தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உண்ணும் சோறு, பருகும் நீரெல்லாம் நஞ்சு!


பரிதி

[கட்டுரையில் பயன்படுத்தப்பட்டுள்ள அதிகம் புழக்கத்தில் இல்லாத தமிழ்ச் சொற்கள் குறித்த விளக்கமும் பிறமொழிப் பெயர்ச் சொற்களின் ஆங்கில வடிவமும் இறுதியில் தரப்பட்டுள்ளன.]

(பூச்சிக்கொல்லி நஞ்சுகளால் உலகின் சூழல், மேல்மண், நிலத்தடி நீர், மேற்பரப்பு நீர், உயிர்ப்பன்மையம் என்று பற்பல தீவிளைவுகள் ஏற்பட்டு வருவது தெரிந்ததே. எனினும், வேளாண் வாணிப நிறுவனங்கள், இவை பரிந்துரைக்கப் பட்ட அளவில் பயன்படுத்தினால் ஏதும் தீமை விளைவிப்பதில்லை என்றும், புற்றுநோய் போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்ற (தம் வாணிபத்திற்கு வசதியான) நிலப்பாட்டைக் கடைப்பிடித்து வருகின்றன. இந்நிலைப்பாட்டை நிரூபிக்கும் வண்ணம் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்குத் தாராளமான நிதி உதவிகளை வழங்கி வருகின்றன. விஞ்ஞானம் வாணிபத்திற்கு விலைபோகும் தற்காலச் சூழலில், சமீபத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கை உண்மை நிலையை வெளிப்படுத்துகிறது. “உண்ணும் சோறு, பருகும் நீர், தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன் எம்பெருமான் ” என்று வைணவக் கவி நம்மாழ்வார் இறைவனைக் கண்டு உருகுவதாகப் பாடல் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ளது. இப்போது எல்லாமே நஞ்சாகும் உண்மையை உறுதிப்படுத்தும் ஆய்வைப் பற்றிய‌ கட்டுரை இது - ஆசிரியர்)

உலகெங்கும் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படும் பூச்சிக் கொல்லிகள் நம் பூவுலகின் சூழலில் நீக்கமற நிறைந்து அதை மிக மோசமாக பாதித்துவிட்டன. இதன் விளைவாக உலக அளவில் உணவு உற்பத்திச் செயல்பாடு பேரிடர் மிக்கதாகிவிட்டது. உலகளாவிய விரிவான அறிவியல் ஆய்வு ஒன்று இவ்வாறு எடுத்துரைக்கிறது.

1940-களில் தொடங்கி உலகெங்கும் டீடீட்டீ எனும் நச்சினை வகைதொகையின்றிப் பரவலாகப் பயன்படுத்தியதன் விளைவாகப் பறவைகளும் (நன்மை செய்யும்) பூச்சிகளும் பெருமளவில் அழித்தொழிக்கப்பட்டுவிட்டன. அதன் விளைவாகப் பறவைகளின் இசையும் பூச்சிகளின் ரீங்காரமும் பெருமளவு ஓய்ந்து இளவேனில் காலங்கள் அமைதியாகிவிட்டன. இதைக் குறிக்கும் வண்ணம் ரேச்செல் கார்சன் எனும் சூழல் அறிவியலாளர் தான் எழுதிய நூலுக்கு “அமைதியான இளவேனில்” என்று பெயரிட்டார். அது 1956-ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியாகிற்று. அண்மைக்கால சூழலியல் வரலாற்றில் முதன்மை வாய்ந்த நிகழ்வாக அந்த நூல் கருதப்படுகிறது. நவீன சூழலியல் இயக்கங்களின் தோற்றுவாயாக அந்நூல் திகழ்கிறது.

