தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

மாடல்ல மற்றயவை - ஜெய்சங்கர்


தரமான, தேவையான மாடுகளைத் தேர்ந்தெடுத்து வாங்கியாகி விட்டது. இனி நாம் அவற்றை பராமரிக்க வேண்டும். மாடுகளுக்கு இன்றியமையாத தேவை கொட்டகை. வெயில் காலங்களில் இரவில் கூட வெளியில் கட்டலாம். ஆனால், மழை பெய்யும் போது மாடுகளை நனையாமல் பாதுகாப்பாக கட்ட ஒரு கொட்டகை அவசியம். மேலும், மாடுகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கறக்கும் பாலின் தரத்தை உறுதி செய்யவும் தூய்மையான கொட்டகை வேண்டும். மிகப்பெரிய பண்ணைகளில் மாடுகளைக் கட்டுவது தவிற, பால் கறக்க தனி கொட்டகை அமைப்பதும் உண்டு. பாலின் தூய்மை கெட்டுப்போனால், சாணி போன்ற இதர ஒவ்வாத பொருட்கள் அதில் சிறிது கலந்தாலும் பால் கெட்டுப்போய் எதற்கும், யாருக்கும் பயன்படாமல் போகும்.

நாம் முன்பே ஒரு மாட்டிற்கு சராசரியாக நாற்பது சதுர அடி தேவை என்று பார்த்தோம். ஒரு மாட்டிற்கு அதை 4 அடி அகலம் 10 அடி நீளம் என பிரிக்கவும். நீளத்தில் மாட்டிற்கு சராசரியாக 6 அடியும், தீவனத்தொட்டிக்கு 2 அடியும், மாடுகளை அழைத்துச் செல்ல 2 அடியும் தேவை. மொத்தம் 10 அடி. உதாரணமாக, 5 மாடுகளை கட்ட கொட்டகை வேண்டுமென்றால் 5×4 = 20 அடிக்கு 10 அடி (200 சதுர அடி) கொட்டகை அவசியம். பதினைந்து மாடுகள் வரை ஒரே வரிசையில் கட்டுமாறு கொட்டகை அமைக்கலாம். அதற்கு மேல் இரண்டு வரிசையாக கட்டுவது நலம். அதாவது 15×4 = 60 அடிக்கு 10 அடி (600 சதுர அடி) அளவுக்கு மேல் கொட்டகையின் நீளம் இருந்தால் பராமரிப்பது கடினம். 20 மாடுகள் இருந்தால் வரிசைக்கு 10 மாடுகள் வீதம் இரண்டு வரிசையாக கட்டலாம். இந்த முறையில் 20 மாடுகளுக்கான கொட்டகையின் அளவு 10×4 = 40 அடிக்கு 10×2 = 20 அடியாக (800 சதுர அடி) இருக்கும். இரண்டு வரிசை கட்டும் போது மாடுகள் ஒன்றை ஒன்று பார்த்து இருப்பது போல் அமைக்க 20 அடியை இந்த வரிசையில் பிரிக்கலாம். பாதை 2 அடி, முதல் வரிசை மாட்டிற்கு 6 அடி, முதல் தீவனத்தொட்டி 2 அடி, இரண்டாவது தீவனத்தொட்டி 2 அடி, இரண்டாம் வரிசை மாட்டிற்கு 6 அடி, பாதை 2 அடி. மாடுகள் பின்னோக்கி இருக்கும் படி இரண்டு வரிசை அமைக்க 20 அடியை இந்த வரிசையில் பிரிக்கலாம். முதல் தீவனத்தொட்டி 2 அடி, முதல் வரிசை மாட்டிற்கு 6 அடி, பாதை 4 அடி, இரண்டாம் வரிசை மாட்டிற்கு 6 அடி, இரண்டாவது தீவனத்தொட்டி 2 அடி. இந்த இரண்டு முறையிலும் பராமரிப்பில் சில வேறுபாடுகள் காணுமே தவிர ஒன்றை விட ஒன்று சிறந்தது என்று சொல்வது கடினம். அவரவர்களுக்கு எது மேலானது என்று ஆலோசித்தோ அல்லது விருப்பத்திற்கு ஏற்றவாறோ அமைத்துக் கொள்ளலாம். ஒரு கொட்டகையில் 30 மாடுகளுக்கு மேல் கட்டுவதை தவிர்க்கவும். 30 மாடுகளுக்கு மேல் இருந்தால் இரண்டாவது கொட்டகை அமைப்பது அவசியம்.

