தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

ஆழ்ந்தகன்ற நுண்ணியர்கள் - பரிதி


வரைமுறையற்ற பன்முக நுகர்வு, அதைத் தூண்டும் முதலீட்டியம் ('முதலாளித்துவம்'), இவற்றின் விளைவான சூழல் மாசு, அதன் விளைவாகப் புவி சூடேறுதல், அதனால் பருவ நிலை தாறுமாறாக மாறுதல் ஆகியன ஒரு புறம். மறுபுறம் முதலீட்டியத்திற்குத் தொண்டு செய்வதற்கென்றே உள்ள ஆட்சியாளர்களின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் காரணமாகக் கரும்பு முதலிய நீர்த் தேவை மிக்க பயிர்களைப் பயிரிட வேண்டிய கட்டாயத்துக்குள் உழவர்கள் வாழ்தல். இச்செயல்கள் நம் பூமித் தாயின் வற்றாத ஊற்றுகளைக் கடந்த சில பத்தாண்டுகளில் வற்றச் செய்துவிட்டன. இந்தக் கொடுஞ்செயலில் தம்மை அறியாமல் ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒரு தொழில்துறையைச் சார்ந்தோரைக் குறித்த கட்டுரை இது. இக்கட்டுரை இந்து ஆங்கில நாளேட்டின் 2013 சூலை 28 பதிப்பில் திரு பா. சாய்நாத் எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் மொழியாக்கம். [மொழிபெயர்ப்பாளர் குறிப்புகள் பகர அடைப்புகளில் உள்ளன.] மொழிபெயர்ப்பாளர்: பரிதி (thiru.ramakrishnan@gmail.com) 2044 கடகம் (ஆடி) 16 / 2013 ஆகத்து 01

முழு இந்தியாவுடன் இவ்வளவு ஆழமான உறவு கொண்டுள்ள நகரம் வேறு எதுவும் இருக்கமுடியாது. அந்தப் பெருமை தமிழகத்தின் இந்தச் சிறு நகரத்திற்கே உரியது. இங்கிருந்து சென்ற இயந்திரங்கள் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களிலும் பல ஆப்ரிக்க நாடுகளிலும் மிக ஆழமாக ஊடுருவியுள்ளன. திருச்செங்கோடு தான் இந்தியாவின் ஆழ்துளைக் கிணற்றுத் தலைநகரம். இங்கிருந்து நாடெங்கும் பரவிச் செல்லும் ஆயிரக் கணக்கான துளைப்பான்களும் பணியாட்களும் ஆண்டின் பெரும்பாலான நாள்களில் துளைப்பான் ஒன்றுக்கு அன்றாடம் 1400 அடி ஆழம் வரை தோண்டுகின்றனர். அவை மகாராட்டிரம் முதலிய மாநிலங்களில் அண்மை ஆண்டுகளில் பரந்த அளவில் தொழில் செய்கின்றன. இப்போது அப்பகுதியில் பருவ மழை தொடங்கிவிட்டதால் தொழில் தற்காலிகமாக மந்தமடைந்துள்ளது. ஆனால், நாட்டின் வேறு பல பகுதிகளில் இன்னும் அவை நிலத்தடி நீருக்காகப் புவியைக் குடைந்துகொண்டுதான் உள்ளன. மகாராட்டிரத்தின் கடுமையான தண்ணீர்ப் பற்றாக்குறை வெயில் காலங்களில் மட்டும் பேசுபொருளாகிறது.

இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் அம்மாநிலத்தின் மராத்வாடா பகுதியில் மட்டும் பல்லாயிரக்கணக்கான ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்பட்டன. சரக்குந்து மீது இணைக்கப்பட்ட துளைப்பான்கள் அங்கிங்கெனாதபடி எங்கும் காட்சியளித்தன. ஊரக மாவட்டங்களில் அவ்வியந்திரங்கள் நீரைக் கொணர்ந்தனவோ இல்லையோ கடன்களை உண்டாக்கின. இங்கு சாலைகளில் பெருத்த ஒலியுடன் ஊர்ந்து சென்ற துளைப்பான்களில் பெரும்பாலானவை தமிழ் நாட்டில் இருந்து வந்தவை. (ஆந்திரத்தில் இருந்தும் சில வந்திருந்தன.) “அவற்றில் பெரும்பாலானவை ஒரே தமிழக நகரில் இருந்து வந்திருக்கும்போலத் தெரிகின்றது” என்றார் மராட்டிய அரசின் மூத்த நிலவியலாளர் ஒருவர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திருச்செங்கோடு தான் அந்த நகரம்.

