தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

அடிசில் பார்வை - அனந்து


சென்ற மாத‌ம் எண்ணையை பற்றிப் பார்த்தோம். செக்குகள் எப்படி அழிக்கப்பட்டன என்றும் இன்றைய ரீஃபைன்டு மோகத்தின் ஆணி வேரையும் அதன் கேடுகளையும் படித்தோம். அதில் கலப்படம் என்பது லேபிலிங் சட்டத்தின் மூலம் எப்படி இயந்திரமய உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தையே மேம்படுத்துவதாக உள்ளது என்பதையும் பார்த்தோம். ப்லென்டிங் (blending) என்ற பெயரில் பாம் ஆயிலும், பருத்தி கொட்டை எண்ணயுமே மிகவும் அதிகமாக நம்மை வந்தடைகின்றன. கடந்த சில ஆண்டுகளாக கச்சா எண்ணையை அடுத்துப் பனை எண்ணையே மிக அதிகமாக இறக்குமதி செய்யப்படுகிறது! சென்ற ஆண்டின் (20012-13) மொத்த பனை எண்ணை இறக்குமதி 87 லட்சம் டன்கள் என்கிறது ஒரு அரசாங்க ஆவணம். 80களில் ஒரு லட்சம் முதல் 5 லட்சம் டன்கள் வரை இருந்த இறக்குமதி 90களில் 13 முதல் 20 லட்ச‌ங்களுக்கு சென்றது. பனை எண்ணையை மிகவும் அதிகமாக உபயோகிக்கும் கம்பனி பெப்ஸிகோ ஆகும்! எதற்கு? எல்லாம் நாம் ரசித்து ருசிக்கும் லேஸ்,குர்குரே போன்ற பொரித்த உணவுகளுக்குத்தான்!

சமீபத்தில் பிஹாரில் மத்திய உணவு கிடங்கில் நடந்த துயர விபத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. மோனோக்ரோடொபாஸ் என்னும் கொடிய விஷ பூச்சிக்கொல்லி வைத்திருந்த குடுவையில் பின்னர் சமையல் எண்ணையை வைத்திருந்து சமைத்ததால் என்றும் கூறுகின்றனர். நான் கேள்வி பட்டது: அந்த பகுதிகளில், ரீஃபைன்டு எண்ணைகளில், அந்த எண்ணை நீண்ட நாள் கெடாமல் இருப்பதற்கு இந்த மோனோக்ரோடொபாஸ் என்னும் கொடிய விஷத்தை சிறிய அளவில் சேர்க்கின்றனர். அன்று உபயோகித்த எண்ணையில் இந்த கொடிய விஷம் மிக அதிகமாக சேர்க்கப்பட்டு அதனால் இந்த பாதிப்பு இருந்திருக்கலாம் என்றும் சிலர் கூறுகின்ற‌னர்!

எண்ணையை பற்றி பேசும் போது தேங்காய் எண்ணையை பற்றி பேசாமல் இருக்கமுடியாது. கொழுப்பு அது இது என்று கிளப்பி விட்டு அதனை அழித்த தொழில்துறை நிறுவனங்கள், பின்னர் அதில் தங்கள் லாப வெறி ஆட்டத்தை காண்பித்தனர்! மினரல் ஆயில் (பாராஃபின்) என்ற பெட்ரோலிய கழிவுடன் தேங்காய் எண்ணை, பெரிய அளவில் எண்ணை கம்பனிக்களால் கலப்படம் செய்யப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) இந்த பெட்ரோலிய கழிவான மினெரல் எண்ணையை புற்று நோய்க் காரணியாக அறிவித்துள்ளது. அதனால் தானோ என்னவோ தேங்காய் எண்ணையின் விலை பெட்ரோல்/கச்சா எண்ணை விலை ஏறும் பொழுதுதான் ஏறுகிறது!

கூந்தல் எண்ணெய் முதல் குழந்தைகள் சோப்பு மற்றும் ஹெர்பல் என்று விளம்பரபடுத்தும் பல அழகு சாதனங்களும் இந்த மினெரல் ஆயில் என்னும் கொடிய பொருளை சகஜமாக உபயோகிக்கப்படுகிறது. லாப வெறியும் உயிர் பலிகளும்!!

