தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்


காவி உடை தரித்த காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சியின் ஊழலும் நிர்வாகச் சீர்கேடும் தாள முடியாமல், 'எத்தைத் தின்னால் பித்தம் தீரும்' என்ற நிலையில் மக்கள் நரேந்திர மோடியைப் பிரதமராகத் தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தினார்கள். பல மாநிலங்கள் முழுமையாகப் பாராளுமன்றத் தொகுதிகளை பாரதிய ஜனதா கட்சிக்கு அளித்தன. அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க அரசிடம் நல்லாட்சியையும் நலத்திட்டங்களையும் மக்கள் எதிர்பார்த்துள்ளனர். “நல்ல நாள் வரப் போகிறது” என்ற கோஷத்துடன் பிரச்சாரம் செய்த பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் என்ன செய்தது? ரயில் கட்டணங்களை உயர்த்தியது. இயற்கை எரிவாயு விலையை உயர்த்தியது. சுற்றுச் சூழல் அமைச்சர் ஆன‌ பிரகாஷ் ஜவதேக்கர், சூழலையும் பாதுகாத்து, மேம்படுத்துதலையும் செய்வோம் என்று வீரம் பேசினார். ஆனால் எப்படிச் செய்யப் போகிறோம் என்ற ஒரு வரி விளக்கம் கூட இல்லை.

நிதித் திட்ட அறிக்கையில் நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி, சுற்றுச்சூழலைப் பற்றியோ, நிலைத்தன்மை பற்றியோ, காடுகள், உயிர்ப்பன்மையம் போன்றவற்றைப் பற்றியோ ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நம் நாட்டின் 50 கோடி மக்களின் வாழ்வாதாரமும், கால் பகுதி நிலப் பரப்பை உள்ளடக்கியதுமான காடுகள், சமவெளிகள், சதுப்பு நிலங்கள் மற்றும் பிற சூழல்களைப் பற்றியும் எதுவுமே கூறாமல் மிக அமைதியாக இருந்து விட்டது நிதி அறிக்கை. சூரிய ஒளி ஆற்றல் உற்பத்திக்கு நிதி ஒதுக்கீடு மொத்த ஆற்றல் ஒதுக்கீட்டில் 0.6 விழுக்காடு மட்டுமே. இயற்கை வேளாண்மைக்கு ஒதுக்கப்பட்ட நிதி 100 கோடி; ஆனால் உர மானியமோ 70,000 கோடி!

இதையெல்லாம் தாண்டி நம் நாட்டு விவசாயிகளுக்கு ஒரு மன்னிக்க முடியாத துரோகத்தை மத்திய அரசு செய்து விட்டது; மத்திய அரசின் “மரபீனித் தொழில்நுட்ப ஆய்வுக் குழுமம்” 60 வகையான மரபீனி மாற்றப் பயிர்களுக்குக் களப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கி விட்டது. “மண், விளைச்சல், உட்கொள்ளும் மனிதர்களின் மேலுள்ள நீண்ட கால விளைவுகள் ஆகியவற்றைப் பற்றிய முழுமையான அறிவியல் ஆய்வுகள் இல்லாமல் மர‌பீனிப் பயிர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்” என்று பா.ஜ.க தேர்தல் வாக்குறுதி அளித்தது. இதை, சங் பரிவார் அமைப்பின் அங்கமான சுதேசி ஜாக்ரண் மன்ச் என்ற அமைப்பு பச்சைத் துரோகம் என்று கடுமையாகச் சாடி உள்ளது. இதனால் அளவிட இயலாத‌ மர‌பீனி மாசுக் கலப்பு பற்பல விதைகளிலும் ஏற்படும் ஆபத்து உள்ளது. இதைப் பற்றி ஒரு வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது, உச்ச நீதி மன்றத்தின் தொழில்நுட்ப ஆய்வுக் குழு இதை எதிர்த்து உள்ள போது, இவ்வளவு அவசரம் ஏன்? உச்ச நீதிமன்றத்தின் தீர்வுக்குக் காத்திருக்க இயலாத அளவு மத்திய அரசுக்கு மன்சான்டோ மீது என்ன கரிசனம்?

மரபீனி மாற்றுத் தொழில்நுட்பங்களால் லாபமடையும் நிறுவனங்கள் அனைத்தும் வேற்று நாட்டவையே. யாரை மகிழ்விக்க இவ்வளவு அவசரம் மோடி அரசுக்கு?

இதையெல்லாம் பார்க்கும் போது காங்கிரசுக்கும், பாரதிய ஜனதாவிற்கும் என்ன வேற்றுமை? தேர்தல் முடிந்ததும் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்றில் சி.பி.ஐ கட்சியைச் சேர்ந்த திரு.டி.ராஜா அவர்கள், 'இந்த ஆட்சி மாற்றத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்ற கேள்விக்கு, “பா.ஜ.க எப்படி காங்கிரஸுக்கு மாற்றாக முடியும்? அவை இரண்டுமே ஒரே கொள்கைகளைத் தானே கடைப்பிடிக்கின்றன” என்ற அடிப்படை உண்மையைக் கேட்டார். அக்கூற்று எவ்வளவு தீர்க்க தரிசனமானது என்று கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிகிறது . காவி உடையணிந்த காங்கிரஸ் ஆகிவிடுமா பா.ஜ.க ? காலம்தான் பதில் சொல்லும்!

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org