தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

உணவும் உரிமையும் - 4 - சரா


ஒரு நாடு தன் குடிமக்களின் உணவுப் பழக்கங்களைக் கட்டுபடுத்துவதன் மூலமாக அவர்களது உரிமையை தடைசெய்வதையும், தனியார் நிறுவனங்களின் லாபத்திற்காக உழவிலும், விதைகளிலும் மாறுதல்களை எவ்வாறு செய்கின்றது என்று கடந்த மூன்று கட்டுரைகளில் பார்த்தோம்.

இவற்றைப் பெரும்பாலும் தொழில்நுட்பத்தின் உதவியைக் கொண்டு, பெரும் நிறுவனங்கள் நிலை நாட்டியதையும் பார்த்தோம். இந்த தொழில்நுட்ப உத்திகள் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறவில்லை என்கின்றபோழுது, அவற்றை யாரும் குறை சொல்லவோ, கேள்வி எழுப்பவோ இயலாதவாறு சட்டங்களைத் திருத்தியும், வேக‌மாகவும், தீவிரமாகவும் அத்தகைய சட்டங்களை செயல்படுத்தியும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன.

இந்த சித்தாந்தத்தின் கீழ் அமையும் / ஏற்படுத்தப்படும் பொருளாதார முறைகளின் மிகப்பெரிய எதிரி, தற்சார்பு! எங்கெல்லாம் தற்சார்புடன் விவசாயம் தழைக்கின்றதோ, அங்கெல்லாம் இத்தகைய நிறுவனங்களின் ஆதிக்கம் செயல்பட வாய்ப்புக் குறைகிறது. உலகில் விளையும் உணவு வகைகளின் பெரும்பாலானவை வெப்ப வலயத்தில் அமைந்துள்ள நாடுகளில் (tropical countries) விளைபவை என்பது அனைவரும் அறிந்ததே. உணவு வகைகளின் தற்சார்பு விகிதங்களை (அதாவது எவ்வளவு சதம் உள்நாட்டு உணவுகளை உட்கொள்கிறோம்) பார்த்தால்:

  • மிதவெப்ப‌ வலய நாடுகள் (temperate countries) - 6.4%
  • ஆப்பிரிக்க நாடுகள் - 12.3%
  • தென் அமெரிக்க நாடுகள் - 52.2%
  • இந்தியா முதலான ஆசிய நாடுகள் - 56.8%

என்று ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. அதனால் தானோ என்னவோ, இத்தகைய குறுகலான மனப்பான்மை கொண்ட நிறுவனங்கள் அனைத்தும் மிதவெப்ப‌ வலய நாடுகளைச் (வட அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா) சேர்ந்ததாகவே உள்ளன! அவற்றின் ஆதிக்கமும் அங்கு அதிக அளவில் உள்ளது. நமது நாட்டில் ஒரு பொருள் விளைவதற்கான தற்சார்பு இருக்கின்றது என்றால், அந்த வகையான உணவிற்கு தேவையான தட்பவெட்ப நிலை மட்டுமின்றி, பரவலான விதை ரகங்களும் (சென்ற கட்டுரையில் இது குறித்து எழுதியிருந்தேன்), நல்ல தரமும், அந்த பயிரை குறித்த விவசாயிகள் மத்தியில் அறிவும், நிச்சயமாக அங்கு தொடர்ந்து அந்த பயிர் செய்ய இசைவாக அமைந்துள்ளது என்று அறியலாம்.

உணவிலும், விதைகளிலும் உரிமை கொண்டாடும் பழக்கம்,மிதவெப்ப‌ வலய நாடுகளில் மிக பழமையான‌ ஒரு கலாசாரம் என்றே சொல்லலாம். கி.மு.7 ஆம் நூற்றாண்டில், சில சமூகங்களில், புதிதாக தாங்கள் கண்டு பிடித்த உணவு தயாரிக்கும் முறைவகைகளை ஒரு வருடம் வரை தயாரிப்பதற்கு காப்புரிமை சமையல்காரர்களுக்கு வழங்கபட்ட்து. ரோமானிய அரசர் மீன்களின் வகைகளை கொண்டு காப்புரிமை முயற்சியை எதிர்த்ததாக படிக்கின்றோம்.

