தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஊனுடம்பு ஆலயம்

காற்றடைத்த பையடா! - நாச்சாள்

பிரபஞ்சத்தில் ஏற்படுகிற வாயுவின் அழுத்தம் சில நேரங்களில் புயல் என்னும் பெயரில் பெரும் சேதாரங்களை உண்டு செய்கிறது. அதைப் போல் குடலில் ஏற்படும் வாயுவானது மனிதனைச் சில நேரங்களில் ஏப்பம், அபான வாயு எனவும் திக்கு முக்காடச் செய்து விடுகிறது.

ஆங்கிலத்தில் Flatulence; தமிழில் அபான வாயு - உடலில் பல நுண்ணுயிர்கள் , உணவை ஜீரணித்து வெளியேற்றப் பேருதவியாக இருக்கின்றன‌. உணவைப் பிரித்து நொதித்து சீரான ஜீரண சக்தியைக் கொடுக்க இவை உதவுகின்றன‌. இந்த நுண்ணுயிர்கள் உணவை ஜீரணிக்கும் போது சில வாயுக்கள் வெளியேறும். அவை எந்த வித துர்நாற்றத்தையும் ஏற்படுத்தாது சதாரணமாக வெளியேற்றும். இது எல்லா மனிதர்களுக்கும் இயல்பாக நடைபெறும் ஒன்று. ஆனால் பல நேரங்களில் நாம் உண்ணும் உணவு வயிற்றில் கெட்டு புளித்து விடுகிறது. இதுவே வாயு தொல்லைக்கு (அபான வாயு) மிக முக்கிய காரணம். இவ்வாறு கெட்டு ஜீரணிக்காத உணவின் மூலமாக வெளியேறும் காற்று அடிவயிற்றில் சேர்ந்தவுடன் ஆசனவாய் வழியாக அபான வாயு துர்நாற்றத்துடன் வெளியேறும்.

நம் உணவில் ஏற்படும் உயிர் வேதியல் மாற்றத்தினால் உணவு இரைப்பைக்கு வந்தவுடன் ஏற்படும் வேதியல் நிகழ்வின் பாதிப்பே துர்நாற்றத்துடன் கூடிய வாயுத் தொல்லைக்கு மிக முக்கிய காரணம். இந்த உயிர் வேதியல் மாற்றத்தில் அதிக கந்தகமும் நைட்ரோஜனும் சேர்ந்தால் அதன் துர்நாற்றம் அதிகமாக இருக்கும்.

வாயுத் தொல்லை உணவுப் பழக்கத்தினால் மட்டும் இல்லாது சுவாசிப்பு பழக்க வழக்கம், மலம் கழிக்கும் பழக்க வழக்கத்தினாலும், செயற்கை மருந்துகளாலும் ஏற்படுகிறது. சில நேரங்களில் வாயு உடலை விட்டு வெளியேறாத நிலையில் வயிறு உப்பி உட்பகுதியை அழுத்தி வழியை ஏற்படுத்துகிறது.

வாயு எவ்வாறு உருவாகிறது

வயிற்றில் இருந்து வாயுவும், மலமும் சீரான முறையில் வெளியேற வேண்டும். வாயின் வழியே உள் நுழையும் காற்று இரைப்பையால் ஏப்பமாக திருப்பி அனுப்பப்படும். ஜீரண மண்டலத்தில் அதிக வாயு உண்டானால் அதனை வெளியேற்ற உடல் பல வழிகளை மேற்கொள்கிறது. குதம் வழியாகவும், வாய் வழியே ஏப்பமாகவும் வெளியேற்றுகிறது. அடுத்ததாக ஜீரண அவயங்களின் சுவர்கள் வழியே ரத்தத்தில் உறிஞ்சப்பட்டு, நுரையீரல் வழியே வெளியேற்றுகிறது. ஜீரண மண்டலத்தில் உள்ள நுண்ணுயிர்கள் சுலபமாக வெளியேற்றுவதற்காக வாயுவை சிதைத்து மாற்றுகின்றன. இவற்றினால் உடல் வலி, கால் கை வலியும் ஏற்படுகிறது.