இப்போது நம் உணவாதாரத்திற்கு நேர்ந்துள்ள பாதிப்பும் டீடீட்டீயால் பறவை, பூச்சியினங்களுக்கு நேர்ந்த பாதிப்புடன் ஒப்பிடத்தக்கதென ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நஞ்சுகளைக் குறித்து இது வரை செய்யப்பட்ட ஆய்வுகளில் இந்த ஆய்வுதான் மிக விரிவானது. பல நாடுகளைச் சேர்ந்த 29 ஆராய்ச்சியாளர்கள் நான்கு ஆண்டுகள் நடத்திய இந்த ஆய்வு பின்வருமாறு தெரிவிக்கிறது: ஆண்டுதோறும் பல்லாயிரங் கோடிக்கணக்கான நஞ்சுகள் உலகில் விற்பனையாகின்றன; அவை மிகக் கடுமையானவை; உலகெங்கும் உள்ள வாழிடங்கள் அனைத்தையும் அவை நஞ்சாக்கிவிட்டன; இதை நிறுத்துவதற்கென இயற்றப்பட்ட சட்டங்களும் பயனிழந்துவிட்டன. இதன் விளைவாக உலக உணவு உற்பத்திக்கு இன்றியமையாதனவாகத் திகழ்கிற தேனீ, மண்புழு உள்ளிட்ட பல உயிரினங்கள் மிக மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம். ஆகவே இந்த நஞ்சுகளின் பயன்பாட்டைப் படிப்படியாக நிறுத்திவிடவேண்டும்.

புதுநிக்கோட்டினைட்கள் (neonicotinoids) எனும் ஒருவகை நஞ்சுகளை வாங்குவதற்கு உழவர்கள் ஆண்டுக்கு 260 கோடி டாலர் (சுமார் 15600 கோடி ரூபாய்) செலவிடுகின்றனர். மேற்கண்ட ஆய்வு இந்த நஞ்சுகளின் தாக்கத்தை ஆராய்ந்தது. தீங்குயிரிகளின் தாக்குதலை எதிர்கொள்வதற்காக மட்டுமன்றித் தொடர்ந்தும் இந்த நஞ்சுகளை உழவர்கள் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இவற்றைப் பயன்படுத்துவதால் விளைச்சல் அதிகரிப்பதற்கு எவ்விதமான சான்றும் இல்லை என்பதை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மாறாக, “[இவற்றின் தீமைகளுக்குத்] தெள்ளத்தெளிவான சான்றுகள் உள்ளன. ஆர்கானோபாச்பேட்கள், டீடீட்டீ ஆகிய நஞ்சுகளுக்கு ஒப்ப இவையும் நம் இயற்கைச் சூழல் மற்றும் உழவுச் சூழல் ஆகியவற்றின் விளைதிறனை அச்சுறுத்துவதை நாம் காணமுடிகிறது” என்கிறார் ப்ரான்ச் நாட்டின் தேசிய அறிவியல் ஆராய்ச்சி நடுவத்தைச் சேர்ந்த ழான்-மார்க் பான்மாட்டின். இந்த ஆய்வில் ஈடுபட்ட 29 ஆராய்ச்சியாளர்களில் இவரும் ஒருவர். “புதுநிக்கோட்டினைட்கள் அடங்கிய பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு உணவு உற்பத்தியைக் காப்பாற்றுவதற்கு நேர் மாறாக அந்த உற்பத்தியின் அடித்தளத்தையே அச்சுறுத்துகிறது.” உணவுப் பயிர்களிலும் பிற செடி கொடி மரங்களிலும் மகரந்தச் சேர்க்கை நிகழ்வதற்கு தேனீக்கள் உள்ளிட்ட பூச்சிகளும் பறவைகளும் இன்றியமையாதவை. உலகில் விளைவிக்கப்படும் பயிர்களில் முக்கால் பங்குப் பயிர்களில் இவைதாம் மகரந்தச் சேர்க்கைக்குக் காரணிகளாக உள்ளன. இவற்றையும், உணவுப் பயிர்கள் செழித்து வளர்வதற்கு இன்றியமையாததான வளமான மண்ணை உருவாக்கும் உயிரினங்களையும் தாக்குவதன் மூலம் இந்த நச்சுகள் உலக உணவாதாரத்தை அழிக்கின்றன.