“மகாராட்டிர மாநிலம் நான்டெட் நகருக்கருகில் ஒரு சிற்றூரில் இந்த ஆண்டு நான்கு மாதங்கள் தங்கியிருந்தேன்” என்கிறார் திருச்செங்கோடு சிறீ பாலமுருகன் போர்வெல்சு நிறுவனத்தின் சி. வையாபுரி. அவர் ஒரு துடிப்பான கடும் உழைப்பாளி. நான்கு மாதங்களில் அவரும் அவருடைய குழுவும் சுமார் ஐந்நூறு ஆழ்துளைக் கிணறுகளைத் தோண்டினர். அவற்றில் பெரும்பாலனவை வறட்சிப் பகுதியான மராத்வாடாவில் உள்ளன. தன் தொழில் குறித்து அவர் கூறுகிறார்: “மண் 'இறுக்கமாக இல்லாமல்' எளிதாகத் துளைக்கக் கூடிய பகுதிகளில் நாளொன்றுக்கு 1300 அடி ஆழம் வரை துளைக்கலாம். ஒவ்வொரு துளையும் 300 அடி ஆழம் என்றால் ஒரு நாளில் நான்கு ஆழ்துளைக் கிணறுகள் தோண்டலாம். 'இறுகிய பாறைப் பகுதிகளில்; நாளொன்றுக்கு ஆயிரம் அடியைத் தாண்ட முடியாது.” சரக்குந்து மீது மாட்டப்பட்ட ஒவ்வொரு துளைப்பானுடனும் இன்னொரு பெரிய ஊர்தி செல்கிறது. அதில் இயந்திரங்களும் வேலையாட்களும் ஏற்றிச் செல்லப்படுகின்றனர். ஒரு குழுவில் ஒரு மேலாளர், துளைப்போர் இருவர், இரு உதவியாளர்கள், இரண்டு ஓட்டுனர்கள், சமையல்காரர் ஒருவர், 12 உடலுழைப்புத் தொழிலாளர்கள் என இருபது பேர் வரை இருப்பர். திருச்செங்கோட்டுக்கு அனைத்திந்தியாவுடனான தொர்பு துளையிடுவதில் மட்டும் நின்றுவிடவில்லை. அந்நகர நிறுவனங்களின் பணியாளர்கள் நாட்டின் பல மாநிலங்களில் இருந்து வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் திருச்செங்கோடு தொழிலதிபர்களின் முகவர்களும் தரகர்களும் உள்ளனர்.

ஒரு சில தொழிலாளர்களே தமிழர்கள். பிகார், ஒடிசா, சார்க்கண்ட், சட்டிசுகாட் மாநிலங்களில் இருந்து வந்தவர்களே பெரும்பான்மையினர். தொழிலாளிகளுக்கு மூன்று வேளை உணவும் இருநூறு ரூபாய் கூலியும் தரப்படுகிறது. ஆண்டின் பெரும்பாலான மாதங்களில் அவர்களுக்கு வேலை இருக்கும். துளையிடும் பணி கடினமானது. வருமானமும் அதைப் பொருத்து அமைகிறது. ஆந்திர மாநிலத்தில் சில பகுதிகளில் தரை மிகக் கடினமாக இறுகியிருக்கும். அப்பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் என்பது அடி ஆழத்திற்கு மேல் தோண்ட முடியாது. அங்கு அடிக்கு 75 ரூபாய் கிடைக்கும். ஒரு நாளில் ஆயிரம் அடி தோண்டினால் 75,000 ரூபாய் கிடைக்கும். இளக்கமான மண் இருக்கும் பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 120 அடி ஆழம் வரை தோண்டலாம் என்கிறார் வையாபுரி. அப்படிப்பட்ட பகுதிகளில் ஓர் அடிக்கு 56 ரூபாய் வரை கிடைக்கும். ஆனால் அங்கு நாளொன்றுக்கு 1300 அடி வரை தோண்டலாம் என்பதால் சுமார் 73,000 ரூபாய் வரை சம்பாதிக்கலாம். ஆண்டில் 200 நாள்கள் வேலை செய்தாலுங்கூட (வழக்கமாக இதைவிட மிக அதிக நாள்கள் வேலை இருக்கும்) சுமார் ஒன்றரைக் கோடி ரூபாய் ஈட்ட முடியும். திருச்செங்கோடு நகரிலும் வட்டத்திலும் மொத்தம் எவ்வளவு துளைப்பான்கள் இருக்கும்? அங்குள்ள பெரிய துளை நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் பரந்தாமன் 5000 வண்டிகள் இருக்கும் என்கிறார். திருச்செங்கோடு சரக்குந்து உரிமையாளர் சங்கத் தலைவரும் துளைப்பான்கள் உரிமையாளருமான வேலு-வைப் பொருத்தவரை 7,000 வண்டிகள் இருக்கலாம்.

