தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உயிர்கள் தழைக்க வாராயோ!


உயிராம் மழையே உன்னாலே

உலகம் செழிக்கும் தன்னாலே

உயர்கான் மரங்கள் ஒளிர்ந்திடுமே

உன்னால் அவையும் பூத்திடுமே

செயற்கை வாழ்வின் தீமையெலாம்

சேர்த்துத் துடைக்கும் திருநீயே

இயற்கைப் படைப்பாம் இன்மழையே

இறையும் உனக்கு ஈடாமோ

கயவர் கூட்டம் செழித்திருக்கக்

கானின் மரங்கள் சாய்த்துவிட்டார்

பொய்த்தாய் நீயும் அதனாலே

புரட்டு கின்றாய் சீற்றத்தால்

பயனும் இன்றிக் கடவுளரைப்

பார்த்து வணங்கின் என்செய்வாய்

மயங்கிக் கிடக்கும் மாந்தருளம்

மாற்ற ஏதும் வழியுண்டோ

கானின் மரங்கள் இல்லையென்றால்

கடவுள்களாலே என்னபயன்

வானின் முகிலைக் குளிர்விக்க

வளர்ந்த மரங்கள் வேண்டாமோ

ஆனாச் சூட்டைக் குறைத்துன்னை [ஆனா = அதிகமான, குறையாத]

அழகாய் ஈர்ப்ப தவைதாமே

ஏனோ மாந்தர் இதையெண்ணார்

என்றும் கடவுள் தமைச்சேர்வார்

உலகை உலுக்கும் உன்மத்தர்

உயர்ந்தோர் தாமே என்றுள்ளார்

உலகை ஓம்பும் உயிர்மழையே

உன்னில் உயர்ந்தோர் உலகிலுண்டோ

உலகோர் வாழ உணவளிக்கும்

உழவர் வாடி உருகுவதோ

உலகின் தாயே உயிர்மழையே

உயிர்கள் தழைக்க வாராயோ!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org