நாம் உண்ணும் உணவு வெகுநேரத்திற்குப் பின் ஜீரணிப்பதும், நீடித்த மலச்சிக்கலும் வாயுவிற்கு மிக முக்கிய காரணங்கள்.

நாம் நமது உணவை ருசியின் காரணமாக அதிகமாகவும், வேகமாகவும் சாப்பிடுகிறோம். உணவு முதலில் உமிழ்நீருடன் கலந்து வாயில் ஜீரணித்துப் பின் இரைப்பையில் ஜீரணிக்கப்படுகிறது. பற்கள் வயிற்றில் இல்லை வாயில் தன் உள்ளது. உணவை மெல்லும் பொது காற்று புகாது வாயை வாயை மூடி நன்கு மென்று விழுங்க வேண்டும். ஆனால் நாம் அளவிற்கு அதிகமாகவும், வேகமாகவும் விழுங்குவதினால் இரைப்பையின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்பட்டு உணவை சரியான நேரத்தில் ஜீரணிக்க முடியாமல் உணவு இரைப்பையில் தங்கி இருப்பதினால் புளித்துக் கெட்டுப்போய் விடுகிறது. இந்த சூழ்நிலையில் தான் நச்சு வாயு வயிற்றில் உற்பத்தியாகிறது. இவையே துர்நாற்றத்தையும் ஏற்படுத்துகிறது.

மேலும் நாம் உண்ணும் ஒவ்வொரு உணவும் வெவ்வேறு இடத்தில் (வாய், இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் என்று) ஜீரணிக்கப்பட்டு உடலால் உறிஞ்சப்படுகிறது. அதுவும் உணவு எளிதில் ஜீரணிக்கும் உணவு, கடினமான உணவு என்று வெவ்வேறு இடத்தில் இது நடக்கிறது. இவ்வாறான பல உணவு வகைகளை சேர்த்து உண்பதினால் எளிதில் உணவு உடலில் கெடுகிறது. மாமிச உணவுகள், பல நாட்கள் முன் செய்து வைத்த எண்ணெய்ப் பண்டங்கள், இவற்றை அடிக்கடி உண்பவர்களுக்கு மலச்சிக்கலின் மிகுதியால் கூட்டங்களிலும் மற்றவர்கள் மூக்கைப் பொத்திக் கொள்ளும் அளவிற்கு வாயுத் தொல்லை அபான வாயுவாக வெளிப்படுகிறது. வயிறு காலியாக இருந்தாலும் மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு வாயு உண்டாகும். இவை தொடர்ந்து நடக்குமானால் அது வாதத்திற்கு வித்திடும்.

ஆக நேரத்திற்குப் பசித்து உணவு அருந்தாமை, நேரம் கழித்துப் பசி இல்லாது உணவு அருந்துவது, ஒரே நேரத்தில் தேவைக்கு அதிக உணவு உட்கொள்வது, நீண்ட பட்டினி போன்றவை அஜீரணக் கோளாரை உண்டாக்குகிறது. இந்த அஜீரணக் கோளாறு துர்நாற்றமான வாயுவை ஏற்படுத்துகிறது. இரவில் அதிக காரம், புளித்த தயிர் போன்றவை குடலில் உள்ள அபான வாயுவை சீற்றம் கொள்ளச் செய்கின்றன.

