என்று எந்தப் பொருள் மூலமாகவும் பரவும். குணமடைந்த மாடுகளின் மூலமாகவும் மற்ற மாடுகள் நோய்க் கிருமியை பெற வாய்ப்புள்ளது. எனவே, நோய் கண்ட மாடுகளை குணமடைந்த பின்னும் பல நாட்களுக்கு தனியாக கட்ட வேண்டும். மேலும், மாட்டை கவனிப்பவர் மூலமாகவும் பரவ வாய்ப்புள்ளது. கோமாரி நோய் கண்ட ஒரு மாட்டை பராமரித்தவர் அடுத்த மாட்டை பராமரிக்கும் போது அவர் மூலமாகவே பரவலாம். எனவே, நோய் கண்ட மாட்டை தனியாக வைத்து பராமரிப்பது மட்டுமல்லாமல் அதனை பராமரிப்பவர் நோய் இல்லாத மாட்டை அணுகுவதற்கு முன்னால் நன்றாக கிருமி நாசினி கொண்டு கை, கால்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இவை அல்லாமல், எலிகள், முள்ளம்பன்றி மற்றும் பறவைகள் மூலமாக கூட இந்த கிருமி பரவ வாய்ப்புள்ளது. ஏதாவது ஒரு மாட்டிற்கு கூட நோய் வந்தால், அதை தனியாக கட்டி விட்டு, முழு கொட்டகையையும் கிருமி நாசினி கொண்டு கழுவுவது மற்ற மாடுகளுக்கு உடனே பரவாமல் தடுக்கும். நோய் கண்ட மாட்டிற்கு பயன்படுத்திய தீவனத்தின் எச்சம் இருந்தால் அதை மற்ற மாடுகளுக்கு அளிக்காமல் அப்புறப்படுத்தவும். ஆனால், இது பெரும்பாலும் கலப்பு இன மாடுகளையே அதிகம் தாக்குகிறது. நாட்டு மாடுகளை அவ்வளவாக பீடிப்பதில்லை.

இந்த நோய் கண்ட மாடுகளுக்கு பால் கறவையும், நோய் சரியான பிறகும் குறைந்தே காணப்படும். நோய் வந்து குணமான மாடுகளின் குளம்பு சொரசொரப்பாகவும், வளைந்தும் போய் விடும்.

வாயில் புண் மற்றும் கொப்புளம் உள்ளதால் மேய்வது என்பது முடியாது. எனவே, மாடுகளுக்கு அரிசிக் கஞ்சி வைத்து கொடுக்கவும். ஒரு நாளைக்கு ஐந்து முறையாவது வாய் மற்றும் புண் வந்துள்ள இடங்களை படிகாரம் கரைத்த நீரினால் கழுவவும். பின்னர் படிகாரமும் போரிக் பவுடரும் சமமாக கலந்து வெண்ணெயில் பிசைந்து புண்களில் பூசவும். கால் குளம்பில் ஏற்பட்ட புண்களை ஆற்ற பத்து பல் பூண்டு, பத்து கிராம் மஞ்சள் இவற்றுடன் குப்பை மேனி, வேம்பு, துளசி, மருதாணி இலைகள் ஒவ்வொன்றிலும் பத்து பத்து இலைகளை எடுத்துக் கொண்டு நன்றாக அரைத்து அதனை ஒரு லிட்டர் நல்லெண்ணெயில் கலந்து பத்து நிமிடம் சூடேற்றி ஆற வைக்கவும். பின்னர் இந்த கரைசலை தொடர்ந்து கால்களில் பூசி வரவும்.

பொதுவாக இந்த நோய்க் கிருமிகள் வெகு வேகமாகவும், தொலை தூரத்திற்கும் பரவக் கூடியது. எனவே, உங்கள் ஊரில் நோய் தாக்கி இருந்தால் நீங்கள் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். உங்கள் மாடுகளுக்கு பரவாமல் இருக்க என்ன செய்யலாம்? சீரகம், மிளகு, வெந்தயம் எல்லாவற்றையும் இருபது கிராம் எடுத்து தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அதனை நன்றாக அரைத்துக் கொள்ளவும். அதனுடன் நான்கு பல் பூண்டு, நூறு கிராம் வெல்லம் மற்றும் துருவிய தேங்காய் இவற்றையும் சேர்த்து நன்றாக மையாக அரைக்கவும். இதனுடன் தேன் கலந்து ஐந்து பாகங்களாக பிரித்து ஒரு நாளைக்கு ஐந்து முறை மாடுகளுக்கு கொடுக்கவும். இதனை நோய் கண்ட மாடுகளுக்கும் கொடுக்கலாம். இதையே வெண்ணெயுடன் கலந்து உடலில் கொப்புளம் வந்த இடங்களிலும் பூசலாம்.

