தாளாண்மை என்னும் தகைமைக்கண் தங்கிற்றே வேளாண்மை என்னும் செருக்கு!
 

தலையங்கம்

போகாறு அகன்ற கதை!


திடீரென்று நம் நாட்டின் நாணயமான ரூபாய் கடும் வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. 1985ல் ஒரு அமெரிக்க டாலர் 12 ரூபாய்களுக்குச் சமமாக இருந்தது. 1991ல் ஏற்பட்ட கடுமையான அந்நியச் செலாவணிப் பற்றாக்குறையின் போது அது 17.90 ஆனது. 1993ல் சீர்திருத்தம் என்ற பெயரில் நம் சந்தை அந்நிய முதலீட்டிற்குத் திறந்து விடப்பட்டபோது 1 டாலர் - 31.37 ரூபாய் ஆனது. பின் 2000-2010 வரை 40 முதல் 50 ரூபாய் என்ற அளவில் ஏறி இறங்கிக் கொண்டிருந்தது. கடந்த 2 வருடங்களில் மிகக் கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து இக்கட்டுரை அச்சேறும் போது 63 ரூபாயைத் தாண்டி விட்டது ஒரு டாலரின் மதிப்பு. ஆனால் இது திடீரென்று ஏற்பட்டதல்ல. GDP என்று சொல்லப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகமானால் அது பொருளாதார வளர்ச்சியாகக் கருதப்படுகிறது. ஏற்றுமதியை அதிகரிக்கிறோம் அதனால் பொருளாதாரம் வளரும்; அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம் அதனால் உள்நாட்டு உற்பத்தி கூடும், வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்பது நம் அரசின் பொருளாதாரக் கொள்கையாய் இருக்கிறது. ஆனால் உண்மை என்ன?

Balance of Payments (BoP) என்று சொல்லப்படும் ஒரு நாட்டின் நிகர வருமானம்தான் அதன் நாணயத்தின் சர்வதேச மதிப்பை உண்மையில் நிர்ணயிக்கிறது. BoP என்பது, எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், ஒரு நாட்டின் மொத்த ஏற்றுமதியில் அதன் மொத்த இறக்குமதியைக் கழித்தால் வருவது - அதாவது வரவில் செலவு போக எஞ்சுவது. (இதில் அந்நியக்கடன் அடைத்தல், அந்நிய முதலீடு போன்ற பல விடயங்கள் கணக்கிடப் பட்டாலும் நம் புரிதலுக்கு இது போதும்). இந்தியாவின் வியாபாரப் பற்றாக்குறை (trade deficit) 2011ம் ஆண்டு 154.4 பில்லிய‌ன் அமெரிக்க டாலர்கள் - கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி ரூபாய். அதாவது நாம் வீராவேசமாக வரிந்து கட்டிக் கொண்டு ஏற்றுமதி செய்து ஈட்டும் பணத்தை விட 10 லட்சம் கோடி ரூபாய் அதிகமாக இறக்குமதி செய்கிறோம் ! நம் நாணயத்திற்கு மதிப்புக் குறைந்து கொண்டே போவதற்கு மூல காரணம் இதுதான். ஒவ்வொரு வருடமும் நம் ஏற்றுமதி 15 முதல் 20% வளர்கிறது. இறக்குமதியோ 35% அதிகமாகிறது! நம் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் போது நம் BoP வெறும் 42 கோடிதான். (இன்றைய மதிப்பில் சுமார் 1200 கோடி - இன்றைய BoPயில் 0.1 % அளவே!).

இதன் அடித்தளமான காரணிகள் மூன்று. முன்னர் மையப் பொருளாதாரம் என்ற பெய‌ரில் நேரு ஆரம்பித்து வைத்த இயந்திர மயமாக்கல் - இது பெருமளவு அயல்நாட்டுத் தொழில்நுட்பம், இயந்திரங்கள் என இறக்குமதிக்கு வழி வகுத்தது. இரண்டாவது அந்நிய முதலீட்டுக்கு நம் கதவைத் திறந்து விட்டது - இது பாமர நுகர்வோரின் பணத்தை ஏற்றுமதி செய்து அடிப்படைப் பொருட்களை இறக்குமதி செய்ய வழிகோலியது. மூன்றாவது கண்ணுக்குத் தெரியாதது: கட்டுமானத் திட்டங்களுக்காய் உலக வங்கியிலும், IMF இலும் கடன் வாங்கிப் பதவியில் இருப்போர் 10% - 20% என்று சுரண்டும் ஊழல். இதை மூன்றையுமே விடுவதற்குப் பதவியில் உள்ளோர் யாரும் தயாரில்லை. இப்போது நம் பொருளாதாரத்தைக் காக்க ஒரே வழி சிறு தொழில்கள் சார்ந்த, (உள்ளூர் மூலப் பொருட்கள், தொழில்நுட்பம் ஆகியவற்றால் ஆன‌ ) உற்பத்தியும், ஊழல் குறைந்த ஆட்சியுமே. சிக்கனமும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதும், சுரண்டல் ஒழிப்புமே நம்மைக் காக்கும். நம் நாட்டில் இல்லாத வளமே இல்லை. ஏற்றுமதி வருமானத்தை நாம் எதிர்பார்க்கவே தேவை இல்லை. இறக்குமதியைக் குறைத்தால் போதும். வள்ளுவர் அழகாய்ச் சொன்னது போல் “ஆகாறு அளவிட்டிதாயினும் கேடில்லை; போகாறு அகலாக் கடை”

வருடம் 35% வளர்ச்சியுடன் நம் போகாறு அகன்று கொண்டே போகிறது. வளர்ச்சி, வளர்ச்சி என்று கடனிலா வளார்வது? - இறப்பதற்குள்ளாவது விழிப்போமா?

 
தற்சார்பு இயக்கம்

நவீன வாழ்முறையில் வெற்றிடம் பெருகும் சூழலில், மாற்று வாழ்முறையில் விடைகளைத் தேடும் ஒரு சார்பற்ற இய‌க்கம்

மேலே அறிய‌ »
நிதி மிகுந்தவர்...

பொற்குவை தர விரும்புவோர் கீழுள்ள வங்கிக் கணக்கில் கட்டலாம்!

மேலே அறிய‌ »
தொடர்பிற்கு...

எங்களுடன் இணைந்து பணியாற்ற விழைவோர், கீழுள்ள‌ முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

Phone: +91 4364 271190
Email: info@kaani.org