20,000 வண்டிகள் இருக்கக்கூடும் என்கின்றனர் வேறு சில துளைப்பான் உரிமையாளர்கள். வெவ்வேறு மட்டங்களில் இம்மூன்று கணிப்புகளுமே சரியானவையாக இருக்கலாம். “இப்பகுதியைச் சேர்ந்த பல உரிமையாளர்களுடைய துளைப்பான்கள் பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டவை; ஒரு வேளை வரி தொடர்பான காரணங்களுக்காக அப்படியிருக்கலாம்” என்கிறார் இத்தொழிலில் பட்டாங்கு ('அனுபவம்') மிக்கவர் ஒருவர். தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததைத் தொடர்ந்து துளைப்பான்கள் ராசத்தான் மாநில ஊரகப் பகுதிகள் உள்ளிட்ட வெகு தொலைவான இடங்களில் இருந்து திரும்பி வந்துகொண்டுள்ளன. ஒரு வண்டி சம்மு-வில் துளையிட்டுவிட்டுத் திரும்பியுள்ளது! பருவ மழை தொடங்கியபின் இந்த 2-3 மாத காலத்தை வண்டிகளைப் புதுப்பிப்பதற்குப் பயன்படுத்திக்கொள்கின்றனர். ஆழ்துளைக் கிணறுகளின் சராசரி ஆழம் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடுகிறது என்கிறார் வேலு. “கர்நாடகத்தில் இப்போது சராசரி 1400 அடி வரை போய்விட்டது. தமிழகத்திலும் ஏறக்குறைய இதே நிலைமைதான். 1970-களில் வந்த வறட்சி இதன் தொடக்கப்புள்ளி.” இதில் வணிக வாய்ப்பு இருப்பதை உணர்ந்துகொண்ட உழவர் - தொழிலாளர் குழுவினர் துளையிடும் பணியில் இறங்கினர். பலர் குழுக்களாக இணைந்து துளைப்பான்களை வாங்கினார்கள். (இப்போதுங்கூட மூன்றிலொரு பங்கு துளைப்பான்கள் அத்தகைய குழுக்களுக்குச் சொந்தமானவையே.) “அந்தக் காலத்தில் 100-200 அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைத்தது. அதிகப்படி 300 அடி. கடந்த ஐந்தாண்டுகளில்தான் குழிகளின் ஆழம் மிக அதிகமாகிவிட்டது” என்கிறார் வேலு.

இந்நகரிலுள்ள துளைப்பான் உரிமையாளர்களின் வாழ்க்கைக் கதை ஒரு கடும் கவர்நிலையை (விரும்பாத வழிகளுள் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவேண்டிய நிலை - dilemma) முன்வைக்கிறது. அவர்கள் திருச்செங்கோடு நகருக்கும் அதைச் சுற்றிலுமுள்ள பகுதிகளுக்கும் வேலை வாய்ப்புகளையும் வளத்தையும் கொண்டுவந்துள்ளார்கள் என்பதில் ஐயமில்லை. ஒரு காலத்தில் படிப்பறிவில்லாது கூலி வேலைக்குப் போய்க்கொண்டிருந்தவர்கள் 1970-களில் ஒன்றாகச் சேர்ந்து துளைப்பான்களை வாங்கித் தம்மை ஏழ்மையில் இருந்து விடுவித்துக்கொண்டவர்களும் உளர். (பரம்பரைப் பணக்காரர்களாக இல்லாமல் தம் தொழில்திறமையால் முன்னுக்கு வந்த பலர் இப்பகுதியில் வாழ்கின்றனர். கோவை, கரூர், திருப்பூர் மாவட்டங்களையும் உள்ளடக்கிய தமிழகத்தின் மேற்குப் பகுதி இத்தகைய வரலாற்றுச் சிறப்புடையது.) மேலும், நாடெங்கிலும் உள்ள உழவர்களின் [நிலத்தடி நீரை உறிஞ்சும்] தேவைக்கு இவர்கள் செவி சாய்க்கின்றனர். உழவர்களின் கையறு நிலையையே அந்தத் தேவை சுட்டிக் காட்டுகிறது. ஆனால், [ஆழ்துளைக் கிணறு தோண்டும்] அந்தச் செயல்தொடரானது நாட்டு நிலத்தடி நீர் வளத்தைக் கடுமையாகப் பாதிக்கிறது. நாடெங்கிலும் நிலத்தடி நீர்மட்டம் பாதாளத்திற்குச் சென்றுவிட்டது. மராத்வாடா பகுதியில் துளைப்பான்கள் தொடர்ந்து பணியாற்றின என்று ஏற்கெனவே பார்த்தோம். அப்பகுதியல் உள்ள ஓசுமானாபாத் மாவட்டத்தில் சென்ற மார்ச் மாதம் நிலத்தடி நீர்மட்டம் கடந்த ஐந்தாண்டுச் சராசரியை ஒப்பிடுகையில் மேலும் ஐந்து மீட்டர் கீழே போய்விட்டதாக அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