2. அம்மை: இந்த நோய் மனிதர்களுக்கு வரக் கூடிய அம்மை போன்றதே. மேலும், இது மனிதர்களுக்கும் தொற்றலாம். எனவே, எச்சரிக்கையுடன் கையாள வேண்டும். நோய் கண்ட மாட்டிற்கு இலேசாக காய்ச்சல் இருக்கும். பால் கறவை இருந்தால் குறையும். இரண்டு நாட்களில் பால் மடியிலும் உடலின் மற்ற பாகங்களிலும் சிவப்பு வீக்கங்கள் தோன்றி, மேலும் இரண்டு மூன்று தினங்களில் பருத்து கொப்புளங்களாகும். ஒரு வாரம் கழித்து இந்த கொப்புளங்கள் பழுத்து உடைந்து புண்களாகும். ஓரிரண்டு கொப்புளங்கள் முதல் இருபது கொப்புளங்கள் வரை ஏற்படலாம். இவை ஒரே நாளில் ஏற்படாது. இரண்டு வாரங்கள் வரை மெதுவாக தோன்றலாம்.

அம்மை ஏற்பட்ட மாட்டை தனியே பிரித்து கட்டுவது மிகவும் அவசியம். அம்மை வந்த மாட்டை பராமரிப்பவர் கை கால்களை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து கொள்வதும் மிக அவசியம். கொப்புளங்கள் தோன்றிய இடத்தை வெந்நீரால் சுத்தம் செய்து பசு நெய் பூசி வரலாம். பால் கறவை உள்ள மாடாக இருந்தால் அந்த பாலை கன்றோ அல்லது மனிதர்களோ சாப்பிடுவது கூடாது. பாலை மடியில் தேங்க விடுவதும் கூடாது. பின்னங்கால்கள் இரண்டையும் கட்டி கொதிக்கும் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதன் ஆவி மடியின் மீது படுவது போன்று காட்டவும். அவ்வாறு செய்யும் போது மடி இளகி மிருதுவாகி விடும். பின்னர் மடியில் நெய் பூசி மெதுவாக கொப்புளங்கள் மீது படாமல் கறக்கவும். இவ்வளவு சிரமப்பட்டு கறந்த பாலை மறக்காமல் கொட்டி விடவும்.

நோய் குணமாக இலவம் பஞ்சு விதைகளை பொடியாக்கி வாழை இலையில் வைத்து காலை, மதியம், மாலை மூன்று வேளையும் மூன்று நாட்களுக்கு கொடுக்கவும். காலை 25 விதைகள் மதியம் 15 மாலை 10 விதைகள் கொடுக்கவும்.

மாடுகளுக்கு ஆகாரமாக கஞ்சி தண்ணீர் வைத்து வெதுவெதுப்பான சூட்டில் அளிக்கவும். சாதாரண உணவுகளை தவிர்க்கவும்.

3. க்ஷய ரோகம்: இதற்கு ஆங்கிலத்தில் 'ட்யூபர்குலோஸிஸ்’ (Tuberculosis - TB) என்று பெயர். இந்த நோய் உள்ள மாட்டின் பாலை அருந்தினால் மனிதனுக்கும் இந்த வியாதி தொற்ற வாய்ப்புள்ளது. இது வெளி நாடுகளில் பரவியுள்ள அளவிற்கு நம் நாட்டில் பரவவில்லை என்பது ஆறுதலே. இதன் காரணம் நம் நாட்டில் உள்ள சூரிய ஒளியே. சூரியனின் கிரணங்களுக்கு க்ஷய ரோக கிருமி இறந்து விடும். பரவாது. எனவே, வெட்ட வெளியில் மேய்ந்து திரியும் மாடுகளுக்கு இந்த வியாதி வருவதில்லை. கொட்டகையிலேயே அடைத்து வைத்திருக்கும் மாடுகளுக்கே அதிகம் வருகிறது. நோய் கண்ட மாடுகளை சுத்தமான, வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள இடத்தில் தனியாக கட்டி வைப்பதே சிறந்த மருந்தாகும்.

இந்நோய் கண்ட மாடுகள் இருமிக் கொண்டே இருக்கும். அடிக்கடி காய்ச்சல் ஏற்படும். மூச்சு விட சிரமப்படும். இதை குணமாக்க அதிமதுரம், கற்பூரம், இரும்பு சல்பேட் ஆகிய மூன்றையும் சம அளவாக எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு அரைத்து பந்து போல் உருட்டி வைத்துக் கொண்டு தினமும் இரண்டு வேளை (காலை, மாலை) கொடுத்து வரலாம்.

4. நிமோனியா: மனிதனுக்கு ஏற்படுவது போலவே, மாட்டின் உடல் வெப்பம் திடீரென்று குறைந்தால் நிமோனியா ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறிகளாவன பின்வறுமாறு. உடல் ஆரம்பத்தில் வெதுவெதுப்பாக இருக்கும். நாடித்துடிப்பு அதிகரித்து காணப்படும். வறட்டு இருமல் ஏற்படும். நாளாக நாளாக இருமல் அதிகரிக்கும். பசி மற்றும் பால் கறவை குறையும். உரோமங்கள் குத்திட்டு நிற்கும். மூக்கு விரிவடைந்து காணப்படும். கண் மற்றும் மூக்கிலிருந்து நிறைய அழுக்கு வெளியேறும். தோல் உலர்ந்து விடும். நெஞ்சை விரலால் அழுத்தினாலே மாட்டிற்கு வலிக்கும். மூச்சு விட சிரமப்படும். வயிற்றுப் போக்கும் தொடர்ந்து ஏற்படும். தாக்கம் அதிகம் இருந்தால் இரண்டு வாரங்களுக்குள் மாடு இறந்து விடும். இலேசான தாக்குதலுக்கு இரண்டு முதல் ஆறு மாதங்கள் வரை மாடுகள் அவதிப்பட வாய்ப்புள்ளது.

