தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உழவை வெல்வது எப்படி - பசுமை வெங்கிடாசலம்

தொடர்கிறது

மகாராஷ்டிர மாநிலத்தில் வாழ்ந்த சிரிபாத தபோல்கர் கணக்கு ஆசிரியராக பணிபுரிந்தவர். ஒரு நாள் அவர் ஒரு தோட்டத்தின் வழியாக செல்லும்போது அங்கு மண்புழுக்கள் பல இறந்து கிடப்பதை கண்டு விசாரித்தபோது முன்தினம் இரசாயன உரம் வயலில் இடப்பட்டதாக அறிகிறார். ஒரு உயிருள்ள மண்புழுவை எடுத்து சாப்பாடு உப்பை தூவுகிறார். அது துள்ளி விழுந்து இறக்கிறது. சாதாரண உண்ணும் உப்பு படும்போதே மண்புழு இறந்துவிடுகிறது என்றால் பல கிலோ இரசாயன உரங்களை தோட்டத்தில் இடும்போது மண்புழு மட்டுமல்லாமல் பல விதமான உயிரினங்களுமே இறந்து விடுமே என நினைத்து, இது சரியானதுதானா என தனக்குத்தானே கேள்வி எழ பல நாட்கள் இதற்கான விடை தேடி அலைகிறார்.

'பள்ளியில் குழந்தைகளுக்கு மண்புழுவை உழவனின் நண்பன் என்று சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆனால் கல்லூரியில் விவசாயப்படிப்பில் மண்ணில் இரசாயன உப்பை இடச்சொல்லிக்கொடுக்கிறார்கள். இரசாயன உப்பு மண்புழுவை கொல்கிறது. எது சரி? எது தவறு?' என பல விதமான கேள்விகள் அவரை குழப்பம் அடையச்செய்கின்றன. சில வருடங்கள் தேடுதலுக்குப்பின் ஒரு காந்தி ஆசிரமத்தில் தங்கி விவசாயத்திற்கு பயிற்சி அளிக்க அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. பள்ளிப்படிப்பை தொடராத விவசாய பிள்ளைகளுக்கு தங்கும் வசதியுடன் விவசாயம் கற்றுக்கொடுக்கப்படும் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. விவசாய பிள்ளைகளும் பயிற்சிக்கு வருகின்றனர். ஆனால் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய சிரிபாத தபோல்கரோ விவசாய படிப்போ, விவசாயம் செய்த அனுபவமோ இல்லாதவர். ஆனாலும் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது.

பயிற்சிக்கு வரும் பிள்ளைகளை உட்காரவைத்து வகுப்பு எடுக்காமல் ஆசிரமத்தில் உள்ள பூமியில் நேரடியாக களப்பயிற்சிக்கு ஏற்பாடு செய்கிறார். அங்கு அவர்களிடம் 'நீ என்ன நினைக்கிறாயோ அதை செய். அதில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க, முடிந்த அளவு முயற்சி செய்; கண்டிப்பாக தீர்வு கிடைக்கும். தீர்க்க முடியாத பிரச்சினைகளை எனக்கு எழுதி அனுப்பு' எனக்கூறி பல குழுக்களுக்கு பயிற்சி கொடுத்து அனுப்புகிறார். பயிற்சி பெற்ற விவசாய பிள்ளைகளும் தங்களுக்கு சொந்தமான பூமியில் இறங்கி பல விதமான பயிர்களை பயிர் செய்கின்றனர். அங்கு அவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை, தீர்க்கப்பட வழிமுறை, தீர்க்கப்படாத பிரச்சினை என தங்கள் அனுபவங்களை தொகுத்து அஞ்சலட்டை மூலம் தபோல்கருக்கு அனுப்புகின்றனர்.

பயிற்சிகள் தொடர்ந்து நடக்கின்றது. ஒருவருக்கு தீர்க்கப்பட்ட பிரச்சினை இன்னொருவருக்கு தீர்க்கப்படாத பிரச்சினையாக உள்ளது. இதை தபோல்கர் அஞ்சலட்டை மூலம் மற்றவர்களுக்கு பரவலாக்கம் செய்கிறார். செயல்முறையால் விவசாயத்தில் ஏற்படும் அனைத்து வகையான பிரச்சினைகளுக்கும் தீர்வு ஏற்படுகிறது. இவைகள் அனைத்தும் இரசாயன இடுபொருட்கள் இன்றி அருகில் கிடைக்கும் பொருட்களையும், உள்ளூர் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தியே தீர்வு காணப்பட்டன என்பதே மிகவும் முக்கியமானது ஆகும். நடைமுறை செயல்பாடுகள் அனைத்தையும் தபோல்கர் ஆவணப்படுத்துகிறார். இந்த ஆவன முடிவின்படி விளைச்சல் உச்ச பட்சமாக இருந்தது உறுதிப்படுத்தப்பட்டது. செலவு மிகவும் குறைவாக இருந்ததும் தெளிவானது. இந்த செயல்பாட்டின் மூலம் மகசூல் கூடிக்கொண்டே வந்து நிரந்தரமானது, தபோல்கரின் வழிமுறைப்படி விவசாயத்தில் ஏற்படும் இடர்பாடுகளான