துர்நாற்றமான வாயு ஏற்படச் சில காரணங்கள்z

மன இறுக்கம், பதற்றம், பதட்டம், அழுத்தம்(மன உளைச்சல் ) உள்ளவர்கள் மற்றவர்களை விட அதிகக் காற்றை உணவுடன் உட்கொள்வார்கள். மேலும், அதிகமாகச் சாப்பிடுவது பேசிக்கொண்டே சாப்பிடுவது போன்ற செயல்கள் காற்று உள்ளே போக ஏதுவாகின்றன‌. இந்தக் காற்று உணவை பல நேரங்களில் வயிற்றில் உருமாறச் செய்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

உடலுழைப்பு இல்லாது தாமதமாக ஜீரணிக்கும் கிழங்கு வகைகள் வாயுவை உண்டாக்கும். அதனுடன் மசாலா பொருட்கள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ஆகியவற்றை அதிகம் சேர்த்து உண்பது துர்நாற்றமான வாயுவாக உருமாறும்.

ஜீரணத்திற்காக உதவும் ஜீரண சாறுகள் குறையும் போது கடினமான உணவை ஜீரணிக்க முடியாமல் உடல் வாயுவை ஏற்படுத்தும். உதாரணத்திற்கு, உடலில் லாக்டோஸ் என்சைம் குறைந்தால் பாலில் உள்ள லாக்டோஸை ஜீரணிப்பது கடினம். இவர்கள் பாலைக் குடித்தால் வாயுதான் அதிகமாகும்.

மலச்சிக்கல் மிக முக்கிய காரணம். தாமதமான இரவு உணவு மற்றும் அதிக இரவு உணவு. அதிக உடல் சூட்டை ஏற்படுத்தும் உணவுகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்ப் பதார்த்தங்களை உட்கொள்வது. இரசாயனங்கள் பூச்சி விசக் கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப் பட்ட உணவுப் பொருட்கள். (இவை உடல் சூட்டை அதிகரிக்கும்). இவற்றால் உடலின் உயிர்-இரசாயன மற்றம் சீர்குலைந்து விஷத்தன்மை உள்ள துர்நாற்றமான வாயு ஏற்படும்.

அபானவாயு துர்நாற்றத்தைக் குறைக்க/நீக்க வழிமுறைகள்

பழங்கள், பழச்சாறுகளை முதல் மூன்று நாட்களுக்கு முழு உணவாக எடுத்துக் கொள்வது.

எளிதில் ஜீரணமாகும் உணவுகள், தவிடு நீக்காத தானியங்கள், நார்சத்து உள்ள இயற்கை முறையில் விளைவிக்கப் பட்ட காய்கறிகள் ஆகியவற்றை தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வது சீரான ஜீரணத்திற்கு வழிவகுக்கும். இவை உணவு வயிற்றில் கெடாமலும் சீரான மல வெளியேற்றத்திற்கும் துணைபுரியும்.

கீரைகள், காய்கறிகள் முதலில் உண்டு சற்று கடினமான உணவை இறுதியில் முறையாக எடுப்பது அஜிரணத்தை தடுக்கும். எல்லா உணவையும் நன்றாக மென்று மெதுவாக உமிழ்நீருடன் கலந்து சாப்பிட்டால் அஜீரணம் ஏற்படாது. எளிதில் ஜீரணமாகும். வாயுத்தொல்லை நீங்கும்.

உண்ணும் போது இடையில் நீர் அருந்துவது கூடாது. உணவிற்கு முன், இடையில் குடிக்கும் நீர் ஜீரண நீரை நீர்த்துவிடும். இது அஜீரணத்திற்கு காரணமாகும். எளிய ஆசனப் பயிற்சிகளை செய்வது சிறந்தது. வாயுத் தொல்லை உள்ளவர்கள் பவன முக்தாசனத்தை தொடர்ந்து செய்வது நல்லது. மாமிசம், வெங்காயம், பூண்டு, கிழங்கு வகைகளை குறைத்து தவிர்ப்பது தேவையற்ற வாயு ஏற்படுவதைத் தவிர்க்க உதவும். தேன் உட்கொள்வது சிறந்தது. வெள்ளை சீனியைத் தவிர்க்கவும் (இது உடல் நச்சுத்தன்மையை அதிகரிக்கும்).

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org