தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம்


பதநீர்

( கிராம உத்யோக் பத்திரிக்கா, ஜூலை 1939 - தமிழில் அமரந்தா )

காங்கிரஸ் அரசாங்கத்தின் மதுவிலக்குக் கொள்கைக்கு எதிராக மக்களிடம் பிரச்சாரம் செய்யும் கட்சிகள், பதநீர் குறித்துச் சில தவறான கருத்துக்களைப் பரப்பி வருகின்றன. பதநீர் போதையளிக்காத ஊட்டச்சத்து மிக்க பானம் என்று மெய்ப்பிக்க ஏராளமான சான்றுகள் உண்டு.

பனை மரத்திலிருந்து கிடைக்கும் இனிப்பான சாறுதான் பதநீர். ’தண்ணீர்’ எனப் பொருள்படும் ‘நீர்’ என்ற வடமொழிச் சொல்லிலிருந்து உருவானதே ‘நீரா’ என்ற பெயர். பனை மரத்திலிருந்து கிடைக்கும் இனிப்பான சாறு நிறமற்ற, தீதற்ற, தெளிந்த நீரைப் போன்றது. எனவே இது ‘பதநீர்’ என்றழைக்கப்படுவது பொருத்தமானது. இந்தியாவில் பதநீர் நான்கு வகை மரங்களிலிருந்து கிடைக்கிறது. ஒன்று தென்னை மரம் (மராத்தியில் மாட், குஜராத்தியில் நாரியேல்), விசிறிப்பனை அல்லது பனைமரம் (மராத்தி, குஜராத்தியில் டாட்), பேரிச்சை (மராத்தி, இந்தி, குஜராத்தியில் கஜூரி) மற்றும் சவ்வரிசிப் பனை (மராத்தியில் பெர்லி அல்லது சுர்மத்).

பனையிலிருந்து பதநீர் இறக்கவும் போதைமிக்க கள் இறக்கவும் பின்பற்றப்படும் வழிமுறையில் மாற்றமில்லை. மேற்சொன்ன அனைத்துவகை மரங்களிலிருந்தும் சாறு இறக்கும்போது இனிப்பாக மட்டுமே இருக்கும். தென்னை மரத்தின் மடல்களிலிருந்தும், சவ்வரிசிப் பனையின் மடல்களிலிருந்தும், பனைமடல், பனம்பழங்களிலிருந்தும், பேரிச்சை மரத்தின் நடுத்தண்டுகளிலிருந்தும் பதநீர் கிடைக்கிறது. மேற்சொன்ன மரங்களின் மடல், பழம், நடுத்தண்டு இவற்றைக் கீறி சாற்றினை சேகரிப்பது ‘வடித்தல்’ எனப் படுகிறது. பதநீரையும் கள்ளையும் வேறுபடுத்துவது அவற்றைச் சேகரிக்கும் பானையை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தது. பதநீர் வடிக்க வேண்டுமானால் பானைகளை தினசரி துப்புரவாக கழுவி சுத்திகரித்து உட்புறத்தில் சுண்ணாம்பு குழம்பை பூசியபின் மடல்களில் கட்டித் தொங்கவிடவேண்டும். இதுபோன்ற பானைகளில் வடிக்கப்படும் பதநீர், பகல் நேரத்திலும், மேக மூட்டத்துடன் இறுக்கமான தட்பவெட்பத்திலும் கூட அதன் இயற்கைத் தன்மை மாறாமல் தெளிவாகவே இருக்கும். பதநீரில் கலந்துள்ள சுண்ணாம்பை எளிதாக இறுத்தோ வடிகட்டியோ நீக்கிவிடலாம். ஒவ்வொரு முறையும் பதநீர் வடிப்பதற்கும் புதிய பானை தேவையில்லை. மேற்கூறிய முறையில் சுத்திகரிக்கப்பட்ட பானைகளை அவை உடையும் வரை பயன்படுத்தலாம்.

நாட்பட்ட அனுபவமும் அண்மைக்கால சோதனைகளும் பதநீரில் போதைப் பொருள் இல்லை என்பதை நிரூபிக்கின்றன. தென்னை மரத்தின் பதநீருக்கும் கரும்புச் சாறுக்குமிடையிலுள்ள வேறுபாடுகள் குறிப்பிடப் பட்டுள்ளதை கவனிப்பது பயனுள்ளதாக இருக்கும். குன்னூரிலுள்ள இந்திய ஆராய்ச்சி நிதியக் குழுமத்தின் ஊட்டச்சத்து அளவை சோதனைச்சாலை இந்த ஒப்பீட்டினைச் செய்து முடிவை வெளியிட்டுள்ளது.

