தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

குமரப்பாவிடம் கேட்போம்


நம் வாழ்வில் கதர்


கடந்த முப்பது வருடங்களாக காந்திஜி கதரைப் போதித்து வருகிறார். நம் தேசப் பணியாளார்களில் பலர் இதன் விளைவாகக் கையால் நூற்றுக் கையால் நெசவு செய்த துணிகளை அணிந்து வருகிறார்கள். ஆனால் அதில் வெகு சிலரே இச்சின்னத்தின் முழுப் பரிணாமங்களை அறிகிறார்கள். பண்டித நேரு ஒரு மேடைப் பேச்சின் போது கதரை “விடுதலையின் ஆடை” என்று வருணித்தார். வேறு பலர் கதர் அணிவது ஒரு ஒழுக்கத்தின் சின்னம் என்று கருதுகிறார்கள். ஆனால் கதர் என்பது ஒரு வாழ்முறை என்று எத்தனை பேர் உணருகிறார்கள்? நம் சக மனிதனுடனான் நம் உறவு அகிம்சைக்கும், சத்தியத்திற்கும் உட்பட்டு இருக்க கதர் உறுதுணையாகிறது என்றும், இதுதான் கதர் அணிவதன் அடிப்படைக் கோட்பாடு என்றும் எத்தனை பேர் தெரிந்திருக்கிறோம்?

கதர் என்பது கையால் நூற்றுக் கையால் நெசவு செய்த துணிகளை அணிவது மட்டுமே ஆகாது. கதர் அணிவது ஒரு ஆழ்ந்த பொருளாதார சமூகத்தை உருவகப் படுத்துகிறது. ஒற்றுமையும், தன்னிறைவும் அடிப்படையாகக் கொண்ட, உற்பத்தி என்பது விற்பனைக்கு இல்லாது சுய நுகர்ச்சிக்காக உள்ள ஒரு மாற்றுப் பொருளாதாரம் இது. போட்டியும், பிடுங்கலும் கொண்ட, விற்பனைக்காக உற்பத்தி செய்யப் படும் தற்காலப் பொருளாதாரத்திற்கு நேர் எதிரானது இது (கதர்).

ஒற்றுமையாய்க் கூட்டுறவாய் வாழும் வாழ்க்கைக்கான சட்டங்களும், நெறிமுறைகளும் போட்டியிட்டுப் பிடுங்கும் வாழ்முறையில் இருக்கும் சட்டங்களும், நெறிமுறைகளும் மிகவும் மாறுபட்டவை. போட்டி வாழ்முறை, அதன் இயல்பான முடிவுக்குச் செல்லும்போது வலுத்தோர் த‌ழைக்க‌ , நலிந்தோர் விளிம்பிற்குத் தள்ளப்படும் ஒரு காட்டுமிராண்டி வாழ்முறைக்குக் கொண்டு விட்டு விடும். ஆனால் கூடிப் பகிர்ந்து வாழ்வதில் நலிந்தோர் பாதுகாப்பும் அக்கறையும் பெறுவர். நம் அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தே உற்பத்தி இருக்கும்; விற்பனைக்கு அல்ல. வாணிபம் என்பது நம் நுகர்ச்சி போக எஞ்சும் பொருட்களிலேயே இருக்கும்; அடிப்படைத் தேவைகளில் அல்ல. இவ்வகைக் கூட்டுறவு வாழ்முறை இறுதியாக சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்; போட்டியோ வெறுப்பு, பொறாமை மற்றும் சண்டையில் கொண்டுபோய் விடும்.

எனவே நாம் வாழ்வில் கதர் என்பதை உண்மையாக உணார்ந்தோமானால், நாம் நுகரும் எல்லாப் பொருட்களையும் நம் சுய முயற்சியால், உழைப்பால் நாமே நம் சொந்த நுகர்ச்சிக்காய் உற்பத்தி செய்து கொள்வோம். அத்தகைய வாழ்முறையில் போட்டியிடும் நிறுவனங்களின் பொருட்களை இறக்குமதி செய்யவோ, வாங்கவோ மாட்டோம்; கூட்டு முயற்சியால், தற்சார்பான உற்பத்திக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும். கதரை மட்டுமே அணியும் பொதுநல ஆர்வலர்களும், காங்கிரஸ்காரர்களும் கிராமப்புறத் தொழில்களுக்கு முன்னுரிமை கொடுத்து, லாபம், விலை போன்றவற்றை ஒதுக்குவர். விலை என்பது போட்டிப் பொருளாதாரத்துக்கே உரித்தான ஒரு உத்தி.

[எளிமையாகச் சொன்னாலும் இதில் மிக ஆழ்ந்த பொருள் இருக்கிறது. கதரை அணியும் ஒரு உழவன் தன் தேவைக்கான உணவைத் தயாரித்து எஞ்சுவதையே விற்பான். கதரை அணியும் ஒரு கிராமம், ஒற்றுமையாய்ச் சுய சார்படைந்து அதன் பின்னரே வாணிபத்தில் ஈடுபடும். உலக வாணிபமும் அதனால் விளையும் போர்களும் கூண்டோடு அழியும். உலக அமைதிக்கு ஒரு ஆலம் விதையாக நாம் கதரைக் கருத வேண்டும்! -ஆசிரியர்]

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org