ஒன்றிய அரசியத்தில் உள்ள சசெக்ச் பல்கலையின் பேராசிரியர் டேவ் கௌல்சன் மேற்கண்ட ஆய்வுக் குழு உறுப்பினர்களில் ஒருவர். அவர் சொல்கிறார்: “[கடந்த காலப் பட்டாங்குகளில் இருந்து] நாம் எவ்வளவு குறைவாகக் கற்றிருக்கிறோம் என்பது வியப்பளிக்கிறது. வேளாண் நச்சுகளின் தீமை தரும் பக்கவிளைவுகளை அமைதியான இளவேனில் வெளிப்படுத்திற்று. அப்போது மக்களிடையே அந்த நஞ்சுகளுக்கு எதிர்ப்புணர்வு வலுத்தது. ஆனால், காலப்போக்கில் நாம் 1950-களில் இருந்த நிலைமைக்கே திரும்பிவிட்டாற்போலத் தெரிகிறது.”

இந்த ஆய்வறிக்கை 2014 சூன் 24 அன்று வெளியிடப்பட்டது.

தேனீக்களும் மலர்கள் மிகுந்த வாழிடங்களும் வேகமாக அழிந்து வருவதில் இந்த வேதிப்பொருள்களுக்கு முதன்மையான பங்கு இருப்பதை இந்த ஆய்வறிக்கை எடுத்துரைக்கிறது. தேனீக்கள் மலர்களை நோக்கியும் பின்னர் தம் கூடுகளுக்கும் பயணிப்பதற்கும் தம் சூழ்நிலையைக் குறித்துக் கற்றுக்கொள்வதற்கும் தேவையான திறனை இந்த நஞ்சுகள் அழித்துவிடுகின்றன. அவற்றின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு முறைமைகளை இந்த நஞ்சுகள் தாக்குகின்றன. தேனீக் கூட்டம் வளர்வதை அவை மட்டுப்படுத்துகின்றன.

மண்ணை வளப்படுத்துவதிலும் மண்ணிற்குள் காற்றோட்டம் நல்ல முறையில் நிகழச்செய்வதிலும் மண்புழுக்கள் இன்றியமையாத பங்கு வகிக்கின்றன. மண்ணைத் துளைப்பதற்கு மண்புழுக்களுக்குத் தேவையான திறனை மேற்கண்ட பூச்சிக் கொல்லிகள் மட்டுப்படுத்துகின்றன.

நீர்நிலைகளில் உள்ள கொசு உள்ளிட்ட தீங்குயிரிகளை உண்பதன் மூலம் நமக்கு மிகப் பெரும் நன்மை செய்யும் தட்டாம்பூச்சிகளும் இந்த நஞ்சுகளால் பாதிக்கப்படுகின்றன. சாக்கடைத் தண்ணீரில் கலந்துள்ள நஞ்சுகளே பயிர்களில் உள்ள பேன்களைக் கொல்லுமளவு அதிகமாக நீர்நிலைகளில் நஞ்சுகள் பரவியுள்ளன என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பூச்சிகளின் எண்ணிக்கை குறைவதால் அவற்றை உண்டு வாழும் பறவைகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவருவதற்கும் இந்த நஞ்சுகள் காரணிகளாக இருக்கக்கூடும் என்று இந்த ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. மேலும், இந்த நஞ்சுகளில் புரட்டி எடுக்கப்பட்ட விதைகளில் சிலவற்றை உண்டாலே பறவைகள் இறந்துவிடும் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வு மேலும் கூறுவதாவது: “மொத்தத்தில், தண்ணீரில் கரையக்கூடியனவும் நெடுங்காலத்துக்கு வீரியத்துடன் இருப்பனவுமான இந்த நஞ்சுகளைப் பரவலாகப் பயன்படுத்துவதால் உலகெங்கும் உயிரினப் பன்மயம் தொடர்ந்த தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது. மேலும், மகரந்தச் சேர்க்கை போன்ற நம் உணவாதாரத்துக்கு இன்றியமையாத சூழலியல் சேவைகள் மீதும் இந்த நஞ்சுகள் பெருமளவில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்திவருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.”

