தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

நிரம்பிய நூல் - நூல் விமரிசனம் - பாபுஜி


சரஸ்வதி - ஒரு நதியின் மறைவு என்ற நூலை அண்மையில் வாசித்தேன். ஒரு நதி மறையுமா? எவ்வாறு அது சாத்தியம்? அது ஒரு திடீர் நிகழ்வா அல்லது தொடர்ந்த ஒன்றா? என்ற கேள்விகளாலும், வேதங்களில் மிக உயர்த்தி சொல்லப்பட்டிருக்கும் சரஸ்வதி நதியின் மறைவைப்பற்றியது என்பதாலும் நான் அந்நூல் நோக்கி ஈர்க்கப்பட்டேன் என்பதே உண்மை. மிஷல் தநினோ என்ற பிரெஞ்சு ஆராய்ச்சியாளர் ஒருவரின் கடும் முயற்சியால் விளைந்த நூல் இது. இந்நூல் எவ்வாறு சிந்து சமவெளி நாகரிகம் என்பது உண்மையில் சரஸ்வதி நதி நாகரிகம் என்பதையும் அது எவ்வாறு ஹரப்பாவிலுருந்து மேற்கே குஜராதின் கட்ச் வளைகுடா (Rann of Kutch) என்பதையும் பின்னானில் எவ்வாறு அது கங்கை சமவெளியை நோக்கி நகர்ந்தது என்பதையும் ஏராளமான வரைபடங்களுடனும் வரலாற்று சான்றுகளுடனும் தெளிவாக விளக்குகிறது. வியப்பூட்டும் வகையில் நம் மரபு சார்ந்த விவசாயம் எவ்வாறு 5000 ஆண்டு தொடர்புடையது என்பதையும் இந்தியாவில் இன்றும் வழக்கில் உள்ள வாழ்வியல் முறைகள் எவ்வாறு சரஸ்வதி நதி சார்ந்த நாகரிகத்தின் தொடர்ச்சியே என்பதையும் தெளிவாக்குகிறது. ஆரிய படையெடுப்பு என்பதே ஒரு மாயை என்பதும் அது மேலை நாட்டு ஆராய்ச்சியாளர்களின் 'கண்டுபிடிப்பு' என்பதையும் தெள்ளதெளிவாக விளக்குகிறது. இன்று கூட ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் 40/50 அடி ஆழம் தோண்டினால் நன்னீர் கிடைப்பது புதையுண்ட சரஸ்வதி நதியில் இருந்துதானாம்!

இத்தனைக்கும் மேலாக இந்த நூலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அந்த மாபெரும் நதியின் மறைவுக்கான காரணங்கள் இன்றளவும் பொருந்தும் என்பதையும் எவ்வாறு நாம் அத்தகைய ஒரு நிலைக்கு வெகு துரிதமாக சென்று கொண்டிருக்கிறோம் என்பதையும் முன்வைக்க அந்த நூலில் இருந்து ஒரு சிறு பகுதியை இங்கு மேற்கோள் காட்ட விரும்புகிறேன்:

பக்கம் 239 - 240 ” கடந்த காலத்தில் இருந்து ஒரு பாடம்

நமக்குத்தேரிந்தவரை, சில நூற்றாண்டுகளில், அந்த பிரம்மாண்டமான நதி இறந்துவிட்டது. இந்த வார்த்தை மிக முக்கியமானது. ஏனென்றால் நதியும் உயிருள்ள ஒன்று; அதுவும் பிறந்து, வளர்ந்து, தொய்வடைந்து, மறைந்து போகிறது என்பதை நாம் சில நேரங்களில் மறந்து விடுகிறோம். இப்படியான ஒரு நிகழ்வு மீண்டும் நம் கண் முன்னே அரங்கேறுகிறது; கங்கை, யமுனா, பிரம்மபுத்ரா உட்பட இமய மலைப்பனியாறுகளால் நீர் வரத்துப்பெறும் நதிகள் அனைத்தும் பெரும் அபாயத்தை சந்திக்கவிருக்கின்றன. ஆண்டு முழுதும் நீர் கிடைப்பதற்கு காரணமான அந்த பனிப்பாறைகள் அதி வேகமாக உருகி வருகின்றன. இன்னும் முப்பதிலிருந்து ஐம்பது வருடங்களுக்குள் அந்த நதிகள் அனைத்துமே மழையை நம்பியிருக்கும் ஆறுகளாகக்குறுகிவிடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்த தெற்கு ஆசியாவிலும் இது ஏற்படுத்தப்போகும் சங்கிலித்தொடர் தாக்கத்தை நினைத்தே பார்க்க முடியாது. 'உலகளாவிய' பிரச்னைகளில் முழுவதுமாகத் தம்மை பரபரப்புடன் ஈடுபடுத்திவரும் நமது ராஜதந்திர மேதைகளுக்கு, எவ்வளவு பெரிய அபாயம் வெகு அருகில் வந்து நிண்டு கொண்டிருக்கிறது என்பதை யோசிக்கக்கூட முடியாது.

சரஸ்வதி நதியின் மறைவுக்கும் கங்கை, பிரம்மபுத்திரா நதிகளின் மறைவுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. முதாவது இயற்கை நிகழ்வு (பஞ்சாப், ஹரியானாவில் பெருமளவுக்கு காடுகளை அழித்தது சட்லெஜ், யமுனை நதிகளின் மாற்றத்துக்குக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்றாலும் அது பெருமளவுக்கு இயற்கை நிகழ்வுதான்). ஆனால், இரண்டாவது முழுக்க முழுக்க மனிதர்களால் இழைக்கப்படுவதுதான். நமது அதீதச் செயல்பாடுகள் புவியைச்சூடாக்கி பனிப்பாறைகளையும் பாளங்களையும் அதி வேகமாக உருகச்செய்து வருகிறது. நிலைமையைக்க் கட்டுக்குள் கொண்டுவர இன்னும் சில ஆண்டுகள் நம் கையில் இருப்பதாக, சூழலியலாலர்களில் மிகுந்த நம்பிக்கைவாதிகளாக இருப்பவர்கள் சொல்கிறார்கள். ஆனால், அதற்கு பிராந்திய உலக அதிகார மையங்களின் தைரியமான, ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடு மிகவும் அவசியம். அங்குதான் நம் நம்பிக்கைகள் மிகப்பெரிய கேள்விக்குறிகளை முட்டிக்கொண்டு நிற்கின்றன.

3000 வருட கால கங்கைச்சமவெளி நாகரிகம் முடிவுக்கு வரும் நூற்றாண்டாக 21 ஆம் நூற்றாண்டு இருக்கக்கூடும். என்பதை நம் பயணத்தின் எதோ ஓர் இடத்தில் மறந்துவிட்டிருக்கிறோம். சிறு சிறு நீரோடைகள் தாக்குப்பிடித்து நிற்கக்கூடும் என்றாலும் இன்றைய மக்கள் தொகையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அவற்றால் நிச்சயம் முடியாது. கிராமப்புறங்களுக்குத திரும்புதல், புதிய குடியிருப்புகளை உருவாக்குதல், புதிய பெயர்தல் என பிற்கால ஹரப்பா வாசிகளுக்கு மாறும் சூழல்களுக்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ள முடிந்திருக்கிறது. ஆனால், கங்கையின் வாரிசுகள் எங்கு புலம் பெயர முடியும்?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org