மாடுகளையும் அதன் கன்றுகளையும் ஒன்றுக்கொன்று எட்டாத தூரத்தில் கட்டுவதும் முக்கியம். இல்லையேல் கன்றுகள் பால் கறப்பதற்கு முன்பே பால் குடித்து விடும். அதிக தீவனமும் கொடுத்து கன்றின் தேவைக்கு அதிகமாக பால் சுரக்குமேயானால் அது கன்றிற்கு உபாதைகளை உண்டாக்கும். எனவே, எச்சரிக்கை அவசியம். அதிக எண்ணிக்கையில் மாடுகள் இருந்தால் கன்றுகளுக்கு தனி கொட்டகை அமைப்பது சாலச் சிறந்தது. பெரிய பண்ணைகளில் மாடுகளுக்கு தேவையான தீவனத்தை பராமரிக்கவும் அறை அவசியம். மிகப்பெரிய பண்ணைகளில் நோயுற்ற மற்றும் கன்று ஈனும் தருவாயில் உள்ள மாடுகளை பராமரிக்கவும் தனியான இட வசதி வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவும். இரண்டு அல்லது மூன்று மாடுகள் தான் பராமரிக்கப் போகிறோம் என்ற நிலையில் ஒரே ஒரு கொட்டகை அமைத்துக் கொண்டு நோயுற்ற, கன்று ஈனப்போகும் மாடுகளுக்கு முன்னுரிமை அளித்து கொட்டகையை பயன்படுத்தலாம். பெரிய பண்ணைகளுக்கு இந்த யுக்தி பொருந்தாது.

நம்மிடம் உள்ள மாடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப எத்தனை கொட்டகை, எவ்வளவு இடம் என்பதை முடிவு செய்த பின் எங்கு கொட்டகை அமைப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். கொட்டகை அமையப்போகும் இடம் பள்ளமாக இல்லாமல் மேடாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும். பள்ளமாக இருந்தால் கோமியம் மற்றும் கொட்டகை கழுவும் தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் உண்டாகும். மேலும், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நோய்கள் பரவ ஏதுவாகும். கொட்டகை அமையும் இடம் காற்றோட்டமாக வெளிச்சம் உள்ள இடமாக இருப்பதும் முக்கியம். சாணியை கொட்டப்போகும் எருக்குழி, நோய் பரவாத அளவு தூரத்திலும், சாணியை அகற்றுவதற்கு எளிதாக இருக்கும் அளவிற்கு அருகிலும் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். மாட்டுக் கொட்டகை நீள வாக்கில் தெற்கு வடக்காக இருக்க வேண்டும்.

மாடுகள் நம்மைப் போன்று குளிர் காலத்தில் கம்பளியையும் வெயில் காலத்தில் மின் விசிறியையும் பயன்படுத்துவதில்லை. (சிலர் மாடுகளுக்கு குளிர் சாதனப் பெட்டி வைத்துக் கூட பராமரிக்கின்றனர். அதைப் பற்றிப் பேச வேண்டாம்…முதல் படியாக, நாம் நமது மாடுகளையாவது, அவற்றின் கொட்டகைகளையாவது தற்சார்பாக அமைப்போம். நமது வீடுகளுக்கு பின்னால் வருவோம்) எனவே, மாட்டுக் கொட்டகை, எல்லாப் பருவ காலங்களுக்கும் ஏற்றதாக அமைய வேண்டியது மிக முக்கியம். மேலும், அவைகளுக்கு தனி கழிவறை இல்லை. சாணி, கோமியம் முதலியவை அதே கொட்டகையில் தான் விழும். இவற்றை மனதில் இருத்திக்கொண்டு நாம் கொட்டகைக்கான கூரை, சுற்றுச்சுவர் மற்றும் தரை எப்படி, எதனால் அமைய வேண்டும் என்று முடிவு செய்ய வேண்டும்.