தமிழகத்தின் ஒரு சிறு பகுதியில் இருந்து வரும் பத்தாயிரம் துளைப்பான்கள் இந்தியா முழுமையிலும் நாளொன்றுக்குத் தலா ஆயிரம் அடி துளைத்தால் அவை மொத்தம் ஒரே நாளில் ஒரு கோடி அடி துளைக்கின்றன! இதேபோல ஆண்டில் இருநூறு நாள்கள் வேலை செய்கையில் 200 கோடி அடி ஆழம் துளைக்கின்றன. இது மிக அதிக அளவிலான துளையிடலாகும். நிறைய துளைகளில் நீர் கிடைக்காவிட்டாலும் மொத்தத்தில் நிலத்தடி நீர் பெருமளவில் உறிஞ்சியெடுக்கப்படுகிறது என்பது தெளிவு. நாட்டை இத்தகைய மோசமான மேம்பாட்டுத் தடத்தில் இட்டுச் செல்லவேண்டும் என்பது திருச்செங்கோட்டுத் துளைப்பான் உரிமையாளர்களின் தேர்ந்தெடுப்பு அன்று. ஆகவே அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. இப்போது நாட்டில் நிலவும் கட்டற்ற துளையிடல், வரம்பற்ற நிலத்தடி நீர் சுரண்டல் ஆகியவற்றை அவர்கள் நம் மீது திணிக்கவில்லை. மேலும், திருச்செங்கோட்டினர் தாம் இத்துறையில் மிக அதிக அளவில் இருக்கின்றனர் என்ற போதிலும் நாட்டில் வேறு துளைப்பான் உரிமையாளர்களும் உள்ளார்கள். அது மட்டுமன்றி, துளைப்பான்களுக்கு வேறு வேலைகளும் உள்ளன.

இருப்பினும் அவை நிலத்தடி நீரை உறிஞ்சியெடுப்பதற்கே பெருமளவு பயன்படுத்தப்படுகின்றன. இவற்றின் எண்ணிக்கை அதிகமாவது [வரப்போகும்] பேரழிவு ஒன்றையே சுட்டுகிறது. (இந்தியாவின் பாசன நீர்த் தேவையில் மூன்றில் இரண்டு பங்கினையும் குடி நீர்த் தேவையில் ஐந்தில் நான்கு பங்கினைக் காட்டிலும் அதிகமாகவும் நிலத்தடி நீர் தான் நிரப்புகிறது.) [நிலத்தடி நீரை வரம்பற்று உறிஞ்சும்] இந்தச் செயல்தொடரைக் குமுகக் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும். ஆனால், இப்போதைய நீர்ப் பங்கீட்டு முறையில் இது நிறைவேறாது. உங்கள் பகுதியில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான துளைப்பான்கள்தாம் வேலை செய்கின்றன. இது ஏன் என்று இத்துறையில் மிகுந்த பட்டாங்கு உள்ள திருச்செங்கோட்டு உரிமையாளர் ஒருவரைக் கேட்டேன். “இங்கு இப்போது போதுமான நிலத்தடி நீர் இல்லை. அருகிலுள்ள ஈரோடு நகரில் இப்போது 1400 அடி ஆழம் வரை போய்விட்டோம்” என்றார் அவர்.

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org