அறநெறிகளுடன் இயங்கும் ட்ரையோடோச் எனும் வைப்பகம் நடத்தும் அறக்கட்டளையின் நிதியுதவியோடு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் அறிக்கை 'சூழலியல் அறிவியல் மற்றும் மாசுபடுதல் குறித்த ஆராய்ச்சி' எனும் இதழில் பிற ஆய்வாளர்களால் திறனாய்வு செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

சில பயிர்களில் சில வகை புதுநிக்கோட்டினைட்களைப் பயன்படுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தற்காலிகமாக மூன்றாண்டுக்காலத் தடை விதித்துள்ளது. இதற்கு பிரித்தானிய அரசும் அந்நாட்டின் தேசிய உழவர்கள் ஒன்றியமும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. இந்த நஞ்சுகள் தேனீக்கள் மீது செலுத்தும் தாக்கத்தை உடனடியாக ஆய்வு செய்யுமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடந்த மாதம் ஆணையிட்டுள்ளார். ஆனால், பூச்சிக் கொல்லிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் அமைப்பான பயிர்ப் பாதுகாப்புச் சங்கம் இந்த அறிக்கையைத் தாக்கியுள்ளது. அச்சங்கத்தின் தலைமை அதிகாரி நிக் வான் வெச்டென்கோல்ச் சொல்கிறார்: “நஞ்சுகளின் மோசமான விளைவுகளை வெளிச்சமிடும் சில ஆய்வுகளை மட்டும் கவனத்தில் எடுத்துக்கொண்டு இந்த அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வுகளும் களத்தில் செய்யப்பட்டவையல்ல; ஆய்வகங்களில் செய்யப்பட்டவை. ஆகையால், விளைநிலங்களில் இத்தகைய பூச்சிக் கொல்லிகள் பயன்படுத்தப்படுகையில் அவற்றின் விளைவுகள் எத்தகையன என்பதை இந்த ஆய்வு உறுதியான முறையில் கணக்கிடவில்லை.”

- பரிதி (thiru.ramakrishnan@gmail.com)

நன்றி: Damian Carrington, “Pest Sprays Poisoning World Food Supply”, இந்து ஆங்கில நாளேடு, 2014 சூன் 24

அமைதியான இளவேனில் ('வசந்தம்' என்பதன் தமிழ் வடிவம்) silent spring
ஆர்கானோபாச்பேட்கள் organophosphates
ஐரோப்பிய ஒன்றியம் european union
ஒன்றிய அரசியம் united kingdom
சசெக்ச் sussex
சூழலியல் அறிவியல் மற்றும் மாசுபடுதல் குறித்த ஆராய்ச்சி environmental science and pollution research
டீடீட்டீ ddt (dichloro-diphenyl-trichloroethane)
டேவ் கௌல்சன் dave goulson
ட்ரையோடோச் triodos
தேசிய அறிவியல் ஆராய்ச்சி நடுவம் (தேஅஆந) national center for scientific research (cnrs)
தேசிய உழவர்கள் ஒன்றியம் national farmers union
நிக் வான் வெச்டென்கோல்ச் nick von westenholz
நோய் எதிர்ப்பு முறைமை immune system
பயிர்ப் பாதுகாப்புச் சங்கம் crop protection association
பராக் ஒபாமா barack obama
பிரித்தானிய அரசு british government
புதுநிக்கோட்டினைட்கள் neonicotinoids
ப்ரான்ச் france
ரேச்செல் கார்சன் rachel carson
வைப்பகம் 'வங்கி' bank
ழான்-மார்க் பான்மாட்டின் jean-marc bonmatin

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org