  1. களை நிர்வாகம்
  2. நீர் நிர்வாகம்
  3. உர நிர்வாகம்

அனைத்தும் மிக சுலபமான முறையில் முறைப்படுத்தப்பட்டன. அவைகளை அவர்கள் எவ்வாறு கையாண்டார்கள் என்பதை விரிவாக காண்போம்.

முதலில் நீர் நிர்வாகம் பற்றி அறிவோம். பூமியில் பாய்ச்சும் நீர் மண்ணின் அடியாழத்திற்கு சென்று விடும். மண்ணில் மேல்மட்டத்தில் உள்ள நீர் சூரிய வெப்பத்தினாலும், காற்றினாலும் ஆவியாகி விடுகிறது. சிறிது நீரே பயிர்களுக்கு பயன்படுகிறது. இவற்றை தவிர்க்க பயிர்களுக்கு தொடர்ந்து நீர் கிடைக்க மூடாக்கு முறை பயன்படுத்தப்பட்டது. பயிர்களுக்கு இடையில் உள்ள இடைவெளியில் சூரிய ஒளி மண்மீது படாதவாறு மக்கக்கூடிய அனைத்து வேளாண் கழிவுகளையும் பரப்பி வைக்கப்பட்டது. இதனால் சூரிய ஒளியாலும் காற்றினாலும் நீர் ஆவியாகாமல் பாதுகாக்கப்பட்டது. மக்கும் தன்மையுள்ள மூடாக்கு பொருட்களால் அங்கு மண்புழு, நத்தை, கரையான், எறும்பு போன்ற பல உயிரினங்கள் உற்பத்தியாகி மண்ணை பொலபொலப்புத்தன்மைக்கு மாற்றின. இதனால் மண்ணின் நீர்பிடிப்புத்தன்மை அதிகரித்தது. பல உயிரினங்களின் கழிவுகள் பயிர்களுக்கு சிறந்த உரமாக மாறியது. மூடாக்கு இடப்பட்டதால் களைகள் மொத்தமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

ஒரு பயிர் செய்யும்பொழுது தேவையானவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு தேவையற்றவைகளை அங்கேயே மூடாக்காக பயன்படுத்தும்பொழுது தேவையற்ற வேலையும் செலவும் குறைகிறது. ஆக மூடாக்கு இடுவதின் மூலம் நமக்கு மிகவும் முக்கியமான மூன்று வேலைகள் ஒரே வேலையில் முடிகிறது; ஒன்று களை எடுப்பது, இரண்டாவது அதிக நீர் தேவையில்லை, மூன்றாவது உரச்செலவு. ஆக மூடாக்கு இடுவதன்மூலம் நேர விரயமும், செலவும் மிகவும் குறைந்து விடுகிறது. மண் வளமும் ஆண்டுக்கு ஆண்டு கூடிக்கொண்டே செல்கிறது. இதனால் விளைச்சலும் உச்சபட்சத்தை அடைகிறது. மூடாக்கு இடுதலை பின்பற்றும்பொழுது பூச்சி மற்றும் நோய் தாக்குதலும் மிகவும் குறைந்து காணப்பட்டது.