பல வழிகளிலும் வியாபாரம் என்ப‌து நம் ஆரோக்கியத்தை பற்றி கவலை இல்லாமல் விளையாடும். உதாரணத்திற்கு, நமது நாட்டில் இன்னும் மரபீனி மாற்ற விதைகளுக்கு உணவிலும் விளைவிப்பதற்கும் அனுமதி இல்லை. பருத்தி மட்டும் உணவு அல்லாத (non-food) என்னும் பிரிவில் பின்கதவு வழியாக அனுமதிக்கப்பட்டது.(ஆனால் பருத்திக்கொட்டை எண்ணை சமயல் எண்ணையில் கலக்கப் படலாமா? ) இருப்பினும் பல இறக்குமதி செய்யப்படும் சிப்ஸ் மற்றும் பல பதப்படுத்தப்பட்ட பொருட்களில் இந்த மரபீனி மாற்றப்பட்ட பொருட்கள் இருப்பதற்கு சாத்தியகூறு அதிகம். உதாரணத்திற்கு கானடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வந்த சிப்ஸ், சோள பொரி பதார்த்தங்கள், எல்லாம் மரபீனி மாற்றப்பட்ட வித்துகளிலிருந்து செய்யப்பட்டவையாகவே இருக்கும் ஏனென்றால் இந்த நாடுகளில் கனோலா (எண்ணை வித்து), சோயா, சோளம், பருத்தி முதலியன 90% கும் மேல் மரபீனி மாற்றப்பட்டவை. இவைகளே பொறிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட பொருட்களில் பெரும்பான்மையாக உபயோகிக்கப்படும் எண்ணை.

இதனை ஒரு முறை 80 வயது இளைஞரான தேசிகன் (இந்திய‌ நுகர்வோர் கழகத்தின் தலைவர்) எவ்வாறு கனோலா எண்ணை மற்றும் அதில் பொறிக்கப்பட்ட பதார்த்தங்கள் நம் நாட்டினுள் வருகின்றன என்றால் அவை மரபீனி மாற்றப்பட்டதாக அல்லவா இருக்கும் என்று கொதித்து அது எப்படி இறக்குமதி செய்யப்படுகிறது என்று ஆராய்ந்தார். இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படவில்லை என்று எல்லா அரசாங்க அலுவலகங்களும் ஆவணங்களும் சொல்ல இவர் மேலும் அதிர்ந்தார். பின்னர் அமெரிக்கா அல்லது கானடாவிலிருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறதா என்றும் பார்த்தார். அதுவும் இல்லை! ஆனால் இந்தியாவினுள் ஒரு பிரபல சிகெரெட் ஐ.டி.சி ( ITC) கம்பனி தான் இந்த கனோலா எண்ணையை மிக அதிக அளவில் உபயோகிக்கிறார்கள்/விற்கிறார்கள். அப்புற‌ம் எப்படி என்று இன்னும் அருகினில் சென்று பார்த்த பொழுது தான் தொழில்துறை எப்படி வேண்டுமானாலும் வேலை செய்யும் என்பதை கண்டறிந்தார். அங்கிருந்து எண்ணை என்று சொல்லாமல், எங்கோ ஒரு தொலை தேசத்திற்கு அவை அனுப்பப்படுகின்றன. (ஃபிஜி அல்லது ஆஸ்திரேலியா-விற்கு) பின்னர் இந்த ஐ.டி.சி கம்பனி நடுக்கடலில் (பெர்சியன் கல்ஃப் )இவற்றை இந்த கப்பலை சந்தித்து அந்த வேறு பெயரில் உள்ள பொருளை வேறு ஏதோ பெயரில் நடுக்கடலில் தங்கள் கப்பலில் மாற்றி இந்தியாவிற்குள் கொண்டுவந்து “மிகச்சிறப்பான ஆரோக்கியமான எண்ணை” என்று விற்று விடுகின்றனர் அல்லது நாம் போன இதழில் பார்த்தது போல் 'கலப்படம்' செய்யப்படுகிறது. (இதே சிகரெட் கம்பனி தான் முன்பொரு முறை அமெரிக்காவின் மக்கா குப்பை- பிலாஸ்டிக் போன்றவற்றை வேறு பெயரில் இதே போல் கொண்டு வந்து இங்கு கொட்டி நம் சுற்றுச்சூழலை மாசாக்கியது என்பது வேறு கதை.)

