தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

புதிய புலவர்கள் - பாபுஜி


புவி வெப்பமடைதல் (Global Warming) என்பது பெருமளவில் அனைவருக்குமே அறிமுகமான ஒன்று. கேள்விப்படாதவர்களுக்கு ரத்தினச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 14000 வருடங்களில் புவியில் மண், காற்று மண்டலம், கடலின் மேற்பரப்பு அகியவை 5 டிகிரி செல்சியஸ் அளவில் அதிகமாகியிருக்கிறது (1990 வரையில்). 1990லிருந்து வரப் போகும் 100 வருடங்களில் 1.5 முதல் 5 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகமாகலாம்!இவ்வெப்பமடைவதனால் ஏற்படக் கூடிய இயற்கைப் பேரிடர்களைப் பற்றியும், வேளாண்மையும், வாழ்வாதாரங்களும் எவ்வாறு பாதிக்கப்படும் என்பதையும் பற்றி டாக்டர். ஜீவா ஏற்கனவே தாளாண்மையில் எழுதி இருந்தார். இதன் காரணம் வாகனப் புகைகள், தொழிற்சாலைப் புகைகள் மற்றும் ஆற்றல் உற்பத்தி, மரங்களையும் காடுகளையும் அழித்து வேளாண்மை செய்வது என்பன போன்ற நாகரிக வாழ்முறைதான் என்பது அனைவருக்குமே தெரியும். எனினும் “மிடுக்கிலாதனை வீரனே, விறல் விஜயனே” என்று பரிசுக்காகப் புகழும் புலவர்கள் வரிசையில் இம்மாதம் Heratland Institute (ஹார்ட்லாண்ட் இன்ஸ்டிடியூட்) என்னும் ஒரு அறிவியல் ஆராய்ச்சிக் குழுவைப்பற்றிக் காண்போம்.

ஒரு இடத்தின் மையப்பகுதியை (அது ஒரு ஊராக இருக்கலாம், நாடாகவும் இருக்கலாம்) heartland (இதயப் பகுதி) என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த இதழில் அத்தகைய பெயர் கொண்ட ஒரு நிறுவனம் புவி வெப்பமயமாதலுக்கும் தொழிற்சாலைகளுக்கும் எந்த உறவும் இல்லை என்று மக்களை ஏய்ப்பதற்காக பன்னாட்டு நிறுவனங்களுடன் சேர்ந்து என்ன தில்லுமுல்லுகள் செய்திருக்கிறது என்று பார்ப்போம்.

Heartland Institute என்பது அமெரிக்காவில் உள்ள ஒரு அதிசக்திவாய்ந்த நிறுவனம். புவி வெப்பமயமாதலுக்கும் மனிதர்களுக்கும் (தொழிற்சாலைகளுக்கும்) எந்த உறவும் இல்லை என்றும், அது இயற்கைக்கு ஊறு விளைவிக்காது என்றும் மக்களை நம்ப வைக்க உலகின் சக்தி வாய்ந்த நிறுவனங்களின் நிதியுதவியினால் நடத்தப்படும் நிறுவனம் என்பது இந்த ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் வரை நம்மில் அநேகருக்கு தெரிந்திருக்காது. ஆம், அன்றுதான் டெஸ்மோப்ளாக் (www.desmoblog.com) என்ற வலைத்தளம் இந்த நிறுவனத்தின் உள் ஆவணங்களை இணையத்தில் கசிய விட்டது. மைக்ரோசாப்ட், டைம் வார்னெர், Pfizer, Nucor, மற்றும் பல பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து நிதி பெற்று 'புவி வெப்பமயமாதல் என்ற சித்தாந்தமே தவறு' என்பதை மக்களிடம் நிலை நாட்ட Heartland என்னவெல்லாம் செய்துள்ளது என்பதை இந்த ஆவணங்கள் புட்டு புட்டு வைக்கின்றன.

இந்த ஆவணங்களில் ஒன்று Heartland புவி வெப்பமயமாதல் கொள்கையை எதிர்க்கும் புகழ் மிக்க ஊடகங்கள், அறிவியலாளர்கள் மற்றும் வலைப்பூ எழுதுபவர்கள் (மொத்தத்தில் மக்களின் கருத்தை மாற்ற வல்லவர்கள்) ஆகியோருக்கு தான் பெற்ற நிதியை எந்த வழிகளில் பகிர்ந்தளித்திருக்கிறது என்பதை தெளிவாக்குகிறது. மற்றொரு ஆவணம் Heartland எவ்வாறு தம் கருத்துக்களை குழந்தைகளிடமும் கொண்டு சேர்ப்பதற்காக அவர்கள் கற்கும் பாடத்திட்டத்தையே மாற்றி அமைக்க முயன்று வருகிறது என்பதையும் தெளிவாக்குகிறது. ஆசிரியர்கள் பாடத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும் வருத்தத்தோடு அந்த ஆவணம் பதிவு செய்திருக்கிறது.

