தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

BRAI meet - அனந்து

டெல்லியில் விவசாயிகள் போராட்டம்.

அந்நியனே வெளியேறு - அன்று, ஆகஸ்டு 9, 1942! அன்று எப்படி வியாபரம் மட்டுமே ஆயுதமாக கொண்டு நம்மை அடிமை கொண்டானோ, இன்றும் அதே வியாபாரம் மூலமாக நம்மை நம் உணவை, நம் விதையை, உரிமைகளைப் பறித்து, அடிமைப் படுத்த துடிக்கின்றன, மொன்சன்டொ முதலான மேற்கத்திய/ அமெரிக்க பெரும் பகாசுரக் கம்பனிகள். நம் விவசாயிகளின் வாழ்வாதாரம், விதை உரிமை மற்றும் பொருளாதாரம் எல்லாம் பறிபோகும் நிலை, ஒரு நிதர்சனமாய்க் கண்முன் விசுவரூபம் எடுக்கிறது. அதற்குத் துணை போக நம் அரசியல்வியாதிகள்/அடிமைகள்- வியாபரம் மற்றும் மேம்படுத்துதல் என்ற போர்வையில் இத்தனை கூத்துக்கள். அது மட்டுமல்ல, நாம் முன்பே பல முறை தாளாண்மையில் எழுதியது போல், பிராய் ( BRAI) என்னும் உயிரி தொழில்நுட்ப ஒழுங்காற்று ஆணைய சட்டம், இந்த பகாசுரக்கம்பனிகளுக்கு உதவ வேண்டி வருகிறது.

இவற்றை எல்லாம் எதிர்த்து, வெள்ளையனே வெளியேறு தினத்தின் நினைவாக,ஆகஸ்டு 8-ம் தேதி, டெல்லி பார்லிமென்ட் தெருவில் ஒரு பெரிய ஆர்ப்பாட்டம் ஆஃசா, கிரீன் பீஸ், மரபீனி மாற்றம் அற்ற இந்தியாவிற்கான கூட்டமைப்பு, மேலும் பல அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டது. போராட்டம் மட்டும் இல்லாமல் இது ஒரு கொண்டாட்டமாகவும் அமைக்கப்பட்டது - பல்வேறு விதை சேகரிப்பாளர்கள் பாரம்பரிய விதைகளை கண்காட்சியாக அமைத்தனர், பல்வேறு குழுக்கள் பாரம்பரிய கலை வடிவங்களை கண்காட்சி அமைத்தனர்..அன்றைய மற்றொரு சிறப்பு, நமது சென்னையின் ரீஸ்டோர் நண்பர்களின் உதவியுடன் இயற்கை மற்றும் சிறுதானியங்கள் கொண்ட மதிய உணவு வந்திருந்த எல்லோருக்கும் பரிமாறப்பட்டது.

பிராய் சட்டம், மொன்சன்டோ மற்றும் மரபீனி மாற்ற விதைகள் இவையாவும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என இந்த போராட்டம் விடுத்த அழைப்பிற்கு 20 மாநிலங்களிலிருந்து 3000 பேர்களுக்கு மேல் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழகத்திலிருந்தும் பல்வேறு குழுக்களிலிருந்து 70 பேருக்கு மேல் வந்திருந்தனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளிலிருந்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வந்திருந்தனர்- மொத்தம் 18 பாராளுமன்ற உறுப்பினர்கள் (MP) 8 கட்சிகளிலிருந்து பங்கேற்றனர். நம் தமிழகத்தின் 5 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

“இன்று நமது நாட்டில் 93% க்கு மேல் பருத்தி விதை ஒரே ஒரு அந்நிய‌ கம்பனியான மொன்சான்டோவின் கையில் உள்ளது! நமது விடுதலைப் போராட்டத்தின் சின்னமான தேசியக் கொடி கூட அந்த அமெரிக்க கம்பணியின் பருத்தியிலிருந்தே நெய்யப்படுகிறது என்பது எவ்வளவு கேவலமான விஷயம்!” என்று பீஹாரை சேர்ந்த பன்கஜ் பூஃச‌ன் உணர்ச்சி பொங்கக் கூறினார். மேலும் “இந்த ஆண்டு சுதந்திர தினத்தன்று, நமது பிரதமர் இந்த பி.டி பருத்தி இல்லாத இயற்கையாக விளைவித்த பருத்தியில் நெய்த கொடியை ஏற்ற வேண்டும்” என்றும் கோரிக்கை விடுத்தார்.

“முன்பு கிழக்கிந்திய கம்பனி, இன்று நம்மை, நம் விதையை, நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முழுங்கும் பன்னாட்டு கம்பனிகள்! இவற்றின் பிடியிலிருந்து நம் விவசாயிகளை வெளிக்கொண்டு வர வேண்டும். அதற்கு இயற்கை விவசாயம், உயிர்ம விவசாயம் மற்றும் தற்சார்பு வேளாண் வழிகள் மட்டுமே உதவ முடியும்” என்றார் நீடித்த மற்றும் நிலைத்த வேளாண்மைக்கான (ஆஃசா) கூட்டமைப்பின் கவிதா குருகன்டி.

தமிழக விவசாயிகள் கூட்டமைப்பின் செல்வம் “ஐரோப்பாவிலிருந்து பொது மக்களின் ஒருமித்த எதிர்ப்பினால் மொன்சான்டோ எப்படி தாங்களாகவே வெளியேறியதோ அதே போல் இங்கிருந்தும் வெளியேற வேண்டும், அப்பொழுது தான் நமது விவசாயிகளுக்கு விடுதலை” என்றார்.

மேலும் பலரும் “பிரதமர் இப்பொழுதேனும் விழித்து, விதை உரிமை, இறையாண்மை மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரம் இவற்றை மீட்க வேண்டும்” என குரல் கொடுத்தனர். முக்கியமாக வேளாண்மைக்காண பாராளுமன்ற உயர் மட்ட குழு (parliamentary standing committee) மற்றும் உச்ச நீதி மன்றத்தின் தொழில்நுட்ப அனுமானக் குழு (technical evaluation committee) ஆகியவை பரிந்துரைத்துள்ளது போல் நடக்க வேண்டும். களப்பரிசோதனைகள் நிறுத்தப்பட வேண்டும், என்றும் கோரினர்.

அன்றைய கூட்டதின் முடிவில் எல்லோரும் பிடி பருத்தி அல்லாத (மொன்சான்டோ விதை அல்லாத) விதையிலிருந்து நெய்யப்பட்ட ஒரு தேசியக்கொடியை நமது பிரதம மந்திரிக்கு கொடுக்க நடை பயணம் மேற்கொண்டனர். சிறிது தூரத்திலேயே காவல்துறை அவர்களை எல்லாம் நிறுத்தி, 5 நபர்களை மட்டும் தங்கள் வண்டியில் பிரதமரின் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்றது. அங்கு பிரமத மந்திரியின் அலுவலகத்தின் மந்திரி திரு. நாராயணசாமி அவர்கள் அந்தக் குழுவைச் சந்தித்து, அந்த தேசியக் (மெய்யான சுதேசி பருத்தியிலிருந்து நெய்யப்பட்ட) கொடியையும் கோரிக்கையையும் பெற்றுக்கொண்டு பிரதம மந்திரியிடம் ஒப்படைப்பதாக கூறினார்.

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org