மாடுகளுக்கு கொட்டகை அமைப்பதன் முக்கிய நோக்கம் மழையிலிருந்து பாதுகாக்க. எனவே, என்ன விதமான கூரை அமைப்பது என்பது ஒரு முக்கிய படி. நாம் வீடுகளுக்கு இப்போது பொதுவாக பயன்படுத்தும் கம்பி போட்ட கான்கிரீட் தளம் கொட்டகைக்கு பொருந்தாது. A வடிவ கூரையே பொருத்தம். இதனை, தென்னங்கீற்று, பனை ஓலை, ஆஸ்பெஸ்டாஸ், துத்தநாகம் தடவிய இரும்பு தகடு, சீமை ஓடு போன்றவற்றால் அமைக்கலாம். இதில் இரும்பு தகடு அதிக சூட்டை ஏற்படுத்துவதால் குளிரான மலைப்பிரதேசங்கள் தவிர மற்ற இடங்களுக்கு ஏற்றதல்ல. ஆஸ்பெஸ்டாஸும் ஓரளவு சூடுதான். தவிர்ப்பது நல்லது. அதைத்தான் பயன்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை இருந்தால் கூரையின் உயரத்தை ஒரு மீட்டர் அதிகமாக்கிக் கொள்ளவும். உங்கள் பகுதியில் தென்னங்கீற்றோ, பனை ஒலையோ கிடைக்குமானால் அதுதான் சிறந்தது. ஆனால், சில வருடங்களுக்கு ஒரு முறை பராமரிக்க வேண்டும். விழல், கரும்பு சோகை, ஈச்சம்புல் இவற்றில் எது உங்கள் பகுதியில் கிடைத்தாலும் அதை ஓலை மேல் வேய்ந்தால் ஓலை இன்னும் சில ஆண்டுகள் சேர்ந்து உழைக்கும். ஓடுகளைத் தாங்க இரும்புச் சட்டமோ அல்லது மர ரீப்பர்களையோ பயன்படுத்தலாம். ஓலைக்கூரையாக இருந்தால் சவுக்கு அல்லது மூங்கில் கொண்டு உருவாக்கினால் போதும். இந்த இரும்புச் சட்டமோ, மர ரீப்பரோ, மூங்கிலோ, சவுக்கோ எதுவானாலும் அதைத் தாங்க தூண்கள் வேண்டும். மேலே நாம் ஏற்றப்போகும் பளுவிற்கு ஏற்றவாறும் எது எளிதாக கிடைக்கும் என்பதைப் பொறுத்தும் தூணை செங்கல், கருங்கல், கம்பியிட்ட கான்கிரீட் போன்றவற்றால் அமைக்கலாம். சிறிய கொட்டகையாக இருந்தால் கல்தூண், தயார் நிலையில் விற்கப்படும் கான்கிரீட் தூண்கள்(Readymade Concrete Pillars), கிடைக்குமானால் மரத் தூண்கள், மூங்கில் அல்லது சவுக்கால் உருவாக்கிய தூண்கள் இவற்றில் எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். மரத்தால் ஆன தூண்கள் பயன்படுத்தும் போது அவற்றில் கரையான் அரிக்காமல் இருக்க, வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கட்டாயம் செய்யவும். தூண்களின் மேல் தான் கூரை நிற்கும் என்பதால் அதன் வலுவை பாதுகாப்பது அவசியம். மேலும் கூரை தூண்களை விட வெளியில் இரண்டு அடிகளாவது நீண்டு இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும். பலத்த மழையின் போது சாரல் வராமல் இது பாதுகாக்கும்.

தரை அமைப்பில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டியது - வழுவழுப்பான தரை மாடுகளுக்கு வழுக்கும். சாணி கோமியம் போன்றவையும் அதிலேயே விழும் என்பதால் சறுக்க அதிக வாய்ப்பு உண்டு. மாடுகள் சினையாக இருக்கும் போது வழுக்கி விழுந்தால் இரு உயிர்களுக்குமே ஆபத்து வர வாய்ப்பு உண்டு. எனவே, எச்சரிக்கை அவசியம். தரை நன்றாக சொரசொரப்பாக இருக்க வேண்டியது முக்கியம். சிமெண்ட் தரை அமைப்பதானால் கொரகொரப்பான கலவையாக இட்டு பால் ஆற்றாமல் விட்டு விடவும். கருங்கற்களால் ஆன பலகைக் கற்களை பதித்தும் தரை அமைக்கலாம். மண் தரையாகவும் விடலாம். ஆனால், மண் தரையை தண்ணீர் ஊற்றி கழுவ இயலாது. மேலும், மாட்டின் கோமியம் அதிலேயே ஊறிவிடும். தவிர்ப்பது நல்லது. எந்த தரை அமைத்தாலும் மாட்டின் தலையிலிருந்து கால் வாக்கில் சாய்வாக இருக்குமாறு அமைப்பது கோமியம் தேங்காமல் ஓட வழி வகுக்கும். பத்து அடி அகலத்திற்கு கால் அடியாவது சாய்வு இருக்க வேண்டும். பெரிய கொட்டகைகளில் சாய்வின் ஓரத்தில் நீண்ட கால்வாய் போன்ற வடிகால் அமைப்பை ஏற்படுத்தி கோமியத்தை சேகரிக்கலாம்.