பிற்காலத்தில் மிதவெப்ப‌ வலய நாடுகள் தங்களின் ஆதிக்கத்தை இதர நாடுகளுக்குப் பெருக்குகின்ற‌ பொழுது, எந்த அளவிற்கு தங்கம் மற்றும் இதர தாதுக்களை கொள்ளை அடித்தார்களோ, அதே அளவிற்கு விதைகளின் கடத்தலும் நடைபெற்றதாக வரலாறு கூறுகின்றது. இவற்றில் லாபம் ஈட்டுவதற்காக இவர்கள் ஏற்படுத்திய முக்கியமான முயற்சிகளில் ஒன்று தான், “தனிப்பயிர்த் தோட்டங்கள் (Plantation)”.

ஆங்கிலேயே ஆதிக்கத்தின் வளர்ச்சியைக் குறித்து எழுதியுள்ள கென்னெத் லேம்மொன் என்கின்ற வரலாற்று ஆசிரியர், வளர்ச்சியின் முக்கியமான கட்டங்கள் அனைத்தும் அவர்கள் இயற்கை பொருட்களின் ஆளுமையை விரிவாக்குவதாகவே கூறுகின்றார். இதர ஐரோப்ப நாடுகளும் பின்தங்கவில்லை. இவர்களும் இதே கொள்ளை அடித்துள்ளனர்!

1. எங்கெல்லாம் தாவரங்களின் பன்மையம் அதிகம் உள்ளதோ, அவற்றை, அவற்றின் பயன்களை, உள்ளூர் ஆட்களை கொண்டு ஆழமாகவும், விரிவாகவும் குறிப்புகள் எடுத்துக் கொண்டனர்.

2. இத்தகைய தாவரங்களில் இவற்றிற்கெல்லாம் அதிக அளவில் லாபமீட்ட இயலுமோ, அவற்றை 'தனிப்பயிர்த் தோட்டங்கள்' அமைத்து பெரிய அளவில் தங்களின் கட்டுபாட்டிற்குள்

எடுத்துவந்தனர்

3. இத்தகைய பொருளாதாரத்திற்கு ஏற்றவாறு, தங்களது ஆட்சி முறையும், ஆதிக்கத்தையும், முக்கியமாக மற்றவர்களின் உரிமைகளையும், வன்முறையுடன் மாற்றி

அமைத்துகொண்டனர்

இதற்கு உதாரணமாக, டச்சு ஆட்சியாளர்கள் தங்கள் ஆட்சியின் கீழ் உள்ள மொலக்கா தீவில், தங்களால் பாதுகாக்க முடியாத முக்கால் வாசி நிலத்தில் இருந்த லவங்கம் மற்றும் பட்டை மரங்களை வேரோடு அழித்தனர். பிரெஞ்சு காரர்களோ, தாங்கள் கொள்ளை அடித்த ஆன்டிகுவா தீவில் 'தனிப்பயிர்த் தோட்டத்தில்' வளர்த்து வந்த 'இண்டிகோ' செடிகளை யாரேனும் சிறு கன்றை எடுத்து செல்ல முயற்சித்தால், அவர்களை கொடூரமான சிரச்சேதம் செய்து மரண தண்டனை விதித்தார்கள். 'விஞ்ஞானம் மற்றும் மேற்கத்திய ஆதிக்க வளர்ச்சி' (Science & Colonial Expansion) என்கின்ற புத்தகத்தில் லூசில் ப்ரோக்க்வே என்கின்ற அறிஞர் எப்படி இந்த தோட்டங்களை அமைத்து ஆதிக்கத்தை அதிகரித்தனர் என்று கூறியுள்ளார்.

இப்படி பல நூற்றாண்டுகளாக விதைகளை திருடியும் அதன் மேல் ஆட்சி செய்ய முயற்சியும் மேற்கொண்டு வரும் இந்த நாட்டு பெருநிறுவனங்கள் அளிக்கும் சிறு சலுகைகளில் இன்னமும் மயங்கி அவர்களுடன் தொழில் செய்ய முனையும் நம் நாட்டவர்களை என்ன சொல்வது?

இன்னமும் தெரிந்து கொள்வோம்…

 

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org