” மெட்ராஸ் அரசாங்கத்தின் வேளாண் வேதியியலாளரின் கருத்துப்படி பனை மரத்துப் பதநீரின் உள்ளடக்கம்: தண்ணீர் - 82-85%, சுக்ரோஸ் - 13-16%, குளுக்கோஸ் – 0.1-0.4%. பேரிச்சை பதநீர், கரும்புச்சாறு இவற்றின் தன்மை குறித்து அரசு வேளாண் வேதியியலாளரின் அறிக்கை இந்திய வேளாண் துறை மலரில் வெளியானது. அதன் விவரம் கீழுள்ள அட்டவணையில் பதியப்பட்டுள்ளது. (வேதியியல் சேவைகள்: தொகுதி V, எண்: 3, செப்டம்பர் 1918).

பதநீரில் சிறிதளவு சுக்ரோஸ் இருப்பதால் அது உடலைக் குளிர்விக்க உதவுகிறது. மேலும் அதிலுள்ள வைட்டமின் B, B1 ஆகியவை உடல்நலத்திற்கு உத்திரவாதமளிக்கும். குன்னூர் ஊட்டச்சத்து சோதனைச்சாலை அதிலுள்ள கனிமங்களை அளவிட்டுள்ளது. அதன்படி கால்சியம் – 0.149%, பாஸ்பரஸ் – 0.011%, இரும்பு – 0.76% ஆகியவை பதநீரில் உள்ளன.

பதநீரை ஒரு பானமாக விளம்பரம் செய்வது ஒருவகையில் மதுவிலக்குப் பிரச்சாரத்திற்குத் துணை செய்வதாகும். மதுவிலக்குப் பிரச்சாரத்தினை வெற்றியடையச் செய்ய வேண்டுமானால் நம் நாட்டின் தேசியச் செல்வமான பனை மரங்களை பயனுள்ள உற்பத்திக்கு - அதாவது அதன் இனிமையான சாற்றைப் பானமாகவோ அல்லது வெல்லமாகவோ உற்பத்தி செய்வதற்குப் - பயன்படுத்த வேண்டும். இதுவரை கள் இறக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்களுக்கும், அந்த சமூகத்தைச் சேர்ந்த பிறருக்கும் வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதும் முக்கியமாகும். மதுவிலக்குப் பிரச்சாரம் விரிவடையும் போது மேலும் எண்ணற்றோர் வேலையை இழக்கப்போகிறார்கள். ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட்டம் மலிந்து கிடக்கும் இந்நாளில் அவர்களுக்கெல்லாம் எப்படி வேலை கிடைக்கும்? அவர்களுக்கு வேறு தொழிலை எவ்வாறு, யார் கற்பிக்க முடியும்? இனிமையான பதநீரை ஒரு பானமாகப் பயன்படுத்துவோமானால், இந்த நிலையை மாற்றுவதோடு அம்மக்களுக்கு வேலை வாய்ப்பையும் பனைமரங்களிலிருந்து சிறந்த பயனையும் பெறமுடியும்.

பதநீர் தேங்காய்த் தண்ணீர் போல ஒரு சுவையான, ஊட்டச்சத்து மிக்க தீங்கற்ற பானம். ஆனால், அது தேங்காய்த் தண்ணீரை விட அதிக இனிப்பானது. இடைவிடாது குடித்துவந்தால் உடல் எடையும் பலமும் அதிகரிக்கும். பதநீர் பல கோளாறுகளை குணப்படுத்துவதாகவும் அறியப்படுகிறது. சுண்ணாம்பு தடவப்படாத பானைகளில் பதநீர் வடிக்கப்படுமானால் சூரியோதயத்திற்குப் பிறகு அது புளித்து போதைதரும் பானமாக மாறிவிடும். இதை அறிந்ததால் தான் நமது முன்னோர்கள் சூரியோதயத்திற்குப் பிறகு பதநீர் அருந்துவது தீங்கானது என்று கூறினார்கள். ஆனால், பல்வேறு சோதனைகளுக்குப் பிறகு பதநீரைப் புளிக்காமல் தடுக்கும் முறை கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. மரத்திலிருந்து பானைகளை இறக்கிய பின்னரும் சுண்ணாம்பு தடவியிருப்பதால் பதநீர் பன்னிரெண்டு மணிநேரம் வரை இனிப்பாகவே இருக்கும். பானையின் அடிப்பாகத்தில் சுண்ணாம்பு படிந்து வருவதால் பதநீர் தெள்ளிய நீரைப்போலவே இருக்கும். எனவே அதனை சூரியோதயத்தின் பின்னரும் கூட ஊட்டச்சத்து மிகுந்த பானமாகப் பயன்படுத்த முடியும்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org