நோய் கண்ட மாடுகளை சுத்தமான, வெளிச்சம் மற்றும் காற்றோட்டம் உள்ள இடத்தில் தனியாக கட்டி வைப்பதே சிறந்த மருந்தாகும். உணவாக பச்சைப்புல்லும் அரிசிக் கஞ்சியும் மட்டும் கொடுக்கவும். காய்ச்சலுக்கு சோம்பு, ஏலக்காய், ஓமம் மூன்றும் 12 கிராம், நில வேம்பு 30 கிராம் தூள் செய்து தண்ணீரில் கலக்கி கொடுக்கலாம்.

5. தொற்றும் கருச்சிதைவு: கருச் சிதைவு கூட தொற்று வியாதியா? ஆம், ஒரு வகை கருச்சிதைவு ஒரு பாக்டீரியாவினால் வருகிறது. அது தொற்றக் கூடியது. இந்த பாக்டீரியாவிற்கு ‘ப்ரூஸெல்லா அபார்டஸ்” (Brucella Abortus) என்று பெயர். இது ஐந்தாவது மாதம் முதல் எட்டவது மாத சினைப் பருவம் வரை தாக்கலாம். இந்த பாக்டீரியாவினால் தாக்கப்பட்ட மாடு மீண்டும் சினை பிடிப்பதும் கடினமாகும். சில மாடுகள் மலடாவதும் உண்டு.

இந்த நோய் தாக்கிய மாட்டின் அரையிலிருந்து வரும் ஒரு திரவ போக்கின் மூலம் மற்ற மாடுகளுக்கு தொற்றும். பொலி காளைகளின் மூலமாகவும் இந்த பாக்டீரியா பரவலாம். நோய் கண்ட மாட்டின் பால் மூலமாகவும் இந்த பாக்டீரியா பரவும். மனிதர்கள் அந்த பாலை உட்கொண்டால் ஒரு வித காய்ச்சல் உண்டாகும்.

இன்னொரு விதமான தொற்றும் கருச்சிதைவு 'விப்ரியோ ஃபீட்டஸ்’ (Vibrio Foetus) என்றழைக்கப்படும் பாக்டீரியாவினால் வருகிறது. இது மேற்சொன்ன வியாதியை விட வீரியம் குறைவனதாக இருந்தாலும், இதுவும் கருச் சிதைவை உண்டாக்கக் கூடியது. இது காளையின் விந்து மூலமாக மட்டுமே பரவுகிறது. ஒரு முறை இந்த கருச்சிதைவு ஏற்பட்டால் அதே மாட்டிற்கு மீண்டும் இது ஏற்படுவதில்லை. நீண்ட பருவச் சுற்று அதாவது 25 நாட்களுக்கு மேல் ஒரு பருவச் சுற்றுக்கு ஆவது இந்த நோயின் முக்கிய அறிகுறி. கருப்பை வீக்கம் மற்றும் அரை வீக்கமும் ஒரு சில மாடுகளில் தென்படலாம்.

இந்த இரண்டு நோய்க்குமே சிகிச்சை கிடையாது. வராமல் தடுப்பதே சிறந்தது. சுத்தமான வளர்ப்பு முறையே சிறந்த தடுப்பு முறையாகும்.

ம்ம்ம்… இது வரை சில மாதங்களாக பொதுவான ஆரோக்கியப் பராமரிப்பு பற்றி தெரிந்து கொண்டோம். அது எல்லாவற்றையும் நாம் நினைவில் வைத்துக் கொள்வது என்பது கடினம். எழுதி வைத்துக் கொள்ளலாம். அல்லது புத்தகங்களை பார்த்து சிகிச்சை அளிக்கலாம். ஆனால், மாடுகளை தொடர்ந்து கவனிப்பது, அவை தீவனம் சரியாக உட்கொள்ளுகிறதா, சாதாரணமாக இருக்கிறதா என்றும் பார்ப்பது தினமும் செய்ய வேண்டிய ஒன்று. அதேபோல், ஏதாவது அறிகுறிகள் தென்பட்டால், பதட்டப்படாமல் சிகிச்சை அளிப்பதும், அதனை மாடு எவ்வாறு ஏற்கிறது என்று கவனிப்பதும் நோயை தீவிரப்படுத்தாமல், குணப்படுத்த உதவும். மேலும், எல்லா விதமான, சாதாரண உடல் உபாதைகளுக்கு கூட கால் நடை மருத்துவரை அணுகுவதை தவிர்த்தால் நல்லது.

அடுத்த மாதம் எதைப் பற்றி? மதிப்புக் கூட்டல் பற்றி பார்க்கலாமா!

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org