குளிர்ந்த காற்றை, சாரலை தடுக்க சுற்றுச் சுவர் அவசியம். உடனே நமது வீடுகளுக்கு இருப்பது போல் உயரமான சுவர்களை எழுப்பி, சாளரங்களை மட்டும் வைத்து, வரும் காற்றை அடைத்து விட வேண்டாம். எல்லா பருவத்திற்கும் உகந்ததாக சுவர் இருக்க வேண்டுமானால் கூரைக்கும் சுவருக்கும் இடையில் இடைவெளி இருப்பது அவசியம். மாடுகளின் சாணி, கோமியம் ஆகியவை இருப்பதால் இடைவெளி இரண்டு அடிகளாவது இருப்பது சிறந்தது. பொதுவாக சுற்றுச் சுவர் மூன்று அல்லது நான்கு அடிகளுக்கு மேல் இருக்க வேண்டாம். சுற்றுச் சுவரையும் நாம் செங்கல், கருங்கல், ஹாலோ பிளாக் போன்றவற்றால் அமைக்கலாம். சிறிய கொட்டகையாக இருந்தால் கூரைக்கு உபயோகித்த பொருட்களான தென்னங்கீற்று, பனை ஓலை, துத்தநாகம் தடவிய இரும்பு தகடு, மூங்கில் படல், பிரம்பு படல் போன்ற எந்த விதமான தட்டிகளாலும் அமைக்கலாம்.

தீவனத்தொட்டியை செங்கல்லால் அமைத்து சிமெண்ட்டால் பூசிவிடலாம். கருங்கல் பலகைகளை அதன் அடியில் பதிப்பது சிறந்தது. தீவனம் சாப்பிடும் போது மாடுகளின் நாக்கு கருங்கல்லில் உராய்வது நல்லது. இதனால் மாடுகளுக்கு நாவரி (இது எங்கள் பகுதியில் வழங்கும் பெயர்… மற்ற இடங்களில் வேறு பெயர்களும் வழங்கலாம்) - நாக்கில் முள் போன்ற அமைப்பு பெரிதாவது - வராமல் இயற்கையாக தடுக்கலாம். தீவனத்தொட்டி அதிக உயரமாக இருந்தால் மாடுகள் சாப்பிட கடினமாக இருக்கும். உயரம் குறைவாக இருந்தால் மாடுகள் உள்ளே காலை வைக்கும். எனவே, தொட்டியின் உயரம் இரண்டு அடி இருக்குமாறு அமைக்கலாம். இந்த தொட்டியின் நடுப்பகுதியில் ஓர் இரும்பு வளையத்தை பதித்து வைத்தால் மாடுகளை கட்ட உதவும். சிறிய பண்ணைகளானால் தயார் நிலையில் இருக்கும் சிமெண்ட் தொட்டிகளை பயன்படுத்தலாம். மாடுகளைக் கட்ட முளைக் குச்சிகளையோ அல்லது பழைய டயர்களையோ கூட உபயோகிக்கலாம்.

கொட்டகையில் நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும் இருப்பது மாடுகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். கொட்டகை அமையும் இடத்தைச் சுற்றி புதர்கள் மண்டவோ, குப்பைகள் சேரவோ விட வேண்டாம். அப்படி விட்டு விட்டால் விஷப் பூச்சி பொட்டுகள் அண்டி மாடுகளுக்கு தொல்லை கொடுக்கும். எனவே, கொட்டகையை எவ்வாறு சுத்தமாக பராமரிக்க வேண்டுமோ அதே அளவிற்கு அதன் சுற்றுப் புறத்தையும் சுத்தமாக வைத்திருப்பது இன்றியமையாதது. கொட்டகையை சுற்றி புல் தரை இருக்குமாறு பராமரித்தால் மிகவும் நல்லது.

“வீட்டைக் கட்டிப் பார்… கல்யாணம் பண்ணிப் பார்…” என்பது நம்மூர் பழ மொழி. கல்யாணம் செய்வதில் பல வேலைகள் இருந்தாலும், சாப்பாடு நன்றாக, திருப்தியாக இருக்க வேண்டும் என்பதே எல்லா கல்யாண வீட்டாருக்கும் கவலையாக இருக்கும். கொட்டகை அமைத்தாகி விட்டது. இனி மாடுகளின் உணவுத்தேவையை எவ்வாறு பூர்த்தி செய்வது என்று அடுத்த இதழில் காண்போம்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org