தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

வானத்துப் பறவைகளைப் பாருங்கள் - சகி


கொண்டலாத்தி

இந்த மாதம் நாம் காணும் பறவை, Hoopoe என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் கொண்டலாத்தி. இதன் அறிவியற் பெயர் - Upupa Epops! இப்பறவை ஆப்பிரிக்கா, ஐரோப்பியா மற்றும் ஆசியக் கண்டங்களில் தென்படும்.

தோற்றம்

இதன் தலையில் கிரீடம் போன்ற விசிறி போன்ற சிறகு அமைப்பு உள்ளதால் இதனை எளிதில் இனங்கண்டு கொள்ளலாம். ப‌ழுப்பு நிற உடலும், பளிச்சென்ற கருப்பு,வெள்ளை இறகுகளும், கூரான, கீழ் நோக்கி வளைந்த அலகும் இதன் சிறப்புத் தோற்றம். அளவு - 25 முதல் 32 செ.மீ வரை. கூரான அலகு நீளமாய் இருப்பதால் பூமிக்குள் ஒளிந்திருக்கும் புழு, பூச்சிகளைத் துளைத்துத் துழாவி உண்ணும்.

காணும் இடம்

வயல், திறந்த வெளி மற்றும் காடுகளில் இவற்றைக் காணலாம்.வயல்களில் பூச்சித் தாக்குதல் ஏற்படும்போது இவை அவற்றை வேட்டையாடிப் பயிர்களைக் காக்கும். உழவனின் நண்பன் என்றால் பொருந்தும்.

இனப்பெருக்கம்

மரத்தில் துளையிட்டுக் கூடு கட்டும் (ஆனால் இது மரங்கொத்தியல்ல. முன்னர் தாளாண்மையில் கவிதைப் பக்கத்தில் மரங்கொத்திக்குத் தவறுதலாக இதன் படம் அச்சு ஆகியது!) ஆண் பறவைகள், பெண்களை அதன் குரல் மூலம் அழைக்கும். பெண்கள்தான் அடை காத்துக் குஞ்சு பொரிக்கும். 3 முதல் 4 முட்டைகள் இடும். முட்டை நீல நிறத்தில் இருக்கும். 9 முதல் 14 நாட்களில் குஞ்சு பொரித்து விடும். பெண்பறவைகள், தன் குஞ்சுகளை எதிரிகளிடமிருந்து காக்க ஒரு வித அமிலம் கலந்த உமிழ்நீரைத் துப்பும். அழுகிய வாடையுடன், பிசுபிசுப்பாய் இது இருப்பதால் எதிரிகள் விலகி விடும்.

சிறப்புக் குறிப்புகள்

1. இது இசுரேல் நாட்டின் தேசியப் பறவை
2. ப‌ஞ்சாபின் மாநிலப் பறவை
3. ஜோஃகன்னஸ்பர்க் பல்கலைக் கழகத்தின் சின்னம்
4. பாரசீக நாட்டில் புண்ணியத்தின் சின்னமாகக் கருதப் படுகிறது
5. புராதான எகிப்தில் புனிதமான பறவையாகக் கருதப்பட்டது
6. குரானிலும், விவிலியத்திலும் புனிதமான பறவை என்று குறிப்பிடப் பட்டுள்ளது

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org