மேலே பனை எண்ணையை மிக அதிக அளவில் உபயோகிக்கும் கம்பனி பெப்சி என்று பார்த்தோம்.

முதன் முதலில் இது சிறு அளவில் ஒரு சில இடங்களில் புதுமை என்கிற காரணத்தினால் விற்கப்பெற்றது. ஆனால் இப்படி பெரிய வியாபரமாக மாறுவதற்கு, வேறு ஒரு காரணத்தை கூறுகின்றனர்! உருளைகிழங்கிலிருந்து ஒரு உயிர் பொருளை வேறு காரணத்திற்காக (பதப்படுத்த உபடயோகிக்க) எடுத்த பின் அந்த உருளைகள் வீணாக எறியப்படுவதற்கு பதில் வேறு என்ன செய்யலாம் என்று எதையும் வியாபாரமாக்கும் 'ஜித்தர்களான' அமெரிக்க கம்பனியினர், அவற்றை சிப்ஸாக்கி காசாக்க முடிவெடுதனர். இன்று பெப்சி போன்ற 6000 கோடி வியாபாரம் உள்ள கம்பனிகளே இதில் முதலிடம்!

நீங்கள் வீட்டில் சிப்ஸ் செய்து பார்த்திருக்கிறீர்களா? எவ்வளவு சாப்பிட முடியும் உங்களால்? எத்தனை தினங்கள் அவை கெடாமல் இருக்கும்?

ஆனால் அது எப்படி இந்த காற்றடைத்த பைகளில் வரும் சிப்ஸுகள் மட்டும் வருட கணக்கில் அந்த கடைகளின் அலமாரிகளில் உறங்க முடிகிறது?

இந்த பொரிக்கப்பட்ட சிப்ஸ்கள் முதற்கண் பனை எண்ணை அல்லது அதைவிட கேடான வனஸ்பதி போன்ற கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும் எண்ணையில் தான் பொரிக்கப்படுகின்றன.

பின்னர் அவை நீண்ட நாட்கள் இருப்பில் தங்க வேண்டி சில ரசாயன கலவைகள் (preservatives) சேர்க்கப்படுகின்றன. அது மட்டும் அல்ல அக்ரிலாமைட்(acrylamide) என்னும் ஒரு கேடு விளைவிக்கும் பொருள் உயர் வெப்ப நிலைகளில் பொரிக்கப்படும் பொழுது படிகிறது. அது கேன்சர் முதல் பல கேடுகளை விளைவிக்கக்கூடிய பொருள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் கலிஃபோர்னியாவில் சிப்ஸ் பைகளின் மேல் இந்த அக்ரிலாமைட் எழுதப்பட வேண்டும் என ஒரு பொது நல வழக்கு நடை பெற்று வருகிற‌து.பொரிக்க உபயோகிக்கும் எண்ணையிலிருந்து, அதில் கலக்கப்படும் வேதி பொருட்கள், உப்பு, எல்லாமே பல கேடுகளை விளைவிப்பவை.

நாம் என்ன செய்யலாம்?

கண்ட எண்ணையில் பொரிக்கும் பழக்கத்தையும் அப்படி பொரித்தவற்றையும் உட்கொள்ளும் வழக்கத்தையும் விட்டொழிக்கலாம். உப்பு, கொழுப்பு சத்து மற்றும் மாவு சத்து - இவை மூன்றையும் அதிகமாக கொண்ட இந்த சிப்சை சாப்பிடுவதை நிறுத்தலாம் அல்லது உறுதியாக‌ குறைக்கலாம். குறைத்தால், ரத்த கொதிப்பு, நீரிழிவு மற்றும் இதய நோய் போன்றவற்றிலிருந்து கொஞ்சம் தப்பிக்கலாம். அதன் இடர்களை குறைக்கலாம்.

இதைப்பற்றி எல்லோரிடமும் நிறையப் பேசலாம். பாதுகாப்பான உணவு என்பது நம்மைச் சந்தைக் குப்பைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்வதுதான் என்ற விழிப்புணர்வை நாமும் பெற்று, நம் உறவினர் நண்பர்களுக்கும் எடுத்துரைக்கலாம். பகுத்துண்பதை வள்ளுவர் பாராட்டுகிறார்; உண்பதைப் பற்றிப் பகிர்ந்து கொள்வதும் தற்காலத்தில் உயிர் ஓம்புதலுக்குச் சமம்தான்!

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org