கழிவுகள் கிடைக்காத சூழலில் உள்ளவர்களுக்கு மாற்று முறை ஒன்றை பரிந்துரைத்தார். அது ஒரு பயிர் செய்யும்பொழுதே நாம் பயன்படுத்தும் உணவுப்பொருட்களான தானியம், பருப்பு, எண்ணெய் வித்து, மசாலா, கீரை விதைகளை சேர்த்து விதைத்துவிடுவது; வளர்ந்தபின் நமக்கு வேண்டிய பயிரைத்தவிர மற்றவற்றை பிடுங்கி மூடாக்காக பயன்படுத்துவது. இதன் மூலம் ஒரு பயிருக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும் கிடைத்தது. இதனால் பயிரின் வளர்ச்சியும் மகசூலும் கூடியது. களை, உரச்செலவும் மிகவும் குறைக்கப்பட்டது. ஒரே சமயத்தில் நாம் வளர்க்கும் பயிரும்,உரப்பயிர்களும் வளர்க்கப்பட்டு கால விரயம் தவிர்க்கப்பட்டது. இதன் மூலம் மூடாக்குக்காக வெளியில் அலைந்து திரிய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இந்த முறை மூலம் அறுவடை செய்தபின் நமக்கு வேண்டிய தானியம், காய் கனிகளை எடுத்துக்கொண்டு தாள்களையும் தண்டுகளையும் அதே பூமியின் மீது மூடாக்காக பயன்படுத்தும்பொழுது சிறிதளவே வெளியில் இருந்து சாம்பல் கொடுத்தால் போதும், விளைச்சல் குறைவு ஏற்படுவதில்லை என்பதனை அறிந்தனர். ஒரு பயிரின் சூரிய ஒளி அறுவடையே அதன் விளைச்சலை தீர்மானிக்கின்றது என்பதை தபோல்கர் ஆவணப்படுத்துதல் மூலம் அறிந்தார். சூரிய ஒளியை ஒரு பயிர் தன் இலைப்பரப்பின் மூலமே பெறுகிறது. ஆக ஒரு விவசாயியின் விளைச்சலை அவர் பயிர் செய்யும் பயிரின் இலைப்பரப்பே தீர்மானிக்கின்றது. அதனால் தபோல்கர் தக்க காலத்தில் திராட்சை போன்ற பயிர்களுக்கு கவாத்து முறை மூலம் இலைப்பரப்பை கூட்டச்செய்தார். இதன் மூலம் மகசூல் பல மடங்கு அதிகரித்தது. மகசூல் கூடுவதற்கு பயிரின் இலைப்பரப்பை கூட்டி பராமரிப்பது மிக முக்கியமானதாகும்.

ஆக தபோல்கரில் ஆய்வின்படி ஒரு விவசாயி தனது பூமியில் விழும் சூரிய ஒளியை எந்த அளவிற்கு அறுவடை செய்கின்றாரோ அந்த அளவிற்கு மகசூல் இருக்கும் என்கிறார். அதனால் 'ஒவ்வொரு விவசாயியும் கணக்கு பார்க்க வேண்டும்; நாம் எவ்வளவு சூரிய ஒளியை அறுவடை செய்கிறோம் என்பதனை' என்கிறார். ஆக ஒரு பயிரின் இலைப்பரப்பின் மீது படும் சூரிய ஒளியே அதன் மகசூலை தீர்மானிக்கின்றது. இதன் மூலம் அறிய வேண்டியது நமக்கு சொந்தமான பூமியின் மீது படும் ஒவ்வொரு சதுர அடி சூரிய ஒளியும் நமக்கு தேவையான பயிரின் இளைப்பரப்பின் மூலம் அறுவடை செய்வதே ஆகும். நமது நாட்டில் விழும் சூரிய ஒளியை சரியான முறையில் பயன்படுத்தினால் 5 பேர் கொண்ட ஒரு குடும்பத்தின் அனைத்து உணவுத்தேவைகளையும் 1/4 காணி நிலத்தில் பெறலாம் என்பதை நிரூபித்தார். தபோல்கர் தனது மாணவர்கள் செய்த சோதனைகளின் நடைமுறைகள் அனைத்தையும் ஆவணப்படுத்தினார். அதனை தொகுத்து (plenty for all) 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள்.இதன் மூலம் பல பயனுள்ள தகவல்களை நாம் எளிதில் அறியலாம்.

அடுத்து புகோகா…இயற்கை வல்லமை உள்ளது; அதை எதிர்த்து போராட முடியாது…அதனுடன் இணைந்து செயல்பட்டால் நாம் மகிழ்ச்சியாக வாழலாம் என்பதை தன் வாழ்நாளில் புகோகா, விவசாயத்தின் மூலம் இந்த உலகிற்கு நிரூபித்துக்காட்டினார். அதே காலகட்டத்தில் வாழ்ந்த சிரிபாத தபோல்கர் விவசாயத்தில் சிரமம் இன்றி அதிக மகசூல் எடுப்பதற்கு அவர் கையாண்ட முறைகளும் இயற்கை சக்திகளை அவர் பயன்படுத்திய விதமுமே காரணமாயின. இதே கால கட்டத்தில் இன்னும் வாழ்ந்துவரும் பில் மொலிஷன் விவசாயத்தை எப்படி செய்தால் சுலபமானதாகவும், நிரந்தரமானதாகவும் இருக்கும் என்பதற்கு என்ன விதமான உத்திகளை கையாண்டார் என்பதை காண்போம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org