இவ்வாறு Heartland இன் குட்டு உடைபட்டதும் அது என்ன செய்தது?

ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல் அது அந்த ஆவணங்களை கையாண்ட ஊடகங்கள் அனைத்தையும் மிரட்ட தொடங்கியது (வழக்கு தொடங்குமாம்!). அவ்வாறு மிரட்டியே பல ஊடகங்களை அந்த ஆவணங்கள் பற்றிய செய்திகளை இருட்டடிப்பு செய்ய வைத்தது. எங்களிடம் இருந்து ஆவணங்களை திருடி விட்டார்கள் என்றும் அதில் ஒரு ஆவணம் தான் எழுதியதே அல்ல என்றும் ஓலமிட்டது. நிகழ்வில் Heartland இல் பணி புரியும் (பெயர் வெளியிட விரும்பாத) ஒருவர், Heartland இல் சில காலம் தொடர்புடனிருந்த ஒரு அறிவியலாளருக்கு (பீட்டர் கிளீய்க்) மேற்குறிப்பிட்ட ஆவணங்கள் அனைத்தையும் அஞ்சலில் அனுப்பி உள்ளார். இவை இணைய தளத்தில் வெளியான சில நாட்களில் அந்த அறிவியலாலரே முன்வந்து அதை இணையத்திற்கு அனுப்பியது தான்தான் என்று தெரிவித்தார். உடனே Heartland என்ன செய்தது தெரியுமா? அந்த அறிவியலாளர்தான் விவாதத்துக்குரிய ஒரு முக்கியமான ஆவணத்தையே எழுதியவர் என்றும் அதில் உள்ள கருத்துகள் வெவ்வேறு நேரங்களில் நடந்த வெவ்வேறு கடிதப்பரிமாற்றங்களில் இருந்து இந்த ஆவணத்தில் கோர்வையின்றி தொகுக்கப்பட்டு (out of context) வெளியிடப்பட்டுள்ளதாகவும் அறிவித்தது.

அந்த அறிவியலாளரின் செயல்களை சாடுவது மற்றும் அவரின் நம்பகத்தன்மையை குறைப்பது மட்டுமே அதன் குறிக்கோள். ஆறு முன்னோடி அறிவியலாளர்கள் கொண்ட ஒரு குழுவும் Heartland சார்பாக உடனே ஒரு 'திறந்த கடிதம்' (open letter) எழுதினர்!

அந்த அறிவியலாளரோ தன பங்கிற்கு அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மையை போதிய ஆதாரங்களுடன் நிரூபித்தார். அதையும் desmoblog வெளியிட்டது.

ஆய்வுக்குழுக்கள் பல Heartland இன் ஓலங்கள் தவறு என்று தனித்தனியே பலமுறை நிரூபித்த போதும், (அதன் பிறகு) ஒவ்வொரு முறையும் Heartland பற்றிய தகவல்கள் இணையத்தில் கசியும்போதும் அது கூப்பாடு போடத்தவறுவது இல்லை.

இந்த தகவல்களை இணையத்தில் கசிய விட்ட desmoblog 'திருடப்பட்ட செய்திகளை வெளியிடுவது நல்லதொரு செயல் இல்லை என்றாலும் Heartland எந்த அளவுக்கு தன்னையும் தன கொள்கைகளையும் தற்காத்துக்கொள்ள முயல்கிறது என்பதை இது தெளிவு படுத்துகிறது' என்று தெரிவித்துள்ளது.

ஒரு தவறான கொள்கைக்கு விலைபோவது, அதை அப்பாவி மக்கள் மீது எந்தெந்த வழிகளில் திணிக்கமுடியுமோ அத்தனை வழிகளையும் கையாளுவது, எதிர்ப்பவர்களை அடக்குவது என்று கூத்தாடும் இத்தகைய நிறுவனங்களை ஆட்டுவிக்கும் ( நிதி மிகுந்த, பொருளீட்டுவது மட்டுமே குறிக்கோளாக கொண்ட) பன்னாட்டு நிறுவனங்கள் இருக்கும் வரையில் நம்மைப்போன்ற ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்வோம்… (bt விதைகளால் பாதிப்பு என்று நாம் கொடி பிடித்துக்கொண்டிருக்கும் போதே சத்தமின்றி பல வகைகளில் bt விதைகளை நம் மீது திணிக்கும் நம் அரசு நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல! - நாம் உண்ணும் இட்லியிலும் bt இன் தாக்கம் உள்ளதாம்!!).

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org